Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • திராவிடக் கழகங்கள்
  • திராவிடக் கழகங்கள்

    திராவிடக் கழகங்கள்

    திராவிடக் கழகத்தின் உண்மை நிலை

    அன்புச் சேவுக!

    மகாத்மா காந்தியைப் போல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தி.க.வைப் பலமுறை கலைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம்,

    ‘என் பெயரைச் சொல்லிக்கிட்டு பொறுக்கித் திங்கிற கூட்டம் வளர்ந்து விடக்கூடாது. நான் யாரோ சிலருக்கு மட்டும் சொந்தக்காரன் என்று ஆகிவிடக் கூடாது.

    நான் சொல்ற கருத்துக்களை சாதி, மதம், கட்சி என்ற வேறுபாடெல்லாம் இல்லாம எல்லாரும் சிந்திக்கணும், செயலாக்க முயற்சிக்கணும். அப்பத்தான் மடமையெல்லாம் ஒழியும், பித்தலாட்டங்களும், ஏமாற்றுக்களும் போகும். இந்த காந்தி கூட சுதந்திரம் வந்திச்சு, காங்கிரசைக் கலைச்சுட்டேன் என்றாரு. ஆனா ஒரு பயலும் கேட்கவில்லை. ஏன்னா காங்கிரசுக் கட்சி என்று ஒன்றை வச்சுக்கிட்டு நாங்கதான் சுதந்திரம் வாங்கித் தந்தோம், நாங்கதான் சுதந்திரத்துக்காக கஷ்ட நஷ்டப்பட்டோம், எங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லி அவனவன் பட்டம் பதவின்னு வாங்க்கிக்குனு கொள்ளையடிகிறானுக! முதல்லே காந்தி சொன்னாப் போல இந்த காங்கிரசு கட்சியை ஒழிக்கணும். அப்பத்தான் இந்த நாட்டிலே நல்லது நடக்கும். இது மாதிரிதான் இப்பவே தி.க.வை கலைச்சுட்டேன். அவங்கவங்க விருப்பப் பட்ட கட்சியிலே சேர்ந்து தொண்டாற்றுங்க! நாட்டுக்காக நல்லது செய்யுங்க! தி.க.வில் உள்ளவர்களெல்லாம் காங்கிரசு கட்சியிலே சேர்ந்து பச்சைத் தமிழன் காமராசர் கையை வலுப்படுத்துங்க!’

    (இப்படி பெரியார் அறிவித்ததற்கேற்ப பல தி.க.வினர் காங்கிரசில் சேர்ந்தனர். இப்படிச் சேர்ந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இதை இன்றுள்ள தி.க.வினரும், காங்கிரசுவாதிகளும் ஏற்றுக் கொள்வார்கள். இது பற்றிய கார்டூன்கள் ஆனந்த விகடனில் காணலாம்.)

    இப்படிப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிக நுட்பமான தொலை நோக்குடன் தான் உண்டாக்கிய திராவிடக் கழகத்தைக் கலைத்திட்ட வரலாற்று நிகழ்ச்சியை தெரிந்து கொள்ளாத திராவிடக் கழகத்தவர்களே நிறைய உள்ளனர். எனவே, பெரியாரின் அந்தச் செயலைப் புரிந்து கொள்ளாதவர்களே இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர் என்பது தவறல்ல. பெரியார் பயந்தது போலவே, அவருடைய குறிக்கோள்களும், கொள்கைகளும் அவருடைய கழகத்துக்கு மட்டுமே உரியவை என்பது போல் அதனுடைய இன்றைய தலைவர், தளபதி கி. வீரமணி செயல்படுகின்றார். இது மிகவும் வருந்தத் தக்கது. பெரியார் ஈ.வெ.ரா. கூறிய கொள்கைகளையும், அடைய நினைத்த குறிக்கோள்களையும் செயல் வடிவில் வாழ வைக்கக் கூடியவர்களை யெல்லாம் ஒன்று திரட்டிச் செயல்பட வைக்கக் கூடிய தலைமைப் பண்பு, பொதுநோக்கு, தீவிரப் போக்கு, ஆர்வமிகு பேராற்றல் ….. முதலியவைகள் எதுவுமே இல்லாதவராகத்தான் தலைவர் வீரமணி உள்ளார்.

    அன்பு நண்ப! நண்பர் கி.வீரமணி அவர்கள், தமிழினத்தின் உரிமைக்கும், பெருமைக்கும் தமிழ்ச் சான்றோர்களின் உரிமைக்கும் பெருமைக்கும் கடுமையான சோதனைகள் ஆபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று தெரிந்தும், அதற்காகப் பல்வேறு துறையைச் சார்ந்த அனைத்துத் தமிழர்களையும் ஒன்று திரட்டி உரிமைக்காகவும், பெருமைக்காகவும் இறுதிவரை போராடவே இல்லை. ஏதோ பெயருக்கு ஆங்காங்கே ஓரிரு நாள் போராட்டங்களையும், ஒரு சில அறிக்கைகளையும் வழங்கிவிட்டு தொடர்ந்தோ, துணிந்தோ போராடாமல் கோழையைப் போல் விலகி ஒதுங்கி எதிலும் பட்டுக் கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றார்.

    நாம் முழுமையான பிறாமண எதிர்ப்பாளர் என்பதை உணர்ந்தும் நண்பர் வீரமணி அவர்கள் இன்றைய தினம் ‘தான், பிறாமணர்களின் எதிர்ப்பாளன் அல்ல; பிறாமணீய எதிர்ப்பாளனே’ என்று கூறி வருவதோடு, நம்முடைய செயற்குழுவிற்கு பேட்டி தர (23-3-1985) பொன்னேரியில் மறுத்து தன்னை சங்கராச்சாரியாரின் எதிர்ப்பாளனல்ல, தான் ஒரு பிறாமணதாசன் என மெய்ப்பித்துக் கொண்டார்.

    அன்பு நண்ப! நாம் பெரியார் தோற்றுவித்த திராவிடக் கழகத்தை இறுதியாக நம்பியிருந்தோம். அவர்களும் தங்களின் உண்மை வடிவத்தைக் காட்டிக் கொண்டு விட்டதால் வேறு வழியில்லை. நாம் தனித்தே தமிழினத் தந்தை தந்தை பெரியார் அவர்களின் மாபெரும் சமுதாய மறுமலர்ச்சிப் பணிகளை கட்டுரைகளாக, கவிதைகளாக, மந்தையிலே உரைகளாக சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றோம். ஏற்கனவே உள்ள சமய மறுமலர்ச்சிப் பணியோடு தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளையும் வெளிப்படுத்திச் செயலாக்குவோம்.

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 15இலிருந்து)

    தொடர்புடையவை: