Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • தமிழ்மொழி>
  • உலக ஆன்மீக விடுதலை
  • உலக ஆன்மீக விடுதலை

    உலக ஆன்மீக விடுதலை

    தமிழர் மத விடுதலையே உலக ஆன்மீக விடுதலை

    தமிழினப் பெருமைகளுள் சில:-

    1. தமிழினம்தான், இம்மண்ணுலகில் தோன்றிய முதல் இனம், மூத்த இனம்.
    2. இம்மண்ணுலகுக்கு அடிக்கடி அண்டபேரண்டங்களிலிருந்து வந்து சென்று; இம்மண்ணின் ஈசர்களான (தலைவர்களான மண் + ஈசன் = மணீசன்) ‘மணீசர்’களை பண்படுத்தி ‘மனிதர்’களாக்கிய பதினெண்சித்தர்களும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை வழிபடுநிலையினர்களும், நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களும் … இம்மண்ணுலகில் முதன்முதல் தோன்றிய இனமான தமிழினத்தையே ‘அருளுலக மூலமாக’, ‘அருளுலக முதலாக’, ‘அருளுலக விதைப்பண்ணையாக’, ‘அருளுலக வாரிசாக’ என்றென்றும் விளங்கிடத் தேர்ந்தெடுத்து வாழ்த்தி அருளினார்கள். எனவே, இம்மண்ணுலகில் “அருளுலகுக்கே உரிய இனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தமிழினம்தான்”.
    3. இம்மண்ணுலகின் தெய்வீக இனமான தமிழினம், என்றென்றும் விடுதலையுடையதாக; தன்மானம் மிக்கதாக; தன்னம்பிக்கை நிறைந்ததாக; வளமான ஒற்றுமையுடையதாக என்றென்றும் காக்கப்பட்டேயாக வேண்டும்.
    4. தமிழினம்தான் அருளுலகத்தின் அனைத்து வகையான மானுட இன உய்வுப் பிறச்சினைகளுக்கும், உயர்வுப் பிறச்சினைகளுக்கும் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக… இருக்கமுடியும்.
    5. பதினெண்சித்தர்கள் தங்கள் சொந்த இனமான தமிழினத்திற்காக மட்டும் செயல்படக் கூடிய குறுகிய இனவெறியர்கள் அல்லர் என்பதை விளக்கிட; பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குருபாரம்பரிய வாசகத்தைக் குறிப்பிடுகிறோம்.

    “… இம்மண்ணுலகின் அருளுலக மூலவர்களாகவும், காவலர்களாகவும் இருக்கின்ற செந்தமிழர்கள் தங்களுடைய சொந்த இனத்தின் அருமை, பெருமை, உரிமை, அரிய தெய்வீகத் தன்மை… முதலியவைகள் எல்லாம் தெரியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்களே என்ற ஆதங்கத்தால்; இவர்களின் இன விடுதலைக்காகத்தான் யாம், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தையும் அதன்கீழ் நாற்பத்தெட்டு வகையான நிறுவன நிருவாகங்களையும் உருவாக்குகின்றோம்.

    “ஏனென்றால் இந்தத் தமிழின விடுதலைதான் உலக இனங்களின் விடுதலையையும், உலக மதங்களின் விடுதலையையும், உலக மொழிகளின் விடுதலையையும், உலக மானுடப் பண்பாட்டின் விடுதலையையும் உருவாக்கித் தரும். மானுடர்க்குள் எதன் பெயராலும், எவரையும், யாரும் அடிமைப்படுத்தக் கூடாது, சுரண்டக் கூடாது, ஏமாற்றக் கூடாது என்பதுதான் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத் தத்துவமும் சித்தாந்தமும் ஆகும்.

    “அதனைச் செயலாக்குவதற்காகத்தான் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு இயக்கம் என்றும், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கும் இயக்கம் என்றும் … இந்து மறுமலர்ச்சி இயக்கம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று; பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகிய யாம் குருவாணையிட்டே இக்குருபாரம்பரிய வாசகத்தை எழுதுகின்றோம்.”

    தமிழ்மொழிப் பெருமைகளுள் சில:-

    1. இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால் பேசப்படுகின்ற மொழிகளிலேயே முதல்மொழியாக அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக (அனைத்து மொழிகளின் ஒலிகளையுடைய ஒரே மொழியாக) விளங்குவது இத் தமிழ்மொழிதான்.
    2. இத் தமிழ்மொழியில்தான் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து என்று பல்வேறு வகையான எழுத்துக்கள் இருக்கின்றன.
    3. இந்தத் தமிழ்மொழிதான் பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் எழுத்து மொழியும் (The Literary Language or Diction), பேச்சுமொழியும் (The Conversational Language or Diction) ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருக்கின்றது.
    4. இந்தத் தமிழ்மொழியில்தான் ஆரம்பக் காலம் முதல் இன்றுவரை இடைவிடாமல் தொடர்ந்து அருளாளர்கள் தோன்றி அருளூறும் வாக்குகளையும், வாக்கியங்களையும், வாசகங்களையும் வழங்கி வருகிறார்கள்.
    5. இந்தத் தமிழ் மொழிதான் ‘அருள் மொழி’, ‘ஆண்டவர் மொழி’, ‘இறை மொழி’, ‘உயிர் மொழி’, ‘உயிர்ப்பு மொழி’, ‘எல்லா மொழி’, ‘கடவுள் மொழி’, ‘தெய்வ மொழி’, ‘தேவ மொழி’, ‘மாறாத இளமையுடைய கன்னி மொழி’, ‘அமுதத் தமிழ் மொழி’, ‘செந்தமிழ் மொழி’, ‘பைந்தமிழ் மொழி’, ‘வண்டமிழ் மொழி’ என்றெல்லாம் பாராட்டப்படுகிறது.
    6. இந்தத் தமிழ்மொழிதான் பதினெண்சித்தர்களால் ‘அண்டபேரண்டமாளும் அருளுலக ஆட்சிமொழி’ என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

    தமிழர் மதமான இந்துமதப் பெருமைகளுள் சில:-

    1. தமிழர்களின் மெய்யான இந்துமதத்தில்தான் மனிதன் கடவுளாகும் வழிவகைகள் இருக்கின்றன.
    2. தமிழர் மதத்தில்தான் மனிதப் பிறவி புனிதப் பிறவியாக நினைத்துப் போற்றப் படுகின்றது.
    3. தமிழர் மதத்தில்தான் பெண்களுக்கு எல்லாவகையான மதிப்பும், மரியாதையும், உரிமையும் தரப்பட்டு அவர்கள் தெய்வங்களாகவே போற்றப் படுகின்றார்கள்.
    4. தமிழர் மதத்தில்தான் எல்லாவகையான பயிரினங்களும், உயிரினங்களும் கடவுளாக்கப் பட்டுப் பயன்படுத்தப் படுகின்றன.
    5. தமிழர் மதத்தில்தான் அனைத்துவகையான சாபங்களுக்கும், பாவங்களுக்கும், தவறுகளுக்கும், தீய செயல்களுக்கும் பரிகாரங்கள் இருக்கின்றன.
    6. தமிழர் மதத்தில்தான் விரும்பியவர்கள் விரும்பிய கடவுள்களை, விரும்பிய விதத்தில், விரும்பியபோது மட்டும் வழிபட்டுப் பூசைசெய்து கொள்ளலாம் என்ற தனிமனிதச் சுதந்திரம் இருக்கின்றது.
    7. தமிழர் மதத்தில்தான் இம்மண்ணுலகிலுள்ள அனைத்து மதங்களையும், மதத் தலைவர்களையும், மத வழிபாட்டு நிலையங்களையும், மத நூல்களையும் இழிக்காமல், பழிக்காமல், எதிர்க்காமல், அழிக்க முற்படாமல் ஏற்றுப் போற்றும் பண்பாடும், தத்துவமும், சித்தாந்தமும் இருக்கின்றன.
    8. தமிழர் மதத்தில்தான் பத்தர்கள் அல்லது பத்தியாளர்கள் கடவுளைத் தங்களுடைய தாயாக, தந்தையாக, காதலனாக, காதலியாக, சேவகனாக, சேவகியாக, தோழனாக, தோழியாக, அடிமையாக … முதலிய எல்லா நிலைகளிலும் நினைத்து வழிபட்டிட உரிமை இருக்கின்றது.
    9. தமிழின மொழிமத விடுதலை இயக்கம்தான் எல்லாக் கட்சிக் காரர்களையும், எல்லா இயக்கத்தவர்களையும் தம்மோடு இணைத்து ஒற்றுமையோடும், ஒருமைப்பாட்டோடும் செயல்பட்டிடும். இதன் தலைமையில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டேயாக வேண்டும்.

