காலடி ஆதிசங்கரர் காசியிலிருந்த போது கரூரிலிருந்து காக்கையரின் வேளாளர் குடியைச் சேர்ந்த சந்தானம் என்பவர் தேடி வந்து அடியானாக மாறினார்.
சந்தானத்தின் ஆழமான தமிழ்ப் புலமையையும், விரிவான இந்துமத இலக்கிய அறிவையும் உணர்ந்து போற்றி அவரைத் தலைமை மாணாக்கராக ஏற்றார் ஆதிசங்கரர். சமசுக்கிருத மொழிக்கு ஏற்ப அவரின் பெயரை சனந்தா (சுனந்தா) என்றழைத்தார். மற்றவர்கள் சனந்தர் என்றே அழைத்தனர்.
கங்கையின் ஒரு கரையில் சனந்தர் இருந்தபோது, குருவான ஆதிசங்கரர் மறுகரையில் இருந்து அழைத்த போது, வெள்ளப் பெருக்கின் மீது தனது தவ வலிமைப் பயிற்சியால் நடந்து வந்தபோது இவரின் திருப்பாதங்கள் தண்ணீரில் மூழ்கிடாமல் திடீர் திடீரென்று தோன்றிய அருட் தாமரை மலர்களால் தாங்கப் பட்டன. இது கண்டு வியந்த ஆதிசங்கரர் இவரை ‘அருட்தாமரைப் பாதர்’ என்று அழைத்தார். இப்பெயரும் சமசுக்கிருத மொழிக்கேற்ப ‘பத்மபாதர்’ எனப்பட்டது.
ஆந்திர கர்நூல் மாவட்டத்திலுள்ள சைலம் கோவிலில் தங்கி ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்து சிவானந்தலாகிரி என்ற நூலை எழுதிக் கொண்டிருக்கும் போது அவரைப் பலியிட்டு சித்திகள் பெற அவரிடமே அனுமதி பெற்ற உக்கிரபைரவன் என்பவன் அவரைக் கொலை செய்ய வாளை ஓங்கினான். உடனே, முதல் மாணாக்கனும், மெய்க்காவலனுமாகிய சந்தானம் அவனுடன் போரிட்டு கொன்று ஆதிசங்கரரைக் காப்பாற்றினார்.
பூரியிலுள்ள (ஒரிசா) கோவர்த்தன மடமான ‘விமலா பீடத்தை’ தனது மூத்த மாணாக்கனான சனந்தரிடம் ஒப்படைத்தார் ஆதிசங்கரர். மெய்யான இந்துமதக் கருத்துக்களை சமசுக்கிருதத்தில் ஆதிசங்கரர் மொழி மாற்றம் செய்வதற்குப் பேருதவியாய் இருந்த சனந்தரிடம் ஒப்படைத்ததால், அம்மட செயல்பாடுகள் யாவும் தமிழகத்தின் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டே பூசைகள் நிகழ்ந்தன. இன்னும் அவ்வாறே விளங்கக் காணலாம். மெய்யான இந்துமத மடமாக உள்ளது பூரிமடம்.
ஆதிசங்கரர் ‘செளந்தர்யலகரி’ மற்றும் ‘சிவானந்தலகிரி’ என்னும் நூலை எழுதினார். இவ்விரண்டும் பதினெண்சித்தர்களின் இந்துமதச் சாரமே ஆகும். ‘செளந்தர்யம்’ என்றால் அழகு என்றாகும். இலாகரி என்றால் மயக்கப் பொருளைக் குறிக்க கூடியது. ‘மனம் இலகுவாதல்’ என்றால் சுமையற்று இருத்தல், கவலைகள் மறத்தல், மயங்கித் தூங்குதல் என்பது பொருளாகும். ‘இலகு’ என்பதே வேர்ச்சொல் (Root Word). ‘இலகு’ என்னும் அடிப்படைச் சொல்லைக் கொண்டு பிறந்ததே இலாகிரி என்னும் சொல்லாகும். எனவே, ‘செளந்தர்ய இலாகிரி’ என்னும் ஆதிசங்கரர் குறிப்பிட்ட சொல் அழகிய தமிழ்ச்சொல்லே!
