பதினெண்சித்தர்கள் படைத்த காயந்திரி மந்தரம் (சமசுகிருதத்தில் காயத்ரீ மந்த்ரம்)
தமிழில் அக்கலையில்லையே! இக்கலையில்லையே! என்று கூறுபவர்க்குப் பதில் கூறும் வண்ணமாகத்தான் இ.ம.இ. மத மறுமலர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. தமிழில் உள்ள எண்ணற்ற வகையான மந்திறங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் வாழ்த்துதலுடன் கோப்புகளிலிருந்து முதன் முதலாகக் ‘காயந்திரி மந்தரம்’ என்ற தொகுப்பை விரிவான வரலாற்று விளக்கத்தோடு வெளியிடுகின்றோம்.
‘காயத்திரி மந்தரம்’ என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத…. வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான…. வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள் படைத்துள்ளனர்.
“ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!”
இதுவே காயந்திரி மந்தரம் (காயம் = உடல், திரி = திரியாமல், மாறாமல்) ஆகும்.
ஆரியர்களுக்காகச் சித்தர்கள் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு புதிய ஒரு மொழியைச் ‘சமசுக்கிருதம்’ (சமம் = தமிழுக்குச் சமமாக; கிருதம் = செய்யப்பட்டது) என்ற பெயரில் படைத்தனர். ஏற்கனவே ஆரியர்கள் பேச்சு வழக்கில் வைத்திருந்த சொற்களையும், உச்சரிப்பு முறைகளையும் அப்படியே ஏற்றுப் போற்றிப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய மொழி பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என்பதற்காகத்தான் ‘சமம்’ என்ற தமிழ்ச் சொல்லையும் ‘கிருதம்’ என்ற ஆரியரின் பேச்சு வழக்குச் சொல்லையும் இணைத்துச் ‘சமசுக்கிருதம்’ என்ற பெயர் உருவாக்கப்பட்டது.
ஆரியர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்ற போதும் தங்களின் மொழி எழுத்துக்களை இந்தியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி வைத்துக் கொண்டனர். ஆனால், இந்தியாவின் மூலமொழியாகவும், இந்துமதத்தின் ஆட்சி மொழியாகவும், சித்தர்களின் ஞானங்களையும், விஞ்ஞானங்களையும், அறிவியல்களையும் விளக்கிடும் கலைச் சொற்களை உடைய மொழியாகவும் இருக்கின்ற தமிழ் மொழியினின்று வேறுபட்ட எழுத்தோ, ஒலிநயமோ, இலக்கிய இலக்கணமோ…. உடைய மொழியாக ஆரியமொழி வடிவப்பட்டால் ஆரியர் என்றைக்குமே இந்தியர்களோடு (தமிழர்களோடு) கலந்து வாழ முடியாது. எனவேதான், சித்தர்களின் மொழியறிவு, நூலறிவு, தத்துவ அறிவு, மதஞானம், பொருள்ஞானம், கலைஞானம்…. முதலிய அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்ட ஒரு மொழியாக ஆரியர்களின் பேச்சுமொழி எழுத்துடைய மொழியாக்கும் பொறுப்பு சித்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதியவைகளையும், புதுமைகளையும் வரவேற்கும் புரட்சியாளர்களான பதினெண் சித்தர்கள் பெரிதும் முயன்று இந்துமதத்துக்குத் துணையாகப் பயன்படக் கூடிய ஒரு புதிய மொழியை உருவாக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் சமசுக்கிருதத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு குறிப்பிட்ட அளவு சமசுக்கிருத மொழி எழுத்தும் இலக்கியமும் பெற்றவுடன் ஆரியர்கள் சித்தர்களின் சமசுக்கிருத மொழி உருவாக்கும் பணியில் மிகுதியாகத் தலையிட்டனர்.
தமிழில் இருந்து வரும் இலக்கியங்களை முழுமையாக மொழிபெயர்க்க விடாமல் சமசுக்கிருதத்தில் ஆரியக் கற்பனைகள், கதைகள், இதிகாசங்கள், பூசைக்குரிய வாசகங்கள், ஒலிகள், மதநூல்களின் பெயர்கள், கடவுள்களின் வரலாறுகள்…. முதலியவைகளையெல்லாம் அப்படியே புதிய மொழிபெயர்ப்புக்களில் புகுத்தி மாயமான, பயனற்ற கற்பனையான, ஏமாற்றான, தவறான, சூழ்ச்சியான,….. இலக்கியங்களைப் படைத்தனர். இதனால், அண்டபேரண்டமாளும் தமிழ்மொழியின் மெய்ஞ்ஞான, புறஞான, விஞ்ஞான, பொருள்ஞான, அருள்ஞான இலக்கிய இலக்கணங்கள் உலக மக்களுக்குக் கலப்படமின்றி, சிதைவின்றி, குறைவின்றி, மறைவின்றிக் கிடைக்க முடியாமல் போகும் ஆபத்து விளைந்தது.