    குறிப்பாக, மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும்தான் இன்றைக்குத் தமிழர்களிடையில் பெரிய சிறிய பிரிவுகளும், போட்டா போட்டிகளும், போட்டி பொறாமைகளும், வெறிச் செயல்களும், நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை யெல்லாம் முறியடிக்க வேண்டுமென்றால்; தமிழர்களுக்குத் தமிழ்மொழி யுணர்வும், தமிழின உணர்வும், தமிழர் மத உணர்வும் ஏற்பட்டுத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்படக் கூடிய பொற்காலம் உருவாக வேண்டும். அந்த நற்காலத்தை உருவாக்குகின்ற ஆற்றல் ‘தமிழின மொழி மத விடுதலை இயக்கங்கள்’ என்ற முப்பெரும் இயக்கங்களின் முக்கூட்டு அமைப்பிற்குத்தான் உண்டு.

    ஏனென்றால், தமிழர்களுக்குத் தன்மான உணர்வு, தன்னம்பிக்கை உணர்வு, இனமான உணர்வு, இனப்பற்றுணர்வு, பண்பாட்டுணர்வு, நாகரீக ஈடுபாட்டுணர்வு, தமிழிலக்கிய உணர்வு, தமிழ் சார்ந்த கலைகளின் மீது பற்றுணர்வு, … எனப்படும் இன்றியமையாத உணர்வுகள் நன்கு கிளைத்துச் செழித்து வளமாக வளர்ந்து கொழுத்த பயனைத் தரவேண்டும். அதற்கு, அவர்கள், சாதி வெறியையும், அரசியல் கட்சிவெறியையும், பிற மத வெறிகளையும் வென்றாக வேண்டும். அதற்கு அவர்களுடைய அறிவுநிலையில் மிகுந்த தெளிவும், வலிவும், பொலிவும் ஏற்பட வேண்டும்.

    அதாவது, ‘சாதி என்பது ஆதியிலிருந்து இல்லை’; சாது + ஆதி = சாதி –> சாதுக்களாக வாழ்ந்த பெரியவர்களின் வழித் தோன்றல்கள் தங்களைத் தனித்தனி சாதிகள் என்று பிரித்துக் கொண்டு வாழ்ந்ததால் சாதிகள் உண்டாயின. எனவே, சாதியின் பெயரால் விளையும் அனைத்து வகையான சண்டை சச்சரவுகளும், வேற்றுமைகளும் பயனற்றவையேயாகும்.

    இதேபோல், மனிதனை ஆதியில் விலங்கு நிலையிலிருந்து அழகிய, இனிய, அன்புநிறைப் பண்புகளைப் பெற்ற மனிதனாக்கியதுதான் இந்துமதம். இது ஒரு சமுதாயத் தத்துவம். இந்தத் தத்துவம்தான், (இந்துமதம்தான்) மனிதர்களை ஒற்றுமையோடும், ஒருமைப்பாட்டோடும், பற்றோடும், பாசத்தோடும், அன்போடும், இனிமையோடும், உறவுகளையும், உரிமைகளையும் மதித்து வாழச் செய்திடும். தமிழ்மொழிக்குத்தான் மானுடர்களைப் படிப்படியாக எல்லாவகைகளிலும் நிலைகளிலும் உயர்த்தித் தெய்வங்களாகவும், தேவர்களாகவும், கடவுள்களாகவும் ஆக்கிட முடியும்; உலக மொழிகள் அனைத்திற்கும் நல்லுறவையும், பெருமைமிகு உரிமையையும் காத்துத் தர முடியும்.

    தொடர்புடையவை: