அணிந்துரை (பிறமாச்சாரியார்)
சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் “ஓர் ஆத்திகத் தலைவரே; மத மறுமலர்ச்சிக்கும் பாடுபட்ட ஆன்மீக வாதியே; ஆரிய வருகையால் உண்மையான இந்து மதம் மடமைக்குரிய, மூடநம்பிக்கைக்குரிய, புரட்டுகளுக்குரிய, முதலாளித்துவத்திற்குரிய, சுரண்டலுக்குரிய, கேலிக்குரிய, கிண்டலுக்குரிய……….. ஒன்றாக மாறிவிட்டது என்பதை விளக்கியுரைத்து மக்களை ஒன்று திரட்டிய சீர்திருத்தவாதியே."
“சமசுக்கிருத ஆட்சியால் சமசுக்கிருதமே தேவமொழி என்று கூறியும் கூறாமலும் செயல்பட்டு வரும் வட ஆரியர்களான பிறாமணர்களின் திட்டமிட்ட சதியால் தமிழர்கள் தன்னுரிமையை தன்னுடைய நாட்டிலேயே இழந்து ஒற்றுமையின்றி பிறருக்கு அடிமைகளாய், கூலிகளாய், கங்காணிகளாய் வாழ்கின்ற அவலக் கேவல நிலையை எடுத்துக் கூறிச் செயல்பட்ட சிந்தனைவாதியே” ……… என்ற அரிய பெரிய பேருண்மைகளை இந்நூலைப் படிக்கும் அனைவரும் உணர்வார்கள்.
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் கடவுளை மறுத்தார், வெறுத்தார், ஒதுக்கினார், தாக்கினார். எனவே, அவர் மத விரோதி, தமிழினத் துரோகி………. என்றெல்லாம் பலர் ஆராயாமல் சிந்திக்காமல் கூறி வருகின்றார்கள். ஆனால் அவருடைய பகுத்தறிவு மிகு செயல்களை நாம் சற்று ஆழமாக அராய்ந்து நோக்கினால் மேலே இந்துமதத் தந்தை, ஞாலகுரு சித்தர் கருவூறார் பெரியார் ஈ.வெ.ரா. பற்றிக் கூறிய கருத்துக்கள், வெளியிட்ட அறிவிப்புகள், கொடுத்த பட்டங்கள் யாவும் உண்மையே! ஏற்றுக்கொள்ளக் கூடியதே! என்பதை உணரலாம்.
(1) ஆரம்பக் காலத்தில் தமிழகத்தில், மூன்று சதவீதமாக இருந்து வந்த ‘பிறமண்ணினரான பிறாமணர்களை மையமாக வைத்துத் தமிழர்கள் தங்களுக்கு ‘பிறாமணர் அல்லாதோர் சங்கம் (Non Brahmin Association) எனத் துவக்கியதைக் கண்டித்து பெரியார் ஈ.வெ.ரா. ‘சுயமரியாதைச் சங்கம்’ என்ற ஒன்றைத் துவக்கி அதன் மூலம் தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டினார்.
(2) பெரியார் ஈ.வெ.ரா.தான், தமிழர்களின் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் பிறமண்ணினரான பிறாமணர்கள் தலைமையேற்று வழிநடத்துவதால்தான் தமிழினம் பார்ப்பானிடம் தலைகுனிந்து கிடக்கின்றது. அவனைச் சுரண்டும்படி அனுமதிக்கின்றது - என்று துணிந்து கூறித் தமிழர்கள் அனைவரும் அருளாளர்களாக, அருட்சகர்களாக, பூசாறிகளாக …… மாற வேண்டும். அனைவரும் கோயிலின் கருவறைக்குள் செல்ல வேண்டும். தமிழன்தான் மதத் தலைமையை ஏற்க வேண்டும்………. என்று கூறினார்.
(3) பெரியார் ஈ.வெ.ரா.தான் ஆரியர்களின் கற்பனையால், பொருளற்ற சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளால் இந்து மதம் பலத்த கேலிக்கும் கிண்டலுக்கும், சுரண்டலுக்கும், மடமைக்கும், மற்ற சமுதாய நலக் கேடுகளுக்கும் உரியதொன்றாக மாறிவிட்டது. கோயில்கள், பிறமண்ணினரான பிறாமணர்களின் கொட்டங்களுக்கும், கொள்ளைகளுக்கும் உரியதொன்றாக மாறிவிட்டதால் பாழ்பட்டு விட்டது. தமிழன்றி செத்துப்போன சமசுக்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்வதால் யாதொரு பயனுமில்லை………. என விளக்கியதோடு மட்டுமல்லாமல், கோயில்களை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும், கோயில்களின் கணக்குகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், தமிழ் மொழியில்தான் அருட்சினை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
(4) ஆரியர்களால் மாசுபடுத்தப் பட்டுவிட்ட இந்துமதத்தை மட்டுமே பெரியார் தாக்கினார், கிண்டல் செய்தார்; ஆரியர்களால் புனைந்துரைக்கப்பட்ட கட்டுக்கதைகள் நிரம்பிய புராண இதிகாசங்களை நகையாடினார் என்பதுதான் உண்மை! உண்மை! உண்மை!!!……. ஆனால் இங்கர்சாலும் மார்க்சும் அனைத்து மதங்களையும் தாக்கியது போல் இவர் அனைத்து மதங்களையும் தாக்க வில்லை. இது உண்மையான இந்துமதத்தின் மீது அவருக்கு இருந்த அளவற்றப் பற்றையும் பாசத்தையும் காட்டுகின்றது. எனவேதான் பெரியார் ஈ.வெ.ரா. தமிழர்கள் தங்களுடைய உண்மை மதிப்பை உணர்ந்து வீறுகொண்டெழுந்து இந்துமத ஆலயங்களை சீரமைக்க வேண்டும்; மீண்டும் தமிழ் மொழியை எல்லா ஆலயங்களிலும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் முன்னோர்கள் செதுக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கும் சிலைகளை உடைக்காமல் தானே “பிள்ளையார்” சிலைகளைச் செய்து உடைத்தெறிந்தார். இந்நிகழ்ச்சியே அவரின் பத்தியுணர்வை வெளிப்படுத்துகின்றது.
(5) பெரியார் இந்தி மொழியின் ஆட்சியை எதிர்த்ததால்தான் இந்தி மொழி வெறியர்களின் ஆட்சியிலிருந்து தமிழகத்தை முழுமையாக மீட்டுத் தர முடிந்தது. இந்த மாபெரும் பணியின் மூலம் ‘தமிழன் ஒவ்வொருவனும் தன்னை - தன்னுடைய பாரம்பரியத்தை உணர வேண்டும்; பிறமண்ணினரான பிறாமணர்களின் ஆதிக்கத்தை அறிய வேண்டும்; தலைவனில்லாமல் நாதியற்றுக் கிடக்கின்ற தமிழகத்தின் நிலையைப் புரிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைமையையேற்று வழிநடத்தி வரும் இந்துமதத் தந்தை குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் பெரியார் ஈ.வெ.ரா. விட்டுச் சென்றுள்ள மாபெரும் போர்க்காலப் பணிகளை அணிதிரட்டிச் செயல்பட அனைத்துத் தமிழக மக்களுக்கும் மேற்கூறிய சிந்தனைகளை வழங்கி வருகின்றார்.
பதினெண் சித்தர்கள் அருட்கொடையாக வழங்கிச் சென்றிருக்கும் தமிழ் மந்திரங்களை, அருட்கலைகளை, சமுதாய நெறிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம்தான் நாம் வாழ்க்கையில் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலிருந்தும் முழுமையாக வட ஆரிய மாயைகளையும், ஏமாற்றுகளையும், தவறுகளையும், சூழ்ச்சிகளையும், அண்டப்புளுகுகளையும், ஆபாசக் கற்பனைகளையும், ஆகாயாப் பொய்களையும், காட்டுமிராண்டித்தனங்களையும்,…….. அகற்றித் தன்மான உணர்வோடு செயல்பட வேண்டும்.
சமய - சமுதாய - அரசியல் - கலை - இலக்கிய - தொழில் துறைகள் அனைத்திலும் தமிழர்களும் தமிழ்மொழியும், தமிழுணர்வும் முதன்மை பெற்று செல்வாக்கு பெற்று ஆட்சி பெறக்கூடிய நிலையை உருவாக்க பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்குப் பின்னால் நாங்கள்தான் பாடுபடுகின்றோம். எங்களால்தான் இந்த நாட்டின் சமயத் துறையிலுள்ள கறைகள் மட்டுமல்லாது சமுதாயத்திலுள்ள வறுமை, மிடிமை, இல்லாமை, இயலாமை, ஏக்கம், தேக்கம், வீக்கம், சுரண்டல், சாதிக்கொடுமைகள், தீண்டாமைகள், வேறுபாடுகள், மாறுபாடுகள், பகைமைகள்…….. முதலிய அனைத்துக் குறைபாடுகளையும் முழுமையாக அகற்ற முடியும். ஏனெனில், பதினெண் சித்தர்கள் வகுத்துத் தந்துவிட்டுச் சென்றுள்ள ‘சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கும் வாக்குகளும், வாசகங்களும் எங்களிடம்தான் உள்ளன. இவற்றை முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தும் வண்ணமாகத்தான் இ.ம.இ.யின் கெளரவத் தலைவராகப் பெரியார் ஈ.வெ.ரா.வை ஏற்றுக் கொண்டோம்.
இனியாவது தமிழகத்தை முழுமையாக வட ஆரியரான பார்ப்பனர்களின் பிடிகளிலிருந்தும்; நயவஞ்சகச் சூழ்ச்சி வலையிலிருந்தும் விடுவிக்கும் இம்மாபெரும் பணியில் தோளோடு தோளாக நின்று போராட தமிழ்மொழி, இன, நாட்டுப் பற்றாளர்களும், இளைஞர்களும், திராவிடக் கழகத்தவரும், பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், ஆத்திகர்களும், அறிவாளர்களும் தங்களின் மேலான ஆதரவுகளை எல்லாவகையிலும் தருவார்களாக!
அன்பு
இ.ம.இ. தலைமைப் பொறுப்பாளர்