அதனால், சித்தர்கள் தங்களுடைய ஒத்துழைப்பையும், முயற்சியையும் ஆரியப் பண்டிதர்களுக்குத் தர மறுத்து விட்டார்கள். அதனால்தான், தமிழில் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று பதினாறு இருந்தும்; தமிழில் உள்ள நான்கு வேதங்களின் பெயர்களைத் தழுவியே 1. இருடிவேதத்தை இருக்கு வேதம் ‘ரிக்வேதம்’ என்றும், 2. அசுர வேதத்தை யசுர்வேதம் ‘யஜுர்வேதம்’ என்றும், 3. யாமவேதத்தை (இரவில் கூறும் சாமவேதம்) ‘ஸாமவேதம்’ என்றும், 4. அதர்வான வேதத்தை ‘அதர்வணவேதம்’ என்றும் மாற்றினார்கள்.
ஆனால், இந்த சமசுக்கிருத வேதங்களால் நடக்கும் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், பூசை….. முதலிய அனைத்துமே கோடியில் ஒரு பங்கு கூட தமிழ் வேதங்களால் செய்யப் படுவனவற்றால் கிடைக்கும் பயன் போலத் தர முடியாதவை. இதனால்தான், சித்தர்கள் கட்டிய 48 வகையான வழிபாட்டு நிலையங்களும் அருள்நலம் குன்றிப் பொலிவிழந்து விட்டன. குறிப்பாகக் குடமுழுக்கு விழாக்கள், கருவறைப் புத்துயிர்ப்புக்கள், எழுந்தருளிப் புத்துயிர்ப்புக்கள், சக்கரப் பூசைகள், ஏந்தரப் பூசைகள்…. எல்லாம் சித்தர்களின் மரபுப்படி ‘இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்’ (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது - குருவாக்கு) ‘அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்’ ‘அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்’ செய்ய்பப்பட வேண்டும் என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை….. முதலியவைகளை மீறி ஆரியர்கள் செயல்பட்டே இந்துமதத்தின் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கையும் பகற்கனவாக, மாயமாக ஆக்கி விட்டார்கள். இதனால்தான் ‘கடவுளைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை’ என்று தவறான பழமொழி பிறந்தது. எல்லோருமே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர்,….. எனும் நாற்பத்தெட்டு வகையினரையும் காணலாம், யார் விரும்பினாலும் மேற்கூறிய 48 நிலைகளில் யாராகவும் மாறலாம்…. என்ற சித்தர் நெறியே மக்களுக்குத் தெரியாத ஒன்றாகிவிட்டது.
இதேபோல் தமிழில் உள்ள மூன்று நேமங்கள், மூன்று நியமங்கள், மூன்று நிடதங்கள், மூன்று நிட்டைகள் என்ற பன்னிரண்டில் சித்தர்கள் ‘நிடதம்’, ‘இணை நிடதம்’, ‘துணை நிடதம்’ என்ற மூன்றில் ‘துணைநிடதம்’ என்பதை மட்டும் சமசுக்கிருதத்தில் உபநிடதம் என்று 108 கருத்துக்களை மொழி பெயர்த்த அளவிலேயே ஆரியருடன் தகராறு ஏற்பட்டுச் சமசுக்கிருதத்தை உருவாக்கும் பணி நிறுத்தப்பட்டது. வரலாற்றின் படி தமிழ்மொழியிலிருந்து சமசுக்கிருதத்திற்கு மொழி பெயர்க்கும் பணி இந்த 108வது உபநிடதம் மொழிபெயர்க்கப் படும்போதுதான் சித்தர்களுக்கும் ஆரியர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இத்துடன் இந்த ‘உபநிடதம்’ மொழி பெயர்க்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. இதனாலேயே உபநிடதம் இன்றும் முழுமைபெறாமல் அரைகுறையாகவே உள்ளது என்பது தெளிவான உண்மை. தமிழில் உள்ள சூத்திறங்கள், சூத்திரங்கள், சூத்தரங்கள் சமசுக்கிருதத்தில் ‘சூக்தங்கள்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்த அளவிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. இதேபோல், தமிழிலுள்ள சுருதிகள் ‘ஸ்மிருதிகள்’ என்று சமசுக்கிருதத்தில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்த அளவிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.
