பத்தாவது இந்து மறுமலர்ச்சி இயக்க மாநாட்டில் தமிழினத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 64வது நாயனாராக ‘சொல்லடி நாயனார்’ என அறிவிக்கப் பட்டதற்கு தருகின்ற விளக்கம்.
“……..சித்தர்கள் இந்து மதத்தை முறையாக முழுமையாகப் படைத்திருக்கிறார்கள் என்ற பேருண்மையினை விளக்குவனவாகத்தான் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள், நவநாதங்கள், பதினெண் சித்தங்கள், நாற்பத்தெட்டு அருட்கலைகள், அறுபத்து நான்கு ஆயகலைகள், ஒன்பது கடவுட்கலைகள், ஒன்பது தெய்வீகக் கலைகள், ஒன்பது பேய்க்கலைகள், ஒன்பது நோய்க்கலைகள், ஒன்பது தேய்கலைகள், தொண்ணூற்றாறு வகை வழிபாட்டு நிலையங்கள், நாற்பத்தெட்டு வகை அருட்பட்டங்கள், எண்ணற்ற வகையான சாத்திறங்கள், சாத்திரங்கள், சாத்தரங்கள், தோத்திறங்கள், தோத்திரங்கள், தோத்தரங்கள், சூத்திறங்கள், சூத்திரங்கள், சூத்தரங்கள், திருமந்திறங்கள், திருமந்திரங்கள், திருமந்தரங்கள், தந்திறங்கள், தந்திரங்கள், தந்தரங்கள், எந்திறங்கள், எந்திரங்கள், எந்தரங்கள், நிடதங்கள், துணைநிடதங்கள், இணை நிடதங்கள், காயந்திரிகள், பிறாமணங்கள், பிறமணங்கள் (பிறமணங்கள் = பாட வேறுபாடுள்ளது), பிறணவங்கள், ஆகமங்கள், மீமாம்சைகள், மாந்தர மாந்தரீகங்கள், தாந்தர தாந்தரீகங்கள், ஏந்தர ஏந்தரீகங்கள், அருள்வாக்குகள், அருள்வாசகங்கள், மருள்வாக்குகள், மருள்வாசகங்கள், குருவாக்குகள், குருவாசகங்கள், கருவாக்குகள், கருவாசகங்கள், திருவாக்குகள், திருவாசகங்கள், நேத்தரம், நேத்திறம், நேத்திரம், நேமம், நியமம், நிட்டை, ……. எண்ணற்ற கோடி சம்பிறதாயங்கள், சடங்குகள், மரபுகள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், ………. முதலியவை படைக்கப் பட்டிருக்கின்றது.
இவற்றின் நேரடி வாரிசுகளாக உலகம் முழுதும் சித்தர்களின் வாரிசுகள், விந்து வழி வாரிசுகள், குருவழி வாரிசுகள் காலங்கள் தோறும் தோன்றிக் கொண்டுள்ளார்கள். ஏனென்றால், சித்தர்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தே வாழ்ந்திடும் வழக்காற்றினை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்கள், ஆங்காங்கே அங்கவியல் நிறைவுக்குரிய பெண்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் திருமணம் செய்து அவர்களோடு குறைந்தது 18 முதல் 48 மாதங்கள் வாழ்ந்து மேலே குறிப்பிட்ட மதச் செல்வங்களை அவர்களிடம் வழங்கி என்றென்றும் அந்தந்த வட்டார மக்கள் பெறுமாறு செய்திருக்கிறார்கள். இவற்றிற்கும் மேலாக இவர்கள் நாடு இனம் மொழி என்று வேறுபாடு கருதாமல் உலகெங்கும் தங்களுடைய விந்து வழி வாரிசுகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். எனவேதான், இந்த உலகில் தோன்றிடக் கூடிய எல்லா மதங்களும், அருளாளர்களும் சித்தர் நெறி எனும் தோட்டத்தில் பூத்த மலர்களே! காய்த்த கனிகளே! என்று சித்தர்கள் அறிவிக்கின்றார்கள் …..” குருபாரம்பரிய வாசகம்.
கி.பி. 1772-இல் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கண்டப்பக் கோட்டை வாழ்ந்த சித்தர் ஏளனம்பட்டியார் எனப்படும் சித்தர் கருவூறார் உ. இராமசாமிப் பிள்ளையவர்கள் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவிக்கும் பொழுது அறிவித்த குருபாரம்பரிய வாசகங்களில் இதுவும் ஒன்று. இதனை இங்கு எடுத்துக் காட்டுவதற்குக் காரணம், சித்தர்களுக்கு மதவேறுபாடுகளோ, நாத்திக ஆத்திக வேறுபாடுகளோ இல்லை என்பதற்காகத்தான். மேலும், சித்தர் நெறிப்படி பார்த்தால் நாத்திகமும், ஆத்திகமும் ஒன்றுதான். அகஞானத்தால் தயாராகும் மெய்ஞானியும், புறஞானத்தால் தயாராகும் மெய்ஞானியும் அநுபவப் பூர்வமாகப் பார்த்தால் ஒருவரேயாவர்.
சித்தர்கள் தமிழ்மொழி வழியில் தோன்றிய “மக்கள் தொண்டர்களை” உண்மையான பத்தர்கள் என்று மதித்து அவர்கள் வணங்கிய தெய்வங்களின் அடிப்படையில் “நாயனார்”, ஆழ்வார், அடிகள், வள்ளல்கள், ஞானிகள், முனிவர்கள், இருடிகள்,………. என்று பகுத்துப் பகுத்துப் பாராட்டியிருக்கிறார்கள். இதுபற்றி மிகத் தெளிவான எழுதாக்கிளவி நூல்கள் நிறைய உள்ளன, எழுதப்பட்டு பாரம்பரியமாகப் பாதுகாக்கப்படும் நூல்களும் உள்ளன.