‘காசுமீர குருவழி ஆச்சாரியார் மண்டன மிச்சுரருடனும் அவரது மனைவியான சரசவாணியுடனும் வாதிட்டவர் ஆதிசங்கராச்சாரியார் அல்ல; சிவபத்தியில் சிறந்த சங்கராச்சாரியாரே’ என்ற குறிப்பும்; ‘இல்லையில்லை, சரசவாணியுடன் வாதிட்டது ஆதிசங்கராச்சாரியாரே யாவார்!’ என்ற குறிப்பும் ஆக இருவேறு குறிப்புகள் உள்ளன.
சரசவாணியோடு வாதிட்டபோது இல்லறம் என்னும் அகத் துறையின் மோகம், ஈகம் (மணம்), போகம், தாகம் என்னும் நான்கினுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
இல்லற இன்பம் காண திடீரென்று மாண்ட காசி மன்னன் அமருகனின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து 48 நாட்களுக்கு மேல் அரசியுடனும், மற்றையோருடனும் இன்பம் துய்த்து அரண்மனையில் இருந்தார் ஆதிசங்கரர். ஈக, போக, தாகங்களை அனுபவித்தார் ஆதிசங்கரர்.
ஆதிசங்கரரின் உடலை தீவைத்துக் கொளுத்த முயன்ற போது மீண்டும் தன் உடலில் புகுந்து தீப்புண்களுடன் உயிர் தப்பினார். இடுப்புக்குமேல் பகுதிகள் தீக்காயங்களுக்கு உள்ளாயின. பின்னர் அவர் தனது தவறுணர்ந்து இமயமலை நோக்கி இறுதி சித்திப் பயணம் மேற்கொண்டார்.
சிருங்கேரி, பூரி, துவாரகை, பத்ரிநாத் ஆக நான்கு மடங்களும் காலடி ஆதிசங்கராச்சாரியாரால் துவக்கப்பட வில்லை.
உலககுரு, சகடகுரு, (லோககுரு, சகத்குரு) என்ற தமிழ்ச் சொல்லின் உண்மைப் பொருளை உணர்ந்து ஏற்றவர் ஆதிசங்கரர். அதாவது, பெண்ணின்பத்தைத் துய்த்தவர்களே இக்குரு நிலையில் நின்று செயல்படலாம். ஆனால், துறவறத்தை மேற்கொண்டுள்ள இன்றைய சங்கராச்சாரியார்கள் லோககுரு, ஜகத்குரு என்று வைத்துக் கொண்டுள்ளது சிரிப்புக்கிடமாகும்.
சரசவாணி இல்லறம் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு பெண்ணின்பம் துய்த்த பின்னரே ஆதிசங்கரர் பதில் அளித்ததால் அவருக்கு ‘சரசுவதி’ என்றும் ‘சர்வக்ஞர்’ என்றும் பட்டங்கள் வழங்கினார். இதை உணராமல் தாங்களும் (இன்றைய சங்கராச்சாரியார்களும்) இப்பட்டங்களை வைத்துக் கொண்டிருப்பது கேலிக்குரியது என்பது சங்கர மடத்தாருக்குத் தெரியாதோ?
இராமநாதபுர மாவட்டத்தில் தாயுமானவ சாமிகள் தவநிலையில் ஆழ்ந்திருந்த போது அவருக்கு இட்ட நெருப்பு அவரின் காலைச் சுட்டு கருக்கியது. பின்னர் தமிழ் மந்திறத்தால் நலமடைந்தார். இவரைப் போலவே (தமிழ் மந்திறத்தால்) ஞானசித்தரான ஆதிசங்கரர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பெண்ணின்பம் துய்த்த போது தமது தமிழ் மந்திற வலிமையை உலகுக்கு எடுத்துக் காட்டவே உடலின் மேற்பகுதி தீச் சுட்டுக் கரியாக்கும் வரை அமைதியாக இருந்தார். பின்னர் தன்னுடலில் புகுந்து, சுட்ட புண்களை தமிழ் மந்திறம் கூறி நலமாக்கிக் கொண்டு இமயமலை போந்தார்.