Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • வள்ளலாரும், பரமஅம்சரும்
  • வள்ளலாரும், பரமஅம்சரும்

    வள்ளலாரும், பரமஅம்சரும்

    இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு

    அன்புச் சேவுக!

    (1) நீ, இந்தியத் துணைக்கண்டத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மாநாட்டில் கலந்து கொள்ள தில்லி மாநகர் சென்றிருக்கிறாய். உன் அனுபவம் தெற்கேயும் வடக்கேயும் ஒப்புநோக்கச் செய்திடும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களிடையே வறுமையும் பற்றாக்குறையும் ஏக்க நிலையும் நோய் நிலையும் ஆதிக்கம் செலுத்தும் பொழுது; புற வாழ்க்கையைப் போல்தான் அக வாழ்க்கையும் இருண்டிருக்கும். எனவே, வழிகாட்டும் சுடராய்! கலங்கரைவிளக்கமாய்! அகவிருள் அகற்றும் அருட்பெருஞ் சோதியாய்! விளங்கவேண்டிய ஆசிரியப் பெருமக்கள் முற்றிலும் அணைக்கப்பட்ட கரிக்கட்டைகளாக இருப்பதைக் காணலாம். இதற்குமேல், கட்டிடமே இல்லாத பள்ளிகள். ஆசிரியரே இல்லாத பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகள்… என்று பெயரளவில் உள்ள பள்ளிகளுக்கும்; அப்பள்ளிவாழ் மாணவர்களுக்கும் இடையேயுள்ள உறவுகளையும் உரிமைகளையும் ஆராய்ந்து புரிந்து கொள்.

    (2) நண்ப! தெற்கே, பள்ளிக்கூடத்துக்கே போகாத வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருட்பாக் கொடைவள்ளல், இராமலிங்க அடிகளாரையும் கல்கத்தா காளிகோயில் பூசாறி இராமகிருட்டிணப் பரமஅம்சரையும் ஒப்பிட்டு நோக்கி ஆய்வு செய்திடு. இரண்டு பேருமே ஏறத்தாழ எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளாதவர்கள்தான். இரண்டு பேருக்குமே கடவுள்கள் நேரில் தோன்றி வரமளித்தார்கள். தென்னாட்டு இராமலிங்க அடிகளாருக்கு முறையே சிதம்பரத்தில் நடனமிடும் கூத்தர்ப் பெருமான், திருத்தணிகை வாழ்முருகன், திருவொற்றியூர் வடிவுடைய மாணிக்கவல்லி… முதலியோர் நேரில் தோன்றி அனைத்து வகையான அருளையும் வழங்கினார்கள். ஆனால், வடநாட்டு இராமகிருட்டிணப் பரமஅம்சருக்குக் காளிதேவி மட்டுமே நேரில் தோன்றி அருள் வழங்கினாள்.

    (3) இராமலிங்க அடிகளார். பிறவியிலேயே மரக்கறி உணவு மட்டுமே உண்பவர் - காலப்போக்கில் பயிற்சித் தேர்ச்சியாலும், முயற்சி முதிர்ச்சியாலும் உண்ணுவன பருகுவன அனைத்தையும் நிறுத்தி அருவுருவ அமுதத்தேகம் பெற்றார். ஆனால் இராமகிருட்டிண பரமஅம்சரோ பிறவியிலேயே மீனும் கறியும் உண்ணும் பூசாறியாகப் பிறந்தவர், கடைசிவரை காளிக்கும் சுடுகாட்டுப் புதைகாட்டுத் தெய்வங்களுக்கும் தாந்தரீகப் பூசைகளுக்கும் படையலாகப் பயன்படுத்திய இறைச்சியையும் மீனையும் உணவாக உண்டே உலகியலாகச் சத்திதேவியின் வடிவமாக வாழ்ந்தவர்.

    (4) இராமலிங்க அடிகளார் ஈ, எறும்பு மொய்க்காத நோய் நெருங்காத பொன்வண்ண ஞான தேகம் பெற்றிட்டார். அருட்பெருஞ் சோதியாகி மறைவான இறையோடு எங்கும் நிறைந்திட்டார். இராமகிருட்டிணரோ உலகியலாக மனித தேகத்தோடு வாழ்ந்து மாண்டிட்டார்.

    (5) இந்த, இருவேறு அருளாளர்களையும்; தென்னாடு வடநாடு என்ற இருபெரும் நாட்டுப் பிரிவுக்கு இலக்காகக் கொண்டு விளக்கம் தேடினால்; இராமகிருட்டிணர், உலகம் முழுவதும் அறியப்பட்ட அருளாளராக நிறுவன நிர்வாக அமைப்புக்களோடு வளர்ந்துள்ளார். ஆனால், இராமலிங்க அடிகளாரோ தென்னாடு எனும் நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலத்தாருக்கு யாரென்றே தெரியாமலும்; தமிழ்நாட்டிற்குள்ளுள்ள (ஏறத்தாழ) இருபது மாவட்டத்தார்களில் இரண்டு மூன்று மாவட்டத்தார்களுக்கு மட்டுமே ஓரளவு தெரிந்தவராயிருக்கின்ற இரங்கத்தக்க நிலையையும் எண்ணிப் பார்த்திடுக. அப்பொழுதுதான், தமிழர்கள் எப்பொழுதுமே, தங்களுடைய மொழியையோ! இனத்தையோ! நாட்டையோ! பண்பாட்டையோ! நாகரீகத்தையோ! மதிப்பதில்லை! மதிப்பதில்லை!! மதிப்பதில்லை!!! மதிப்பதே யில்லை! விரும்புவதில்லை! விரும்புவதில்லை!! விரும்புவதில்லை!!! விரும்புவதேயில்லை என்ற பேருண்மை விளங்கிடும். அதாவது எப்படியோ தமிழர்களுக்குக் கூலிச்சிந்தையும் அடிமை நெஞ்சமும் ஏற்பட்டுத் ‘தங்களுக்கு அன்னியர்கள்தான் தலைவர்களாக இருக்க வேண்டும்’ என்ற கருத்தும் விருப்பமும் ஏற்பட்டுவிட்டது. இதைத் திருத்த முற்படுபவர்களே நாம்; என்ற உணர்வில் செயல்படு பிறரைச் செயல்படுத்து.

    அன்பு
    இந்து மதத்தந்தை,
    குருமகா சன்னிதானம்,
    ஞாலகுரு சித்தர் கருவூறார்.

    (குருதேவர் அறிக்கை 26இலிருந்து)

    தொடர்புடையவை: