கேள்வி:- ‘ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் உண்மையினை உணர்ந்தவர்கள்தான் சித்தர்கள்’ (தர்மச் சுடர் - ஜூன் 1985 பக்கம்-39). இக் கருத்து சரியா?
பதில்:- இது பொய்யான ஹிந்து மதம் கூறும் கருத்தாகும். அதாவது ‘ஊனினைச் சுருக்கி’ என்ற கருத்து சித்தர்களுக்கு உரியதல்ல. சித்தர்களின் உண்மையான இந்துமதம்
‘அடக்கு அடக்கு என்பான் அறிவிலான்; அனைத்தும் தாமே அடங்கப் பெறுபவனே அருளாளன்’ என்ற கருத்துக்களையே வழங்குகிறது.
எனவே, இறைச்சி உணவைக் கண்டிப்பதோ, தேவையான அளவு உண்ணாமல் உணவின் அளவைச் சுருக்குவதோ, ஐம்புலன் உணர்வுகளை அடக்கி அக வாழ்வைப் பாலைவனமாக்கிக் கொள்வதோ, புறவாழ்வை நடைப் பிணமாக்கிக் கொள்வதோ பதினெண் சித்தர்கள் வழங்கிய உண்மையான இந்து மதத்திற்கு (The True Induism - மெய்யான இந்துமதம்) உரியதல்ல.
கலியுகம் பிறந்து 2000 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்துமதம் செழித்தோங்கிய இந்தியாவிற்குள் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு வந்த பிற மண்ணினரான பிறாமணர்களுடைய வேதமதமான பொய்யான ஹிந்துமதத்திற்கே (Pseudo Hinduism) இக்கருத்துக்கள் உரியதாகும்.
எனவே, ஊனினைச் சுருக்குவதுதான் சித்தர்களுடைய கருத்து என்று மேலே கூறப்பட்ட கருத்து தவறானதாகும். இப்படி இந்துமதத்தைப் பற்றிய அறியாமை நிறைந்த புரியாமை மிகுந்த தவறான கருத்துக்களை சிறுபிள்ளைத்தனமாக வெளியிட்டு இந்துமதத்திற்குச் சிதைவும் சீரழிவும், சிறுமையும் செய்ய வேண்டாம் என்று அருளார்ந்த அறிவிப்பு விடுக்கப் படுகிறது.