இப்பணிகளின் வரலாறு போலத்தான், காயந்திரி மந்தரம், காயந்திரி மாந்தரம், காயந்திரி மாந்தரீகம், காயந்திரி மந்திரம், காயந்திரி மந்திறம் எனும் ஐந்தில் காயந்திரி மந்தரம் என்பது மட்டும் சித்தர்களால் ஆரியர்களின் மிகப் பெரிய வேண்டுகோளுக்கு இணங்கிக் காயத்ரீ மஹாமந்த்ரம் (= காயந்திரி மகா மந்தரம்) என்ற பெயரில் சமசுக்கிருதத்தில் உருமாற்றித் (ந் -> த், த -> த் என்ற இரண்டு எழுத்து மாற்றங்கள்) தரப்பட்டது.
மற்றபடி வாசகத்தின் பொருளை சமசுக்கிருதத்தில் விரிவாக எழுத முற்பட்ட சித்தர்களை ஆரியர்கள் தடுத்து; “……கருத்து முக்கியமல்ல; ஒலிகள்தான் முக்கியம். தமிழில் காயந்திரி மந்தரம் சொல்லப்படுவது போலவே சமசுக்கிருதத்திலும் சொல்ல வேண்டும். மந்திர ஒலிகள் ஓதும்போது தமிழைப் போலவே இருக்க வேண்டும்……” என்று கூறிப் பிடிவாதம் பிடித்தனர். ஆனால், சித்தர்களோ, “அது மக்களை ஏமாற்றுவதாகிடும், ஒரு பயனும் பொருளற்ற அருள்வாசகத்தால் (=மந்திரத்தால்) ஏற்படாது…..” என்று கூறினர். கருத்து மாறுபாடு வலுப்படவே ஆரியர்கள் தாங்களாகவே தங்கள் விருப்பம் போல் காயத்திரி மந்திரம் என்று ஒலியைக் குறிக்கும் பொருளற்ற சொற்களால் உருவான ஒரு பூசை மந்திரத்தை உருவாக்கி அதனை ஆரியர்கள் ஓதுவதன் மூலம் தமிழர்கள் தங்களிடமிருந்த காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம்…. என்பவைகள் ஆரியர்களிடமிருந்து வந்தவையென்றும், ஆரியர்கள் சமசுக்கிருதத்தில் ஓதுவதுபோல் ஓதினால்தான் பயனென்றும் கருதித் தங்களுடைய ஐந்தையும் விட்டு ஆரியருடைய காயத்ரீ மந்த்ரத்தையே ஓத ஆரம்பித்து நாளடைவில் அதனால் பயன் தெரியாமையால் அதனையும் ஓதாது விட்டு விட்டனர். இதுதான் சமசுக்கிருதத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் இந்துமதத்துக்கும் ஏற்பட்ட பேரழிவு, பெருங்கேடு. இதனையுணர்ந்துதான்,
பயன்படுத்தப்படல் வேண்டும் என்ற மரபைப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் ஏற்படுத்தினார்.
சித்தர்கள் ஆரியர்களுக்குக் ‘காயந்திரி மந்தரம்’ சொல்லிக் கொடுத்ததால்தான் அவர்கள் காயந்திரி மந்தரம் போன்ற ஒலி அமைப்புடைய ‘காயத்ரீ மஹாமந்த்ரம்’ என்ற போலி மந்திரத்தைச் சமசுக்கிருதத்தில் உண்டாக்கினர். அதனால், மற்ற நான்கையும் நேரடியாகக் குருவழி வாரிசுகளுக்கும், விந்து வழி வாரிசுகளுக்கும் குறைந்தது பதினெட்டாண்டுகளுக்கு மேலும் அருளுலகப் பயிற்சிகளைப் பெற்றுக் குருவின் நம்பிக்கையும் பெற்றிட்டால்தான் கற்பிக்கலாம் என்ற கடுமையான சட்டத்தை ஏற்படுத்தினர். இந்த நான்கும், இன்றைக்குப் பெரும்பாலும் காடுகளிலும், மலைகளிலும், தீவுகளிலும்…. தொடர்ந்து கடுந்தவம் புரிபவர்களிடமே வாழுகின்றன. எனவேதான், ‘காயந்திரி நான்கையும் கற்கக் காடு, மலை, தீவு, வனாந்தரமெல்லாம் அலைந்தாலும் வருத்தும் ஊழும் விதியும் இன்றிக் கற்க இயலாது - குருவாக்கு, குருவாசகம்’ என்ற வாசகம் பிறந்தது….. என்று பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம் குறிக்கிறது.
அதாவது, ஆரியர்கள் ஒன்பதாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் வைகையாற்றங்கரைக் கருவூறாருக்குப் பிறகே இந்தியாவுக்கு வந்தனர்; அதன் பிறகே, சமசுக்கிருத மொழி உருவாக்கப்பட்டது என்ற செய்திகள் இதனால் தெரிகின்றன. மேலும், ஆரியர்கள், தமிழிலிருந்து பிறக்கப்பட்ட சமசுக்கிருத மொழிதான் தமிழுக்கும் முந்தியது என்று பொய் கூற ஆரம்பித்ததால், இந்துமத வரலாறு, தமிழின அரசியல் வரலாறு, தமிழின் மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, இந்துமதத் தத்துவங்கள், செயல் முறைகள்…. முதலிய அனைத்திலும் கலக்கம், குழப்பம், ஐயம், சந்தேகம், கற்பனை, பொய், காட்டுமிராண்டித்தனமான மடமை, கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள், அறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகள், சுரண்டல் முறைகள், முதலாளிகள் ஆதிக்கப் பிடிப்புக்கள், வறுமையை நியாயப்படுத்துதல், அடிமையுணர்வை உரம்போட்டு வளர்த்தல், முழுக்க முழுக்க கடவுள் ஒன்றே என்ற வறட்சி வாதம், வழிபாடுகளில் பலி மறுக்கப்படல், இறைச்சி, மீன், முட்டை…. முதலியவை படையல் பொருள்களாக இருப்பதைத் தவிர்த்தல், பெண்ணையும், பெண்ணின்பத்தையும் மறுத்தல், வெறுத்தல், பழித்தல், இழித்தல்…. எனும் ஆரியக் கருத்துக்களை வளர்த்தல், உருவ வழிபாட்டை மறுத்தல், விண்ணவர், மண்ணவர், அண்டத்தவர், பேரண்டத்தவர், அண்டபேரண்டத்துக்குரிய பிண்டத்தவர்…. என்பவரே வழிபடுநிலை பெறும் ஈசுவரர்கள், எல்லாக்கள்(அல்லா), ஆத்தாக்கள் (தாய்கள்), தாத்தாக்கள், அப்பன்கள் (தந்தைகள்), ஆயாக்கள், இறைகள், கடவுள்கள், தெய்வங்கள், ஆண்டவர்கள், தேவர்கள் எனப்படுகின்றனர் என்ற பேருண்மையை உணரமுடியாமல் செய்தல் என்பன போன்ற எண்ணற்ற கேடுகள் இந்துமதத்துக்கு வந்து விட்டன. எனவேதான், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியும், பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியும் சமசுக்கிருதத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடியிருக்கிறார்கள்.
ஆனால், தமிழர்கள் இன ஒற்றுமையும், பற்றுணர்வும், மான உணர்வும் இல்லாதவர்களாக மாற்றப்பட்டு விட்டதால் தமிழ் மொழிப்பாசமோ, பற்றோ, ஈடுபாடோ, விருப்போ… இல்லாமல் தமிழினத்துக்கும் தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதிகளாக இருப்பவர்களையே நம்பி ஆதரித்துப் போற்றி மெலிந்து நலிந்து இழிவடைந்திட்டனர். இன்னும் சொல்லப் போனால், தமிழர்களில்தான் தமிழினத் துரோகிகளும், தமிழ்மொழி விரோதிகளும், தமிழ்நாட்டுப் பகைவர்களும் அதிகமாகத் தோன்றுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமேயானால், இந்துமதத்தின் மறுமலர்ச்சி ஒன்றுதான் வழி! தமிழர்களுடையதே இந்துமதம்! ஆரிய வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்ததுதான் இந்துமதம்! இளமுறியாக் கண்டத்தில் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதினெண் சித்தர்களால் தங்களுடைய தாய்மொழியான தமிழ்மொழியில் இம்மண்ணுலக ஈசர்களான மணீசர்களுக்கு வழங்கப்பட்டதுதான் இந்துமதம்! ‘இந்து’ என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு ஆதியிலேயே நாற்பத்தெட்டுப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன! இந்துமதத்தவர் வாழும் நாட்டின் பெயராகத்தான் ‘இந்தியா’ என்ற சொல் பிறந்தது. இளமுறியாக் கண்டத்தில் இருந்த 1. பஃறுளி 2. குமரி 3. இந்து 4. கங்கை 5. யமுனை 6. பிறம்மா 7. சிவா 8. மாயோன் 9. இந்திரன் 10. தேவேந்திரன் 11. எமன் 12. முருகு 13. எல்லா 14. இறை 15. கடவுள் 16. தெய்வம் 17. ஆண்டவர் 18. தேவர் ….. எனும் பதினெட்டு ஆறுகளும் புகழ் பெற்றவை, புனிதமானவை. இளமுறியாக் கண்டம் கடலுக்குள் மறைந்த பிறகு தோன்றிய இன்றைய வட இந்தியாவில் தோன்றிய ஆறுகளில் சிலவற்றிற்கு இளமுறியாக் கண்டத்து ஆறுகளின் பெயர்களே வைக்கப் பட்டன. அதன்படி, ‘இந்து’ என்று பெயரிடப்பட்ட ஆறுதான் காலப் போக்கில் சிந்து என்று மாறிற்று. இவற்றையெல்லாம் மீண்டும் தமிழர்கள் உணர்ந்தால்தான் இந்துமதம் மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், செழுச்சிமிகு ஆட்சியும் பெற்றிட முடியும். இதற்காகத் தமிழர்களை அடிப்படையாகக் கொண்ட உலக வரலாறு மூன்று பெரும் பிரிவுகளாக எழுதப்பட்டன. 1. குருபாரம்பரியம் (இந்துமத வரலாறு = உலகமத வரலாறு (Religious History of the World) 2. அரச பாரம்பரியம் (உலக அரசியல் வரலாறு (The Political History of the World) 3. இலக்கிய பாரம்பரியம் (The History of the First Language of the mankind, the Tamil and the History of the Tamil Literature) எழுதப்பட்டன. இவை, தொடர்ந்து எழுதப்படும் மரபும் தோற்றுவிக்கப்பட்டு இடையிடையே நின்றிட்டன. இதற்கும் காரணம், தமிழர்களின் இனப்பற்றின்மை, மொழிப்பற்றின்மை, நாட்டுப்பற்றின்மை, வரலாற்றறிவு இன்மை…. முதலியவைதான்.
இவற்றையெல்லாம் எண்ணியே இந்த ஏளனம்பட்டியான் ஏடெடுத்து எழுதுவதிலேயே முழுக்காலத்தையும் செலவழிக்கத் தொடங்கி விட்டான். சித்தர்கள் சமசுக்கிருதத்தைச் சித்தர்களின் அருளுலக இலக்கியங்களால் உயிரூட்டியதும் தெய்வீகத் தன்மை பெறச் செய்ததும் பாம்புக்குப் பால் வார்த்தது போன்ற செயலே என்றுணர்ந்து வருந்தினர். அவர்களின் வருத்தம் பெருநெருப்பாக ஆகுமாறு பல ஆரியர்கள் ‘சமசுக்கிருத மந்திரங்களால்தான் இந்துமதப் பூசைகளும் சடங்குகளும் செய்ய வேண்டும்’ என்று கூறி இந்துமதத்தைச் செயல்நலம் குன்றச் செய்தார்கள். இதனால், சித்தர்கள் சாபமிட்டுச் சமசுக்கிருத மொழி பேச்சு வழக்கற்றுப் பிணமாகுமாறு செய்தனர். எனவேதான், இன்றுவரை சமசுக்கிருதம் ஆரியர்களால் கூடப் பேசமுடியாத ஒன்றாகி விட்டது. இந்தப் பிணத்தால் இந்துமதம் நலிவடைவதைத் தடுத்தேயாக வேண்டும். அதற்காகத்தான் காயந்திரி மந்தரம் அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தை ஒலி நயம் கெடாமல் அன்றாடம் நூற்றெட்டுத் (108) தடவை ஓதினால், பத்தி, சத்தி, சித்தி, முத்தி…. முதலியவற்றில் படிப்படியாகத் தேர்ச்சியடைவான். நாடு, மொழி, இனம், காலம்…. என்ற எல்லைகளைக் கடந்து இப்பூவுலகில் வாழும் எந்த மனிதன் வேண்டுமானாலும் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தைச் சொல்லி அருளுலகச் செல்வங்களை அடையலாம் (காயந்திரி மந்தரம் ஓர் உலக மந்தரம், மத வேறுபாடு இல்லாமல் ஓதலாம்) ஏனெனில், இவ்வுலகில் உள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களும், வழிபடு நிலையினரும், வழிபாட்டு வாசகங்களும்…. பதினெண் சித்தர்களால்தான் உருவாக்கப்பட்டவை.
ஞானி, தவசி, கடமைவீரர், இளைஞர், அருளாளர்…. முதலியோர்கள் ஒரு நாளைக்கு ஆறுகாலம் காயந்திரி மந்தரத்தை ஓத வேண்டும். இது காயசித்தி, மாயாசத்தி, ஓயாசத்தி, சாயாசத்தி…. எனும் நாற்பத்தெட்டு வகைச் சித்திகளையும் வழங்கும்.
தமிழில்,
ஓம் பராசத்தி நமச்சிவாய!
ஓம் நமச்சிவாய பராசத்தி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் உண்டங்களே! பிண்டங்களே!
உயிரினங்களே! பயிரினங்களே!
அண்டங்களே! பேரண்டங்களே!
அண்டபேரண்டங்களே!
விழிச்சி கொள்க! எழுச்சி கொள்க! செழிச்சி பெறுக!
யாமே அனைத்துமாக உதவுக!
காயந்திரி மந்தரம் கூறுகிறேன்!
பயனாகட்டும்! சுவையாகட்டும்!
முற்பிறப்பும் மறுபிறப்பும்
இப்பிறப்பிலேயே நிறைவாகட்டும்!
ஆவி ஆன்மா உயிர் மூன்றும் ஒன்றாகட்டும்!
அனைத்துக்கும் தாயாக! ஆயாவாக!
அப்பனாக! தாத்தாவாக! இருப்பவர்களே!
ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக!
உறையினின்று வாளை எடுத்து உள்ளே போடுவது போல காயந்திரி மந்தரம் சொல்லுவதற்கு முன்னும் பின்னும் இந்த வேண்டுகோள் வாசகங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாசகங்கள் பூசையின் ஆரம்பத்தில் கற்பூரம் ஏற்றியோ, புகைமூட்டியோ, யாகம் வளர்த்தோ, விண்மீன் பார்த்தோ, சூரியன் பார்த்தோ, நிலவு பார்த்தோ ஒரு முறை சொல்லப்பட்டவுடன் காயந்திரி மந்தரம் (108) நூற்றெட்டுத் தடவைகள் ஓதப்படல் வேண்டும். பூசை முடிக்கும் போது மேற்படி வாசகங்கள் ஒரு முறை சொல்லப்படல் வேண்டும். பக்குவத்துக்கேற்பக் கண்ணை மூடியோ, திறந்தோ காயந்திரி மந்தரம் ஓதலாம். ஓதும்போது இடையிடையே கண்ணைத் திறந்தும் மூடியும் ஓதலாம். அமர்ந்தோ, நின்றோ, ஒரே திசை பார்த்தோ, எட்டுத் திசையும் சுற்றியோ……. காயந்திரி மந்தரம் ஓதலாம்!
சமசுக்கிருதத்தில்
‘காயத்ரீ மஹா மந்த்ரம்’
ஓம் பூர்புவஸ்ஸ¤வ!
தத்ஸ விதுர் வரேண்யம்!
பர்கோ தேவஸ்ய தீ மஹி!
தியோ யோந! ப்ரசோத யாத்!
என்று ஆரியராலும், சமசுக்கிருதப் பற்றுடைய தமிழராலும் ஓதப்படுகிறது. இது தவறு, இது எந்தச் சத்தியையோ! சித்தியையோ! முத்தியையோ!… தரவே தராது. இது பத்திக்குப் பயன்படாது. எனவே, ஒவ்வொரு தமிழரும் உடனடியாக அன்றாடம் பதினெண்சித்தர்கள் பகர்ந்துள்ளது போல் காயந்திரி மந்தரம் முறையாக ஓதி நிறைவான அருள்நிலைகளைப் பெற வேண்டும். அதுதான், தனி மனிதர்களைக் காக்கும். தமிழைக் காக்கும், இந்துமதத்தைக் காக்கும்.
அனைத்து அருளாளர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் காயந்திரி மந்தரம் ஓதி அருட்செல்வர்களாக உருவாவதுதான், இந்து மத மறுமலர்ச்சிப் பணியை வெற்றி பெறச் செய்யும். இந்துமதமே உலக மானுடரைக் காக்கும்.