“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
பேரார்வத்துக்குரிய இனிய நண்பர் உயர்திரு ச.வெண்மணி அழகன் அவர்களுக்கு,
பெருமதிப்பிற்குரிய ஐயா,
தங்களின் அஞ்சல் கண்டவுடனேயே விரிவான அஞ்சல் எழுதினேன். ஆனால், சென்னை செல்ல நேரிட்டு விட்டதால், இன்றுதான் அனுப்ப முயன்றேன். தங்களுக்கு எழுதியதை ஒருமுறை படித்ததும், இன்னும் சில வாசகங்கள் எழுதுவது நல்லது என்று தோன்றவே இந்த இணைப்பு அஞ்சலையும் எழுதுகிறேன். நாம், நல்ல சிந்தைத் தெளிவுடன் நண்பர்களாவோம்.
நண்பா! தமிழர்களின் தன்னிகரில்லாத் தலைவர் தந்தை பெரியார் அவர்களேயாவார். அஞ்சா நெஞ்சமும், அயரா உழைப்பும், அடங்கா ஆர்வமும், அளப்பரிய செயல்திறமும் படைத்த வைக்கம் வீரர் பெரியார் ஒருவரால்தான் தொடர்ந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடிந்தது. அவர் முழு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்று ஆராயத் தேவையில்லை. அவரால், பல அரிய பெரிய உயரிய சாதனைகள் சாதிக்கப் பட்டுள்ளன என்பதை யாருமே மறுக்க முடியாது மறக்க முடியாது.
இன்று தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு…. என உணர்வுகள் செழித்து வளர்ந்தோங்கி வருவதற்குக் காரணமே தந்தை பெரியார்தான். ஆனால், அடிப்படை முயற்சிகள் மட்டுமின்றி, முக்கால் பங்குக்கு மேல் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள் அவரால் விதைக்கப் பட்டும், விதைத்தவை முளைத்தும், முளைத்தவை கிளைத்தும் போதுமான தேவையான பாதுகாப்பும் போற்றுதலும் பேணுதலும் இன்றி அவை உரிய விளைவைத் தரவில்லை என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அப்பொழுதுதான், இனிமேல் என்னேன்ன செய்ய வேண்டும்? எப்படி யெப்படிச் செய்ய வேண்டும்? என்றெல்லாம் திட்டமிட்டுச் செயல்பட முடியும்.
நண்பா! ‘தந்தை பெரியார் அவர்களுக்கு எண்ணற்ற மாவீரர்கள் தொண்டர்களாகக் கிடைத்தும், பெரும்பொருள் - ஏறத்தாழ ஒரு கோடி மதிப்புள்ளது - காணிக்கையாகக் கிடைத்தும், பட்டுக்கோட்டை அழகிரி, குத்தூசி சா.குருசாமி…. முதலியோர் கிடைத்தும் …. நாடு தழுவிய மிகப் பெரிய சீர்திருத்தங்களைச் செய்யாமல் போய்விட்டாரே’ - என்பதுதான் என் போன்றோர் வருத்தம்.
நண்பா! ‘நா அசைந்தால் நாடே அசையும்’ என்ற புகழ் பெற்ற வெண்தாடி வேந்தர், தன் பொன்னான வாயைத் திறந்து - ‘போர்’ என்று ஒரு முறை கூறியிருந்தால் போதும்; என்றோ! நமது சமுதாய அடிமை, மிடிமை, இருள், இழிவு, முடக்கம், இன்னல் …. முதலிய அனைத்தும் அழித்தொழிக்கப் பட்டிருக்குமே! இறுதிவரை, அவர் பேசியபடியே தன் காலத்தைக் கழித்து விட்டாரே! அவர் நினைத்திருந்தால் ஒரு லெனினாக, வாசிங்டனாக, கரிபால்டியாக, காந்தியாக மாறியிருக்கலாமே! இந்தத் திருநாட்டுக்கு விடிவையளிக்கக் கூடிய முடிவு எதையுமே செயலாக்காமல் சென்று விட்டாரே!….. என்றுதான் என் போன்றோர் வருந்துகிறோம்.
எங்களுடைய இத்தகைய வருத்தத்தை உரிய முறையில் உங்களைப் போன்றோர் புரிந்து கொண்டால்தான் இனித் தொடர இருக்கும் பகுத்தறிவுப் பணியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட முடியும்.
நண்பா! நாம் சிந்தையில் பிறக்கும் கருத்துக்களால் மாறுபட்டவர்களாக, வேறுபட்டவர்களாக இருக்கலாம். ஆனால், நெஞ்சத்து உணர்வுகளால் ஒன்றுபட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, தமிழர்களில் கருத்தால் எதிர்க் கட்சிகள் இயங்கும் நிலை இருக்கலாம். ஆனால், உணர்வால் எதிரிக் கட்சிகள் இயங்கும் நிலை இருக்கக் கூடாது.
