எல்லா மதங்களுமே (ஏறத்தாழ) முற்பிறப்புக்களையும் மறுபிறப்புக்களையும் ஒப்புக் கொள்கின்றன. அதனால்தான் இறந்தவர் பிறந்தே ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.
முற்பிறப்புக்களையும் மறுபிறப்புக்களையும் மறுக்கக் கூடிய மதங்கள் கூட இறப்புக்குப் பிறகு இன்பமான அல்லது துன்பமான (அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கான) வாழ்க்கை உண்டு என்பதை ஒத்துக் கொள்கின்றன. அதாவது இறந்தவர் புது வாழ்வு வாழ பிறந்தே ஆகிறார்கள் (அருவமாக).
அறிவியல் (Science) “உலகிலுள்ள எந்த பொருளுமே அழிவதில்லை. ஆனால் ஒன்று மற்றொன்றாக மாறுகின்றது” என்று கூறுகின்றது. இதன்படிப் பார்த்தால் இறப்பு என்பது பொருளின் மாற்றம்தானே ஒழிய பொருளின் முடிவு அல்ல. எனவே இறப்பின் மூலம் ஒரு மாற்றம் நிகழ்கின்றது என்று புலப்படுகின்றது. அதாவது, ஒரு புதிய பொருள் பிறக்கின்றது என்பது புரிகின்றது. எனவே, இறந்தவர் பிறந்தே ஆக வேண்டும் என்பது மெய்ப்பிக்கப்படுகின்றது. உண்மையாக்கப் படுகின்றது. நிரூபிக்கப்படுகின்றது, தெளிவாக்கப் படுகின்றது.
இறந்தவர் பிறக்கின்றார்கள் என்பதை நடைமுறை வாழ்க்கையிலேயே உணர்வதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை பிறந்தால் இந்த குழந்தை பாட்டனைப் போல் இருக்கின்றது, பாட்டியைப் போல் இருக்கின்றது, மாமனைப் போல், அத்தையைப் போல், மாமியைப் போல், தகப்பனைப் போல் …. இருக்கின்றது என்று சொல்வார்கள். இதை வாழ்கின்ற மனிதன் வாழ்ந்து இறந்து போன மனிதனின் அங்கமாக இருப்பதால்தான் இப்படி பிறக்கின்றவர்கள் இறந்தவர்களைப் போல் இருக்கிறார்கள் என்று விளக்கம் சொல்வார்கள். அப்படிப் பார்க்கப் போனால் இறந்தவர் உண்மையிலேயே இறக்க வில்லை என்பது புலனாகின்றது. அதாவது, இறந்தவர்கள் பலராகப் பிறந்து பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இறந்தவர்கள் பிறந்தே ஆக வேண்டும் என்று தெளிவாக்கப் படுகின்றது.
உலக நாகரீகங்களையும் மனிதப் பண்பாடுகளையும், வரலாற்று நிகழ்ச்சிகளையும் முறையாக ஆராயும்போது நிகழ்ந்தவை, கைவிடப் பட்டவை, மறக்கப் பட்டவை, மறுக்கப் பட்டவை, மறைக்கப் பட்டவை, அழிக்கப் பட்டவை, தோல்வியாக்கப் பட்டவை, முடிவு செய்யப் பட்டவை, ஒதுக்கப் பட்டவை, வெறுக்கப் பட்டவை….. இவைகளெல்லாம் மாறி மாறியே வந்து இருக்கின்றன. இதைத்தான் வரலாற்று ஏடுகளும், நாகரீக வரலாறுகளும், சமுதாய இயல்களும், பண்பாட்டு வளர்ச்சியும் காட்டுகின்றன. அதாவது ஒரு காலத்தில் அழிந்த அரசுகள் மற்றொரு காலத்தில் செழித்து இருக்கின்றன. ஒரு காலத்தில் வீழ்த்தப் பட்டவர்கள் மற்றொரு காலத்தில் தங்களை வீழ்த்தியவர்களை வீழ்த்தி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நாகரீகம் இல்லை என்று கருதியதை மற்றொரு காலத்தில் மீண்டும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் பண்பாட்டுக்கு உகந்ததில்லை என்று ஒதுக்கித் தள்ளியதை உவப்போடு ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியே ஒரு காலத்தில் வாழ்ந்த வீரர்களைப் போன்று மீண்டும் வீரர்கள் பிறந்து இருக்கிறார்கள். ஒரு காலத்தில் வாழ்ந்த சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அழகிகள், …. இவர்களைப் போன்று மீண்டும் பிறந்து இருக்கிறார்கள். எனவே, இறந்தவர்கள் பிறந்தே ஆக வேண்டும்.
கடவுளே பலமுறை அவதாரம் எடுத்ததாகச் சொல்லப் படுகின்றது. பல மதத் தலைவர்களும் பலமுறை அவதாரம் எடுத்ததாகச் சொல்லப் படுகிறார்கள். இவற்றை நோக்கும் போது இறந்தவர் பிறந்தே ஆக வேண்டும் என்பது புலனாகின்றது.
ஒவ்வொருவரும் பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டும் என்றே வேண்டுகின்றார்கள். பிறப்பை அறுப்பது முத்தி என்று சொல்லுகின்றார்கள்.
பிறப்பிறப்பென்பது உயிரின் அளவிலா, உடம்பின் அளவிலா, ஆன்மாவின் அளவிலா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். இதற்குரிய விடையாக ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விடையைக் கூறுகின்றது. அப்படிக் கூறுவதனாலேயே எந்த விடை சரியான விடை என்று தெரியாத குழப்பம் வந்து விடுகின்றது. ஐம்பூதங்களால் ஆகிய இந்த உடல் ஐம்பூதங்களாகவே பிரிந்து விடுகின்றது. எனவே, பிறந்தவர் இறக்க வில்லை என்பது உடம்பைப் பொறுத்த வரை உண்மையாகும். உயிர் அணுக்களால் ஆகிய உயிர், உயிர் அணுக்களாகவே இருக்கின்றது. அதாவது அண்டப் பெருவெளியில் இருந்த உயிர் அணுக்கள் பிண்டத்துக்குள் நுழைந்தன. பிண்டத்துக்குள் நுழைந்த உயிரணுக்கள் இறப்பினால் அண்ட வெளிக்குப் போய் விடுகின்றன. எனவே, உயிர் அணுக்கள் இறக்க வில்லை. இதனால், பிறாந்தவர் இறக்கவில்லை என்பது உண்மையாக்கப் படுகின்றது.
(இறைவனிடமிருந்த ஆன்மா) விண்ணிலிருந்து ஆன்மா மண்ணுக்கு வந்தது. அதுவே மீண்டும் விண்ணுக்குப் போய்விட்டது. (இறைவனிடம் சேர்ந்து விட்டது). எனவே, ஆன்மா இறக்க வில்லை. எனவே, பிறந்தவர் இறக்க வில்லை என்பது இந்த வகையிலும் மெய்ப்பிக்கப் படுகின்றது. இறைவனே ஒவ்வொரு அவதாரங்களிலும் இறக்கின்றான். ஒவ்வொரு அவதாரங்களிலும் பிறக்கின்றான். எனவே, பிறப்பும் இறப்பும் உடைய இறைவனிடம் பிறப்பும் இறப்பும் வேண்டாம் என்று வேண்டிக் கொள்வது பைத்தியக் காரத்தனம்.
உடம்பைப் புதைத்தாலும், எரித்தாலும் அது ஐம்பூதங்களாகத்தான் பிரிகின்றது. அப்படியல்லாமல் உடம்பு வானாக (காற்று) மட்டும் மாற வேண்டும். அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு. அதாவது, உடம்பை ஒளி ஊடுருவ வேண்டும். உடம்பின் நிழல் கீழே விழக் கூடாது. உடம்பை எந்த பொருளாலும் தொட முடியாத நிலை வர வேண்டும். இது இரசவாதத்தை ஒத்தது. செம்பும், இரும்பும் தங்கமாக மாறினால், அல்லது இறந்தவர் பிழைக்க வைக்கப் பட்டால் இதுவும் சாத்தியமாகும்.
இது முடியும் என்று ஐன்சுடீன் அணுக் கொள்கை சொல்லுகின்றது.
e = mc^2 Energy = mass x velocity of light x velocity of light
அதாவது, ஒரு சத்தி இன்னொரு சத்தியாக மாற்றப் பட முடியும் என்பதை அறிவியல் ஒப்புக் கொண்டு விட்டது. அதே போல் பொருளும் சத்தியாக மாற முடியும்; சத்தியும் பொருளாக மாற முடியும். எனவே, இது மதத் துறையில் நம்பத் தக்கது.
