எண்ணியே ஆயகலை நிலைக்கே ஒருவர் குறையாக
கண்மணியாம் இந்துமதம் காக்கப் போரிட்டவர்
திண்ணிய அருட்சத்தி மீக்கூறப் பெற்ற
தண்டமிழ் பாவாணர் நாயன்மார்கள் புகழுரைப்போம்.
வேண்டிய வரம்தரு சுடலையாண்டி பத்தர்களே
மண்டிய மடமைவளர் புத்தர் அமணரோடு போரிட்டார்
கொண்ட பத்திக் கடலில் ஆழ்ந்தவரே ஆழ்வார்கள்
விண்டிவர் விவாதப் போர் நாடித் தேடாது பத்தியிலாழ்ந்தனர்.
விண்ணார்ந்த புகழ் அறுபத்து மூவரில் சமயக்குரவரே
நுண்ணிய அருட்போரில் இருளகற்றி ஒளியேற்றினர்
பண்ணுக்குரிய பாடல்களால் பரமசிவனை வென்றனர்
சுந்தரர் உலகியலை வென்று அருளாட்சி செய்தார்
திருநாவுக்கரசர் சூதுச் சமணரை வென்று அருளாட்சி செய்தார்
திருஞானசம்பந்தர் வாதுச் சமணரை வென்று அருளாட்சி செய்தார்
மாணிக்கவாசகர் விவாதப் புத்தரை வென்று அருளாட்சி செய்தார்
தெய்வத் தமிழால் அருளாட்சி புரிந்த இச்சமயக்குரவரில்
பாலுணவுண்ட பாலகனாய்ப் பத்திப் பணிக்குப் புறப்பட்ட
வேலுடையண்ணல் குலத்து அந்தணன் சீர்காழி
சிவபாத இருதயச் சித்தன் மகன் ஞானசம்பந்தன்
செந்தமிழ்ச் சந்திர குலத்து வேதியன் மறையோன்
பைந்தமிழ் முறையோன் நெறியோன் குருக்கள் மகன்
வெந்தழல் கூத்தன் மனைவி தந்த அமுதுண்டவன்
பைந்தமிழுக்கு இசைப் பேரிலக்கியம் தந்த வள்ளல்
மாறா இளையோனாய் வேறுலகம் சென்ற திருஞானசம்பந்தன்
தமிழால் பதினெண்சித்தர் படைத்த இந்துமதம் காத்தே
தமிழ்க்குடி மிடிமை அடிமை மடமை போக்கினான்
வித்தகத் தமிழில் இசையோடு தத்துவத் தேவாரம்
சித்திரமாய்ப் படைத்த தமிழ்ச் சித்தன் திருஞானசம்பந்தன்
எத்திற மெல்லாம் கூறியும் நாவுக்கரசர் வாழ்த்தோடு
நேத்திறச் சித்திர மதுரை மங்கயர்க்கரசி அன்புக்கு
உத்திறவாதமிட்டு அமணர் அனல் புனல் வாதத்துக்கே
சூத்திறத் தமிழாய்த் திருஞானசம்பந்தன் புறப்பட்டான்
அத்திறமாய் ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி கண்டு
தோத்திற முடித்துச் சத்திரத்துத் தங்கச் சமணர்
உத்தியால் நெருப்புற்ற சத்திரத்து வெப்பமே
சாத்திறச் சம்பந்தன் ஆணையால் பாண்டியனுக்கு நோயாயிற்று
ஆத்திறச் சமணரின் அரும்பாடு வெப்பகற்றவில்லை
சூத்திரச் சமணரின் சமசுக்கிருதம் செத்தது புரிந்தது
தோத்திரச் சம்பந்தனின் அமுதத் தமிழ் வென்று நின்றது
பாராளும் வேந்தன் பாதியுடல் வெப்பால் பதைத்தது
போரிட்ட சமணரை வெகுண்டே சம்பந்தன் அடிபணிந்து
நீரிட்டவுடனே எரிச்சல் தணிந்து நேருற்றான் பாண்டியன்
மீறிட்ட சமணரோடு சம்பந்தனைப் போரிட வேண்டினான்
யாரிட்ட சாபம் அந்த வெப்புநோய் என்பதற்கே விளக்கம்
கோரிட்ட குலச்சிறை மங்கையர்க்கரசி விடைபெறவே
தமிழால் இறையாற்றல் நிலைநாட்டி விளக்கிட
தமிழந்தணன் சமசுக்கிருதப் பிணநிலை மெய்ப்பித்தான்
விரிசடைக் கடவுளின் நமச்சிவாய நற்றமிழ்
எரிதழலில் பனையேட்டில் பொறித்திடச் சாமங்கள்
விரைந்தோடியும் சாம்பலாகா நிலைகண்டே வெட்கினர்
தேரைமொழிச் சமசுக்கிருத எண்ணாயிரச் சமணர்
தவறு ஐயம் போக்கவே தமிழ்முனி திருஞானசம்பந்தன்
தழலில் தளர்நடையிட்டுத் தண்டமிழ் ஏடெடுத்து
அனல்வாதம் வென்ற கன்னித் தமிழ்ப் பனையேட்டை
அமணர் காணவே கடவுளுணர்ந்த பாண்டியன்