நண்பா! பலர் ‘பகுத்தறிவுக் கொள்கை’ (Rationalism) என்பது தந்தை பெரியாரால் முதன்முதலில் ஈன்றெடுக்கப் பட்ட ஒன்று என்று எண்ணுகிறார்கள். அது மாபெரும் தவறு. என்றைக்கு மனிதன் சிந்திக்க (thinking) ஆரம்பித்தானோ! அன்றே மடமை பிறந்து விட்டது. (belief).
இதை உணர்ந்தால்தான் நாம் பகுத்தறிவுப் பாதையில் உள்ள எல்லைக் கற்கள் (milestones) எத்தனையாயிரம் என்று எண்ண முடியும். தந்தை பெரியார் பகுத்தறிவுப் பாதையில் உள்ள எண்ணற்ற எல்லைக் கற்கள் போன்றவரல்ல. அவர், ஒரு வழிகாட்டி மரமாகவும் (Guiding Post), வழி நடைப் பயணிகள் தங்கி இளைப்பாறி இனாமாக உணவுண்டு, ஓய்வெடுத்துப் பயணப்பட உதவும் விருந்தினர் மாளிகையாகவும் (Guest House) தொடர்ந்து பயணப்படப் போகும் இடம் பற்றிய விளக்கங்கள் வழங்குபவர். அதனால்தான், உலகப் பகுத்தறிவாளர்களின் வரிசையிலே தந்தை பெரியார் ஈடு இணையற்ற மிகப் பெரிய தனித்த இடத்தைப் பெறுகிறார். ஆனால், புத்தர், மகாவீரர், இயேசு, கன்பியூசியசு சொராசிட்டர், முகம்மது நபி, குருநானக்கு, …. முதலியோர் போன்று இவரும் ஒரு மதத் தலைவராக ஆக்கப் படாமலிருக்க வேண்டும். அதற்குரியதைச் செய்வதே பகுத்தறிவு இயக்கத்தின் கடமையாகும்.
நண்பா! எனக்கு ஓய்வும் வாய்ப்பும் அதிகமில்லை என்பதால் அஞ்சலை இத்துடன் முடிக்கிறேன். பகுத்தறிவு இயக்கம் முதலில் பல நல்ல நூல்களை வெளியிட வேண்டும். அதாவது, இங்கர்சால், மார்க்சு, ஏங்கல்சு, லெனின், பெர்ட்ராண்டு ரசல், … முதலியோரின் கருத்துக்கள் உலகம் முழுதும் உணரப் படும் வண்ணம் நல்ல பல நூல்களாக வடிவம் பெற்றது போல், தந்தை பெரியாரின் கொள்கைகள், பணிகள், வாழ்வியல் முறைகள்…. முதலியவை என் போன்று பலராலும் நூல்களாக எழுதப்பட வேண்டும்.
தங்களைப் போன்றோர் உணர்வு வயப் படாமல், உடனடியாக எதிர்ப்பு, மறுப்பு, வெறுப்பு, பழிப்பு, அழிப்பு…. வேலைகளில் ஈடுபடாமல் பொறுமையோடு, பிறர் கூறும் கருத்துக்களைக் கேட்க வேண்டும். பிறர் செய்யும் முயற்சிகளைத் தடுக்காமல் உன்னிப்பாகக் கவனித்து வளர்க்க வேண்டும்.
தந்தை பெரியார் ஒவ்வொரு கட்டத்திலும்,
“தாய்மார்களே! பெரியோர்களே! தோழர்களே! …. நான் சொல்லுவதை நீங்களெல்லாம் பொறுமையாகக் கேட்டுச் சிந்தித்துப் பார்க்கணும்னுதான் நான் உங்களையெல்லாம் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றதை விட்டு விடுங்கள். நீங்கள் எதையும் நம்ப வேண்டாம். நம்பளையெல்லாம் சூத்திரனாய், தாசிமகனாய், காட்டுமிராண்டியாய்…. கதையெழுதி வச்சிருக்கானுங்க, இந்தப் பார்ப்பானுங்க. இதைப்பற்றி நான் கேட்கக் கூடாதா? சொல்லக் கூடாதா? என்னை விட்டா வேறே நாதி கிடையாது. என் காலத்திலேயே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னு தான் நான் அலையறேன். புராணம், இதிகாசம்னு…. ஆபாசங்களை யெல்லாம் கடவுள் கதையா எழுதி வச்சிருக்கானுங்களே! இதைப் படித்துவிட்டு நமது படித்த தமிழன்களும் காட்டுமிராண்டிகளாக வாழறாங்களே! என்பதுதான் என் வருத்தம்.
அதற்காகத்தான் ‘பகுத்தறிவுக் கொள்கை’, ‘பகுத்தறிவு இயக்கம்’ …. அது இதுனு என்னாலே முடிஞ்சதையெல்லாம் செய்யறேன். நீங்க எல்லாரும் வருத்தப் படாம சிந்தித்துப் பார்க்கணும். இது பல ஆயிரம் வருடமா நடக்கற மோசடி! ஏமாத்து!! பித்தலாட்டம்!!! அயோக்கியத்தனம்!!!!… இதையெல்லாம் என் காலத்துக்குள்ளேயே ஒழிக்க முடியாது என்றாலும் ஏதோ பலபேரு எனக்குப் பின்னாலே தொடர்ந்து முயற்சி செய்தாவது இவற்றை யெல்லாம் ஒழிக்கணும்.