மலைமுகடும் அலை கடலும் பல நூறாயிரம் ஆண்டுகள் அழியாமல் இருக்கும் பொழுது மனிதனால் மட்டும் ஏன் அழியாமல் வாழ முடியாது’ இந்த வினாவிற்குரிய விடையை மண்ணிலே தேடியவர்கள் உண்டு. அதாவது, பச்சிலை மூலிகைகள், உலோகங்கள், நஞ்சுகள் (நவ பாசாணம்), உப்புக்கள், அமிலங்கள், நீர்கள், கற்கள்….. முதலியவற்றைக் கொண்டு முயற்சிகள் செய்யப் பட்டன. இந்த முயற்சிகள் மனித உடலை பிணி, மூப்பு, திரை, இறப்பு முதலியவற்றிலிருந்து காப்பாற்றும் காய கல்பத்தைத் தந்ததா இல்லையா என்பது மறைபொருளாகவே (இரகசியமாக Secrets) இருக்கின்றன.
கண்ணுக்குத் தெளிவாக உடம்பு அழிகின்றது. ஆனால், கற்பனைக்குக் கூட உயிர் அழிவது தெரிவதில்லை. உயிரும் உடலும் இணைந்திருந்து பிரிவதால்தான் இந்தக் குழப்ப நிலை. உயிருக்கும், உடலுக்கும் ஏற்பட்ட உறவு என்றென்றும் முறிவு படாமல் இருக்க வேண்டும். அதற்குரிய வழியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
உடம்பு கரி (Carbon), உப்பு (Nitrogen), நெருப்பு (Oxygen), நீர் (Hydrogen) முதலிய நான்கு பொருள்களின் கூட்டினால் உண்டாகியது உடல்.
ஒலி (Sound), ஒளி (Light) இவை இரண்டும் சேர்ந்த கூட்டுப் பொருளே உயிர்.
உயிரும் உடம்பும் கூட்டுப் பொருள்களே. இருந்தும், உயிரும் உடம்பும் ஒன்றாகக் கூடி ஓர் புதிய கூட்டுப் பொருள் உண்டாக முடிவதில்லை. அப்படி ஒரு கூட்டுப் பொருள் உண்டாகுமேயானால் அதுவே இறவாநிலை பெற்று இருக்கும். எனவே, அதுவே பிறவா நிலையும் பெற்று விடும். அந்த நிலையே மரணமில்லாத பெருநிலை. அதாவது, பிறப்பு, இறப்பு இல்லாத பேரின்ப நிலை. அதாவது, அது வானை விட உயர்ந்தது, காற்றை விட வேகமானது, நெருப்பை விட ஆற்றல் வாய்ந்தது. நீரை விட ஆக்கும் சத்தி வாய்ந்தது. மண்ணை விட வளமிக்கது. இப்படிப் பட்ட ஒன்று காலத்தால் வெல்லப் படாதது, நீரில் கரையாதது, நெருப்பில் வேகாதது, மண்ணுள் மக்காதது, காற்றால் அசைக்கப் படாதது.
மனித உடல் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை வளர்ந்து, தளர்ந்து, ஒளிவிட்டு, ஒளி குன்றி, பொலிவு பெற்று, நலிவுற்று, வலிவு பெற்று, வலிவற்று மாறி வருகின்றது. ஆனால், உயிரும் உடம்பைப் போல் இந்த மாற்றங்களைப் பெறுகின்றதா? என்ற வினாவிற்கு விடை கண்டவர் இல்லையா? அல்லது கண்டவரில் விண்டவர் இல்லையா?
இவற்றிற்கெல்லாம் விடை மாண்டவர் மீண்டு வந்தால்தான் உண்டு. அந்த விடைக்கு விடை மீண்டவர் மாண்டு போகாமல் இருக்க வேண்டும். இவற்றை எல்லாம்……
உடம்பை வளர்க்க எத்தனையோ வகையான உணவுகள் உண்டு. உயிரை வளர்க்க கண்ட உணவு என்ன?
உலகில் ‘தானே அவன்’ என்ற கொள்கையை உடையவர்கள் உண்டு. இக் கொள்கை தவறானது என்று சொல்லுபவர்களும் உண்டு. ஆனால், இரு திறத்தாருமே (இரண்டு பக்கத்தைச் சார்ந்தவர்களும்) “முயற்சித்தால் ஒவ்வொரு மனிதனும் இறைவனை அடையலாம்” என்பதை ஒப்புக் கொள்கின்றார்கள்.
