ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தஞ்சைப் பெரிய கோயிலை நான்காண்டு காலத்திற்கு மேல் கோயில் கோபுரத்தின் மேல் பகுதியை மூடாமல் மொட்டைக் கோபுரமாகவே வைத்திருந்தார்.
அவர் உலகியலாகப் பல காரணங்கள் சொன்னாரே தவிர, அவருக்குத் தமிழ்நாட்டு அரசியலிலும், சமுதாயத்திலும் மிகப் பெரிய தோல்விகள் ஏற்பட்டதால்தான் அது நிகழ்ந்தது. தமிழ் மொழி, இனம், நாட்டைக் காப்பதற்குத்தான் அவர் கருவறைக் கோபுரமுடைய கோயிலைக் கட்டினார். மிகவும் கடினமான இம்மாபெரும் செயலைச் செய்தது மட்டுமல்லாமல், கருவறைக் கோபுரத்தை உடைய கோயிலை எப்படி கட்டுவது என்ற இரகசியத்தையும், பதினெட்டு வகை அருட்கலைகளையும், ஐந்திறப் பூசை முறைகளையும், அருளுலக வாழ்வுக்குரிய சாத்தர, சாத்திற, சாத்திர, தோத்தர, தோத்திர, தோத்திறங்கள் எனப்படும் பதினெட்டு வகையான அருளுலக இலக்கியங்களையும் மற்றவற்றையும் மனந்திறந்து பலருக்கும் கற்றுக் கொடுத்தார்.
இமயம் முதல் குமரி வரை இது போன்று பல கோயில்களைக் கட்டுவதற்கும் ஏற்பாடுகளைச் செய்தார். பொதுவாகவே கருவறைக் கோபுரமாக ஓராள் உயரம் (6 அடி) முதல் மூன்று ஆளுயரம் (3 x 6 = 18 அடி) வரை கருவறைக்கு மேல் கோபுரம் கட்டும் மரபு இருந்து வந்தது. சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார்தான் தஞ்சைப் பெரிய கோயிலுக்காக அடிக்கல்லிலிருந்து உச்சி வரை 48 ஆளுயரமுடைய கருவறைக் கோபுரம் கட்டினார். பிறகு திடீரென்று தம்முடைய முடிவைப் பற்றித் தீர்மானம் செய்தவுடன், கோபுரத்தின் உச்சியை ஒற்றைக் கல்லால் மூடி விடுகின்றார்.
இது பற்றி அவரே குருபாரம்பரியத்தில்,
“அந்த உயரிய கோபுரத்தாலோ அல்லது அதனருகில் நிலவறையில் தாம் தவத்தில் அமர்வதாலோ தமிழர்கள் தங்களுடைய அருளுரைகளையும், அறிவுரைகளையும், பயிற்றுரைகளையும், பயிற்சிகளையும், முயற்சிகளையும் எண்ணிப் பார்த்துத் தங்களுடைய குருதேவர், குருபீடம், ஞானாச்சாரியார், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் காலங்கள் தோறும் தமிழர்களுக்கிடையில் தோன்றி எல்லா வகையான நலிவுகளையும், மெலிவுகளையும், தளர்ச்சிகளையும், சிதைவுகளையும் செப்பனிடுவதற்காகத்தான் பாடுபட்டுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவா போகிறார்கள். அருளாட்சிக்காக உருவாக்கப்பட்ட அருட்பேரரசான சோழப் பேரரசின் வளர்ச்சி நிலைகளுக்கும், வீழ்ச்சி நிலைகளுக்கும் உரிய மெய்யான காரணங்களை எண்ணிப் பார்க்கவா போகின்றார்கள்? ஏறத்தாழ இனிமேல் என்றைக்குமே தமிழர்கள் மொழியின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ ஒற்றுமைப்பட வழியேயில்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு சமுதாயத் தத்துவமோ, கட்டுப்பாடோ, புதிய புதிய கட்டமைப்புக்களோ எளிதில் உருவாக்கவே முடியாது, எளிதில் உருவாகவும் முடியாது. அதற்கு அன்னிய மதங்களும், அவற்றால் விளைந்த சாதி மத வேறுபாடுகளும், கலவரங்களும்தான் காரணம். இம்மாயையிலிருந்து தமிழர்களை விடுவிக்கவே முடியாது. இதன் அடிப்படையில்தான் தமிழர்களுக்கென்று, தமிழினத்துக்கென்று எந்த ஒரு சிறிய எல்லைக்குட்பட்ட அரசாங்கத்தையும் வருங்காலத்தில் உருவாக்கவே முடியாது.
அதாவது தமிழர்களின் அரசியல், கொள்கை, குறிக்கோள், கோட்பாடு, செயல் சித்தாந்தம்,…. முதலிய அனைத்துமே தொன்று தொட்டுப் பாரம்பரியமாக இருந்து வரும் பண்பாட்டுப் பிடிப்பினையும், நாகரீகக் கட்டுப்பாடுகளையும் முழுக்க முழுக்க இழந்து விட்டன. அனைத்தையுமே துறந்து விட்டன. எனவேதான், இனி வரும் பீடாதிபதிகள் கடந்த நான்கு யுகங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் வந்துள்ள பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறி எனும் சீவநெறியான மெய்யான இந்துமதத்தைப் பற்றிய அனைத்து வகையான செய்திகளையும், செயல் நிலை விளக்கங்களையும், பிற நடைமுறைகளையும், இலக்கியங்களையும் விளக்கி யுரைத்து மெய்யான இந்துமத மறுமலர்ச்சியின் மூலம்தான் தமிழர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தி அருளுலகக் காவலர்களாகவும், மூலவர்களாகவும் மாற்றிட வேண்டும். அதுதான் இம்மண்ணுலகம் முழுதும் அருளாட்சி உருவாகிட வழிவகை செய்திடும். அந்த முயற்சிகளுக்குத் தூண்டுதலாகவும், துணையாகவும் இருப்பதற்காகத்தான் தஞ்சைச் சத்தி இலிங்கக் கருவறைக் கோபுரத்தை மொட்டையாக நிறுத்தாமல் நிறைவு செய்கின்றோம். இதனருகிலேயே எமது நிலவறையை அமைக்கின்றோம்….” என்று குறிப்பிடுகின்றார்.