Gurudevar-yaar
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் யார்?>
  • அருள் வாழ்க்கை
  • அருள் வாழ்க்கை

    அருள் வாழ்க்கை

    [26-11-1987இல் குருதேவர் தமது மதுரைச் சீடர்களுக்கு எழுதிய விளக்க அஞ்சலின் ஒரு பகுதி.]

    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    “... ... ... ... 5) பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு கால முயற்சிகளையும் செய்து முடித்த அருட்பேரரசர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதிக்கே நோய்கள் வருமா? அல்லது வரலாமா? அவர் மருந்துகள் சாப்பிடலாமா? ... குபேரனின் குடுமியையே தன் கையில் வைத்திருக்கும் குருதேவருக்கே பொருளாதாரச் சிக்கல்கள் வரலாமா? ... எமனையே நியமிக்கும் அதிகாரம் படைத்த அரசயோகி மரணகண்டங்களைத் தவிர்க்க மாபெரும் முயற்சிகளை செய்யத்தான் வேண்டுமா? முக்காலத்தையும் முழுதும் உணர்ந்த ஞானாச்சாரியார், ஞானத்தந்தை, அருட்பேரரசர் அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத சோதனைகளும், வேதனைகளும், சிக்கல்களும் வரலாமா? வரலாமா? வரலாமா? எல்லாம் வல்ல சித்தரான பதினெண்சித்தர் பீடாதிபதி “என் செயலாவது ஏதுமில்லை, எல்லாம் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே’ என்று கூறலாமா? கூறலாமா? கூறலாமா? உலகுக்கே படி அளக்கும் சிவபெருமானின் வாரிசான சித்தர் தனது தொண்டர்களிடம் பிச்சை கேட்பது போல் பொருள்களைக் கேட்டு வாழலாமா? ... என்ற வினாக்கள் முக்கலும் முனகலுமாக அரைகுறை பேச்சுக்களாக சிலரின் விமர்சனமாக, பலரின் ஆராய்ச்சியாக, ... இருந்து வருவதை அ.வி.தி. தலைமைச் செயலாளரே நினைத்துப் பார்க்காமல் போனது ஏன்? ஏன்? ஏன்? அல்லது நினைத்துப் பார்த்தும் வெளியில் கூறாமல் போனார்களா? ஏன்? ஏன்? ஏன்?

    6) நண்பர்களே மேலே எழுப்பப்பட்டுள்ள அனைத்து விதமான வினாக்களுக்கும் ஒரே பதில்தான். இம்மண்ணுலகில் மனித வடிவில் பிறந்து விட்ட காரணத்திற்காகத்தான் சந்திர குலத்துச் சித்தன் முருகப்பெருமான் படைநடத்தி வேலோச்சிப் போரிட்டு வெற்றி பெற நேரிட்டது. சூரிய குலத்துச் சித்தனான இராமதேவன் மனைவிக்காக அழுது புலம்பி அரற்றி ... வில்வளைத்துப் போரிட்டு வெற்றி பெற நேரிட்டது; சந்திர குலத்துச் சித்தனான (கிருட்டிணதேவன்) கண்ணதேவன் அநீதியை அழிக்க ஆயுதமே எடுக்காமல் பதினெட்டுக் கோடி அக்குரோணி சேனையையும் அழித்து வெற்றி பெற நேரிட்டது.

    இவர்களைப் போலவே சந்திர குலத்துக்கும் சூரிய குலத்துக்கும் விதையான, வாரிசாக இன்று வாழும் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாராகிய யாம் உலகியலுக்கேற்பவே அஞ்சியும் கெஞ்சியும், முடங்கியும் ஒடுங்கியும், ஏங்கியும் தேங்கியும், பதுங்கியும் ஒதுங்கியும், விலகியும் விலக்கியும், மறுத்தும் வெறுத்தும், மறந்தும் துறந்தும், இன்புற்றும் துன்புற்றும், வென்றும் தோற்றும், தயங்கியும் மயங்கியும், அழுதும் சிரித்தும், பகைத்தும் நகைத்தும், ... வகைவகையான வாழ்க்கைகளை வாழுகிறோம்! வாழுகிறோம்! வாழுகிறோம்! இதில் வெட்கப்படுவதற்கோ, வேதனைப் படுவதற்கோ ஏதுமில்லை! ஏதுமில்லை! ஏதுமில்லை!

    ஞாலகுரு சித்தர் கருவூறார் யாம் நூலறிவாளனாகவும், வாலறிவாளனாகவும் வாழ்ந்து காட்டியே வருகிறோம். அனைத்தையும் ஆத்தாக்கள் தாத்தாக்கள் கையில் ஒப்படைத்தே ஊழியக்காரனாக வாழுகிறோம் யாம். ... ... ... யாம் கூற வேண்டியதைக் கூற வந்திருக்கிறோம். எமக்குக் கிடைப்பவர்களில் எம்மிடம் நம்பிக்கையும், உண்மையான பற்றும் பாசமும் ஈடுபாடும் உடையவர்களுக்கு மட்டுமே இட்டும் தொட்டும் சுட்டியும் அருள் வழங்குகிறோம். மற்றவர்களுக்கெல்லாம் அருளுலகச் செல்வங்களை ஏட்டுச் சுரைக்காயாகவே வழங்குகின்றோம். இது எமது குற்றமல்ல! எமது செயல்பாடுகள்; “யாமார்க்கும் குடியல்லோம், எமனையும் அஞ்சோம் ...” என்ற அருட்கொள்கையின் விளக்கமாகவே இருக்கின்றன.

    எம்மைச் சோதிப்பவர்கள் சோதிக்கப்படுவார்கள். நான்காவது யுகத்தில் நடைபெறும் நாடகத்தில் யாம் அருட்பேரரசராக வேடம் பூண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எவர் திருத்தம் பெறாவிட்டாலும் எமக்கு வருத்தமே வராது. யாம் எம்மால் முடிந்தவரை அனைத்துவகையான அருட்செல்வர்களையும், வாழையடி வாழையாக உருவாக்கும் விதைப்பண்ணையாக, நாற்றுப் பண்ணையாக இருக்கிறோம், இருக்கிறோம், இருக்கிறோம். எம்மைத் தெரிந்தால் தெரிந்து, புரிந்தால் புரிந்து, விரும்பினால் விரும்பி ஏற்றுப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எமக்குப் பிறகு 36 பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்ற இருக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவுபடுத்தி இவ்வஞ்சலை நிறைவு செய்கிறோம்.”

    தலைவர், ஞானத்தந்தை, ஞானாச்சாரியார்,

    குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார்,

    12வது பதினெண்சித்தர் பீடாதிபதி.