நம்மையெல்லாம் ஏமாத்திப் பிழைக்கிறவன், சுரண்டிப் பிழைக்கிறவன், அண்டிப் பிழைக்கிறவன் தான், பார்ப்பானுங்க. அவனுக்கு ஏன் சாமீ! சாமீ!!ன்னு மரியாதை கொடுக்கணும். அவன் காலைக் கழுவித் தண்ணீர் குடிக்கணும்…
இதையெல்லாம் தோழர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! நீங்க நல்லாச் சிந்திக்கணும்…. பொறுமையாகச் சிந்திக்கணும். எல்லோரும் ஒன்னாச் சேர்ந்தால்தான் பார்ப்பானை ஒழிக்க முடியும்…. நான் கருத்துச் சொல்ல உரிமை உண்டு. இந்தப் புராணம், இதிகாசம், திருவிழா, கோயில், கடவுள் எல்லாம் இருக்கணுமா? வேணுமா? தேவையா?…. என்பதை நீங்கதான் சிந்தித்து முடிவு கட்டணும். உங்களைச் சிந்திக்க வேணும், சிந்திக்க வேணும்னு கேட்டுக்கறேன்….”
என்று இப்படித்தான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பணியின் நிலை என்ற தலைப்பிலேயே என் போன்றோர் சிந்திக்கிறோம்.
அதனால், இன்றுள்ள பகுத்தறிவாளர்கள் இயக்கம், அடிக்கடி ‘கருத்தரங்குகள்’, ‘மாநாடுகள்’ நடத்த வேண்டும். இனாமாகப் பல நூல்களை அச்சடித்து வழங்க வேண்டும். தந்தை பெரியார் பற்றியும், பகுத்தறிவுக் கொள்கை பற்றியும் யார் நூல் எழுதிக் கொடுத்தாலும், அதை ஏற்றுப் போற்றி உரிய ஆதரவைக் கொடுத்து வெளியிட வேண்டும். உலகம் தழுவிய நாளிதழ், வார ஏடு, திங்கள் மலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பகுத்தறிவுக் கொள்கைக்காக வெளியிடல் வேண்டும். பிறகு பல மொழிகளிலும் பகுத்தறிவுக் கொள்கை விளக்க இதழ்கள், ஏடுகள், மலர்கள் வெளியிடப் படல் வேண்டும்.
மதுவும் மங்கையும் இறைச்சியும் மிக விரும்பப்பட்ட சங்க காலத்தில்தான் திருவள்ளுவர் வாழ்ந்தார் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போதுதான், ‘முல்லையே மலராதே’, ‘முழுநிலாவே ஒளிராதே!’ என்பது போல், என் போன்றோரின் சிந்தனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தடை விதிக்க மாட்டீர்கள். பெரியார் காலத்தில் என் போன்றோரும் வாழத்தான் முடியும். அதுவே இயற்கை. தமிழ் மொழி வழிச் சிந்தனைகள், ஆராய்ச்சிகள் பூத்துப் புதுமணம் பரப்ப, காய்த்துக் கனிந்து விருந்தாக நாமனைவரும் பாடுபடல் வேண்டும்.
நான், சித்தர்களின் ‘சித்தாந்தம்’ என்ற ஒரு மாபெரும் உலகத் தொன்மைமிகு தத்துவத்தின் வாரிசு, பிரதிநிதி. மந்திரவாதி அல்ல. என் கருத்துக்களை, கொள்கைகளை, சிந்தனைகளைப் பொறுமையோடும் மலர்ந்த முகத்தோடும் ஏற்றுச் சிந்திக்கத் தயாராக இருங்கள். ஆரம்பத்திலேயே கசப்புணர்வும், மறுப்புணர்வும், வெறுப்புணர்வும், பகையுணர்வும் கொள்ள வேண்டாம். நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள்.
ஒரு புதிய சிந்தனையை யாரும் அழிக்க முடியாது. பகுத்தறிவுக் கொள்கையின் பிறப்பிடமும், இருப்பிடமும் சித்தாந்தமே என்ற நினைவோடு பகுத்தறிவாளர்கள் செயல்பட வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுத்துக் கொள்ளுகிறேன். நாம், என்றும் நண்பர்களாக இருப்போம்.
அன்பு
சித்தர்
இவ்விரு அஞ்சல்களையும் ‘பெரியாருக்குப் பின் பகுத்தறிவுப் பணியின் நிலை….!?’ என்ற தலைப்பில் அச்சடித்தால் நல்லது.
உடன் பதில் எழுதவும்.
நட்பு நாடும்….
அன்பு
சித்தர்