தண்டமிழ் திருக்கரத்தில் வழங்கினான் திருஞானசம்பந்தன்
கண்டதை விண்டுணர முடியாக் கருத்தழிவில்
மாண்டிடத் துடித்த அமணர் புனல்வாதம் நாடினர்
ஆடிப் பெருவெள்ளம் அமணர்க்கு நல்ல வெற்றியே
தேடித் தருமென அனைவரும் எண்ணியே கலங்கிட
சூடிய பிறையோன் குலத்து ஏந்தரீகம் தாந்தரீகம்
நேமநியம நிடதநிட்டை சுருதிஆரண ஆகமமீமாம்சை
பத்தினும் வல்லியாய்த் திருஞானசம்பந்தன்
சூரிய குலத்து ஓம ஓக யாக யக்ஞ வேள்வித் தவ
ஞான மாந்தரீக எட்டு வல்லிகளையும் போற்றியே
அண்டபேரண்டமாளும் கடவுட் தமிழை எழுதிய பனையேட்டை
படகோரும் கரையோரப் பரியோரும் காணவே
வையை மைய மண்டபத்துப் படிதவழ் நீரில் விட்டான்
பொய்யாத் தெய்வத் தமிழ் அந்தணன் மகன்
திருஞானசம்பந்தன் போற்றி வாசகம் வாக்கு முழக்கியே
அருளுலக இருளகற்றும் திருவிழாவே நிகழ்ந்ததன்று
நீருள் மூழ்கிய ஏடு கண்டு கொக்கரித்த சமணர்
வீரிட்டலற விரைந்தே வெளிப்போந்த தமிழேடு
நேரிட்டனைவரும் காண ஆற்று நீரை எதிர்த்தது
போரிடப் புறப்பட்ட அம்பெனத் தமிழ்முனியின் ஏடு
பரியோரும் படகோரும் தொடரத் திருவேடகம்
நெறியோடு சென்று நின்றது சம்பந்தன் வேண்டுதலால்
நீரின் மேல் நடந்தான் அருளாட்சித் தமிழ்முனி
திருஞானசம்பந்தன் விரைந்தே! விரைந்தே! விரைந்தே
ஒருகுடைக் கீழ் உலகாளும் இந்துமதம் உணர்த்தவே!
நெருப்பால் எரியாது நீரில் வெல்லப்படாததுமாக
அருளூறு அமுதத் தமிழின் இறைமாட்சி ஏடு
நீரினின்று திருஞானசம்பந்தன் கையோடிப் புகுந்ததே
கரைசேரச் சம்பந்தன் கட்டித் தழுவ இலிங்கமொன்று
விரைவாகவே தரையுள்ளிருந்து வெளிப்பட்டு நின்றது
தரையோடு தன்னுடல் கிடத்தித் தண்டமிழ் முனி
நிறைவான இறைவழிபாட்டைச் சித்தர் நெறிப்படி
கருவாக்கு கருவாசகம் குருவாக்கு குருவாசகம்
தருவாக்கு தருவாசகம் திருவாக்கு திருவாசகம்
அருள்வாக்கு அருள்வாசகம் மருள்வாக்கு மருள்வாசகம்
ஓதியும் வாசித்தும் ஒருசாமம் முறையே நிறைவு செய்தார்
குறைமனச் சமணர்கள் அதற்குள் கழுவிலேறிக்
குருதிகொட்டி இறுதி செய்தார் சமசுக்கிருத இருளுக்கு
குமரனும் இராமனும் கண்ணனும் குருதி கொட்டியே
புரிந்த மறவேள்வியோடு ஒக்குமே இதுவும்
விரிந்த செய்தியோடு தத்துவம் திருஞானசம்பந்தன்
பாடலிலும் பிற அடியவர் ஏட்டிலும் காணலாம்
சரித்திற ஒப்புதல் வரலாறு குருபாரம்பரியமே கூறும்.
- முற்றும்
குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார், பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரியத்திலிருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளையின் எழுத்துக் குவியல்களிலிருந்து எடுக்கப் பட்டது.
“பண்ணார்ந்த சம்பந்தன் பைந்தமிழ் ஏடு
பொன்னென அனலில் ஒளிவிட்டு நின்றே
விண்ணார்ந்த இந்துமதமும் அருளமுதத் தமிழும்
தண்பொழிலாய்ச் செழித்து வளர்ந்தன வாழ்ந்தன”
“நற்றமிழ் சம்பந்தன் தெய்வவாசக ஏடு
நாற்றிசையோர் காண நாகமென எழுந்து
ஆற்றில் நீந்தி வென்று ஏடகத்தே நின்றது
போற்றியே தமிழும் இந்துமதமும் செழித்தன”
குறிப்பு:- திருஞானசம்பந்தரைப் பற்றிய குருவாசக வரிகள் இவை குருபாரம்பரியத்திலிருந்து எடுக்கப் பட்டவை.
எழுதியவர்:- சித்தர் காக்கையர் ம.பழனிச்சாமி பிள்ளை