இறைவனைச் சென்று அடைவதில் ஒரு சில கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன. இறைவனின் அருகிலேயே இருக்கின்ற வாய்ப்பைப் பெறுவதுதான் இறைவனைச் சேர்தல் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இறைவனோடு இரண்டறக் கலப்பதே இறைவனைச் சேர்தல் என்பர் மற்றொரு சாரார்.
இறைவனாகவே மாறுவதுதான் இறைவனைச் சென்றடைவது என்பர் பிறிதொரு சாரார். இறைவனின் ஏவலுக்கு உட்பட்டவனாக வாழ்வதுதான் இறைவனைச் சேர்தல் என்பர் மற்றொரு சாரார்.
இறைவனையும் ஏவல் கொள்வதுதான் இறைவனைச் சென்றடைவது என்பர் பிறிதொரு சாரார். இறைவனாகவே அவனைத் தேடிவந்து பணி செய்வதுதான் இறைவனைச் சென்றடைவது என்பர் மற்றொரு சாரார்.
Note:
இறைவனைச் சென்றடைவது என்றால் உயிர்கள் இறைவனிடமிருந்து வந்தனவா? அல்லது எங்கிருந்தோ வந்த உயிர்களை இறைவன் தனக்குரியவைகளாக மாற்றிக் கொள்கின்றானா? அல்லது தானாகத் தோன்றுகின்ற உயிர்களை இறைவன் தனக்குரியவைகளாக ஆக்கிக் கொள்கின்றானா?
உயிர்கள் இறைவனிடம் தான் சென்றடைவது என்பது என்ன அவசியம். உயிர்கள் இறைவனைச் சென்றடைவதில் யாருக்கு இலாபம்? இறைவனுக்கா? உயிருக்கா?
இறைவனைச் சென்றடைந்த பிறகு, அந்த உயிர்கள் என்ன ஆகின்றன?
உயிர்கள் இறைவனிடமிருந்துதான் பிறக்கின்றன என்று ஒத்துக் கொண்டால் அந்த உயிர்கள் மீண்டும் இறைவனை சென்றடைவது இயற்கையே. ஏனென்றால், இறைவன் ஆரம்பமாகவும், முடிவாகவும் இருக்கின்றவன்.
இறைவனிடமிருந்து பிறந்த உயிர்கள் பாவத்தைச் செய்கின்றன என்று சொல்வது நம்ப முடியவில்லை. எல்லாம் வல்லவனாக, எங்கும் நிறைந்தவனாக, எல்லாம் புரிந்தவனாக இருக்கக் கூடிய இறைவனிடமிருந்து வல்லமையில் குறுகிய, குறிப்பிட்ட இடத்தில் இருக்கக் கூடிய மிகச் சிலவற்றையே தெரிந்து கொள்ளக் கூடிய அற்ப ஆற்றலை உடைய உயிர்கள் பிறக்கின்றன. இது உலகியலோடு பொருந்துவதாக தெரியவில்லை. ஏனென்றால் மகன் தந்தையை விட எல்லாவற்றிலும் ஆற்றல் மிகுதி உடையவனாக இருந்தால்தான் தந்தைக்குப் பெருமை. இங்கு அற்ப ஆற்றல் உடைய மனிதனால் அவனுடைய தந்தையாகிய இறைவனுக்கு சிறுமையே ஏற்படுகின்றது.
இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்கின்ற பொழுது இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள உறவு பற்றி நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப் போனால் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு உண்டா? உயிர்கள் இறைவனிடமிருந்து அருளையும்; இறைவன் உயிர்களிடமிருந்து அன்பையும் பெற நினைப்பது உண்மையா?
உயிர்கள் செய்யக் கூடிய நன்மை தீமைகளை அளந்து அறிந்து அவற்றிற்கேற்ப பயன்களை அளிப்பவன் இறைவனா? விதி என்பது ஒன்று உண்டா? (வினை) கர்மம் (ஊழ்வினை) என்று ஒன்று உண்டா? இவைகளெல்லாம் ஏன் இருக்கின்றன? உயிர்கள் இவற்றை வென்றுதான் இறைவனைச் சேர வேண்டுமா?