(15-02-1984 அன்று குருதேவரின் தலைமைப்பீடத்திலிருந்து விரகாலூர் சித்தரடியான் நாகராசன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்)
இன்றைய உலகிலே சாதாரண சித்து விளையாடல்காரர்கள் எல்லாம் மிகமிகப் பெரிய விளம்பரங்களைப் பெற்று விடுகிறார்கள். ஏராளமான பொருள்களை சேர்த்து விடுகிறார்கள். குறிகாரர்களும், சோதிடர்களும் கூட மிகமிகப் பெரிய விளம்பரங்களையும், பொருளதார வசதிவாய்ப்புக்களையும் பெற்று விடுகிறார்கள். எந்தவிதமான ஏட்டறிவோ, பட்டறிவோ, பாரம்பரியமோ, தத்துவமோ, சித்தாந்தமோ, கொள்கையோ, குறிக்கோளோ இல்லாத சாதாரண சாத்திர தோத்திரம் அறிந்த சாமியார்கள் கூட மிகப்பெரிய மடங்களாக, பீடங்களாக, ஆதீனங்களாக, சன்னிதானங்களாக வளர்ந்திடுகிறார்கள்.
இந்துமதத்தைப் பற்றி முறையாகத் தெரியாத கிருபானந்தவாரியார், சின்மயானந்தர், .... போன்றவர்கள் எல்லாம் இந்துமதத்தின் தலைவர்கள் போல விளம்பரங்கள் செய்து உலா வருகிறார்கள். இந்த நேரத்தில் சர்வவல்லமைகளையும், அனைத்துச் சித்திகளையும், அருளுலகப் பயிற்சிகளையும், முயற்சிகளையும், தத்துவ வாரிசுரிமைகளையும், வரலாற்றுப் பின்னணியையும் முழுமையான ஏட்டறிவையும், பட்டறிவையும் ... பட்டியலிட்டுக் காட்டுகின்ற அளவிற்கு பெற்றிருக்கின்ற நமது குருதேவர் மட்டும் எந்தவித ஆடம்பரமோ, ஆரவாரமோ, விளம்பரமோ இல்லாமல் அருளுலக மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், கிளர்ச்சிமிகு எழுச்சிக்கும், செழுச்சிக்கும் வழிசெய்யக் கூடிய புரட்சி வீரர்களாகத் தம்மிடம் வருபவர்களில் தக்காரைத் தேர்ந்தெடுத்துச் சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார், சித்தர்நெறி ஆர்வலர், சித்தர்நெறி ஆதரவாளர், ... முதலியவர்களை உருவாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்கும் பணியைச் செய்து வருகிறார்.
இதற்குக் காரணம் இந்துமதத்தைப் பற்றிய தவறான வரலாறுகளும், தத்துவங்களும், புராண இதிகாசக் கற்பனைகளும், மூடநம்பிக்கைகளும், மடமைகளும், கண்மூடிப் பழக்கவழக்கங்களும், தவறான சோதிடர்களும், கெடுதலே செய்யும் சூனியக்காரர்களும், பிறர்க்கு தீமையும் செய்யும் மந்திரவாதிகளும் மக்களைச் சுரண்டும் மதவாதிகளூம் ... காலப்போக்கில் கணக்கற்றுப் பெருகிவிட்ட இந்துமதத்தை சிதையாமலும், சீரழிவு இல்லாமலும், மரபுகளும், நெறிமுறைகளும் பாதிப்படையாமலும், நாத்திகர்கள் வெற்றியடையாமலும் இந்துமதத்தைக் காக்கும் மாபெரும் அரிய, கூரிய, சீரிய, நேரிய பணியில் ஈடுபட்டுள்ளார் நமது குருதேவர். இந்துமத செழுச்சியை இக்காலத்தில் எப்படி உருவாக்குவது என்ற கருத்திலேதான் இரவு பகலாக ஓய்வு ஒழிவின்றி உழைத்து வருகிறார் நமது குருதேவர். அவர் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்காகவும், உலக அருட்பேரரசுக்காகவும், உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்திற்காகவும், தனிமனித முத்திக்காகவும், குடும்ப அருள்நலத்திற்காகவும், சமுதாய அருள் வளத்திற்காகவும் அன்றாடம் பகலில் 11-1:30ம் இரவில் 11-1:30ம் பல்லாயிரக் கணக்கான உருவ அருவ அருவுருவ வடிவ நிலைகளில் எங்கும் நிறைந்து கலசப் பூசையால் அனைவருக்கும் அருட்சித்தி கிடைக்க அருள்புரிந்து வருகிறார்.... ... ...