பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களால் ‘குருதேவர் அறிக்கை’ வாயிலாகவும், ஏராளமான விளக்க அறிக்கை வாயிலாகவும் அருளுலக இருட்டடிப்புக்கள் வெட்டவெளிச்சமாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரியதொரு முயற்சியாகவே பதினெண்சித்தர்களின் திருவாசகம் வெளிவருகின்றது.
தேவாரம் பாடிய நால்வரில் மறவேள்வி நடத்தி சித்தர் நெறியான இந்துமதத்தை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்டிய ‘திருஞானசம்பந்தர்’ வட ஆரியரல்ல என்ற பேருண்மையையும்; அத்வைதத்தை உருவாக்கிய ‘ஆதிசங்கரர்’ அவர்களும் வட ஆரியரல்ல! தமிழரே! என்ற பேருண்மையையும் தமிழர்கள் முதற்கண் உணர வேண்டும்.
ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரின் ஆசியோடு புறப்பட்டு; சைவமதமாம் சித்தர் நெறியின் உண்மைகளை நிலைநாட்டிட மதுரை மாநகர் சென்று சமணர்களுடன் அனல்-புனல் வாதத்தில் வென்றார். தோற்ற சமணர்கள் தாங்களாகவே மனம் இறுகி கழுவில் ஏறி இறந்தனரே அன்றி! வட ஆரியர்கள் கூறுவது போல் சம்பந்தரோ, பாண்டிய மன்னனோ சமணர்களைக் கழுவில் ஏற்றவில்லை. சமயக் குறவர்களான நால்வரிலே மணிவாசகர், சுந்தரர் மற்றும் நாவுக்கரசரை விட இந்துமதம் தழைத்தோங்க, உண்மையும் சத்தியும் உடைய இந்துமதப் பயன்கள் உலகறியச் செய்யக் கிடைத்திட்ட பெரிய அரிய வாய்ப்பை மதுரையிலே சம்பந்தர் பயன்படுத்திக் கொண்டார்.
பதினெண்சித்தர்கள் படைத்த வகுத்திட்ட மதங்களில் ஒன்றாக சமண மதம் இருந்தபோதிலும்; தற்போது இந்துமத மடாதிபதிகள் எவ்வாறு செயலற்று; உண்மையான பூசை, தவம், வேள்வி, யாகங்களில் முறையான பயிற்சியற்று கற்பனையில்-மடமையில் …. மூழ்கியிருக்கின்றனரோ அவ்வாறுதான் அருக மதத்தின் அருளாளர்கள் அப்போது சோம்பி, பயிற்சியற்று இருந்தனர். எனவேதான், திருஞானசம்பந்தரின் அருட்தன்மையை உணரக் கூட முடியாமல் வாதிட்டுத் தோற்றனர். இந்துமதமும் தழைக்கத் துவங்கியது.
ஆனால், நால்வர் உட்பட அறுபத்து நான்கு நாயன்மார்களில் சொல்லடி நாயனாரைத் தவிர வேறு எவரும் ஆரியரின் வருகையால் பதினெண்சித்தர்களின் இந்துமதத்திற்கு ஏற்படுத்தப் பட்ட நலிவை, இழிவை கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ முயலவில்லை. தந்தை பெரியார் ஒருவர்தான் இம்மாபெரும் பணிக்கு தனியொரு மனிதனாக நின்று போராட்டத்தைத் துவக்கினார். அம்மாபெரும் பணியினைத் தொடரும் வகையில் ஒன்றாகத்தான் உண்மையான ஞானசம்பந்தரின் அருளுலக வீர வரலாற்றை கவிதை வடிவில் இங்கே தருகின்றோம். இக்கட்டுரையே திருவாசகத்தின் முன்னுரையாய் தருகின்றோம்.
இப்பேருண்மையின் அடிப்படையில்தான் இந்துமதத்தின் மூலவர்களான ‘தமிழர்கள்’ உண்மையான மதவிழிச்சியும், தன்மான எழுச்சியும், தன்னம்பிக்கைச் செழுச்சியும், இன ஒற்றுமையும், மொழிப்பற்றும் பெற்று எழுச்சி பெற்றிட முடியும்.
பதினெண்சித்தர் திருவாசகம் படிக்க இங்கே தொடரவும்.