சிவபெருமான் ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்பதால், அவர் ‘ஞானாச்சாரியாராக’, ‘குவலய குருபீடமாக’, ‘இந்துமதத் தந்தையாக’, ‘தத்துவ நாயகமாக’, ‘அருளாட்சி நாயகமாக’, … தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண்சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார்.
அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.
சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், ‘இந்து மத ஆண்டு’ என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
(இந்த 1992 இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே, 4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)
இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.