ஞானாச்சாரியார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ‘நிலவறையின் வாயிலிலே’ என்ற தலைப்பிட்ட குரு பாரம்பரிய வாசகங்களில் அருள் வாக்கும் இந்து மதமும் என்ற தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார். அதில் ஒரு சில துளிகள்.
“… மனித வாழ்க்கை என்பது முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனாய் உருவாகிட்ட ஊழ்வினை என்னும் சத்தியின் வலிமையான திட்டங்களின் படிதான் அமையும். இந்தத் திட்டங்களுக்கிடையில் மனிதனை இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள், ஏக்க ஏமாற்றங்கள், நோய் நொடிகள், இழிவழிவுகள்…. எனும் பல நிலைகளுக்கு ஊடே அலைந்து திரியும்படிச் செய்வது விதியென்ற ஒரு சத்தியே யாகும். இந்த விதியும் ஏழு நாள்கள், ஒன்பது கோள்கள், 12 இராசிகள், 27 விண்மீன்கள் என்பனவற்றை அங்கங்களாக அல்லது ஏற்புச் சத்திகளாகக் கொண்டு இயங்குவனவே ஆகும்.
மனிதர்கள் தங்களின் வாழ்வின் நல்லவை, அல்லவை, இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நோய்நிலை, பேய்நிலை,… முதலியவைகளின் ஆட்சிக்குரிய காரணங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் ஊழ்வினையும், விதியும் வலிமையாக அமைந்திருக்கின்றன. இவையிரண்டோடு அல்லாமல் தீயவை செய்யும் மந்திரவாதி என்ற ஒரு மூன்றாவது சத்தியும் மனிதர்களுக்கு புரியாமை நிலையில் தொல்லைகளை வளர்க்கிறது. எனவேதான், இந்த மந்திர வாதியையும், ஊழ்வினை, விதி முதலியவைகளையும் முறையாக வென்று நிறை வாழ்வு வாழுமாறு மனிதர்களுக்கு உதவுவதற்காகவே ஞானாச்சாரியார்கள் தங்களுடைய வாழ்நாளின் ஒரு பகுதியை ‘அருள்வாக்கு வழங்கல்’ எனும் அருட்பணியில் செலவழிக்கிறார்கள்.
அதாவது, பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கில் ஏதாவது ஒன்றையாவது ஒவ்வொரு மனிதனும் பெற்றிட வேண்டும் என்பதற்காகவே மனித வாழ்வில் குருவின் துணையோ அல்லது திருவின் அருளோ கிடைப்பதற்குரிய வழிவகைகளை அருள் வாக்கின் மூலம் ஞானாச்சாரியார்கள் நேரடியாகவோ அல்லது தாங்கள் உருவாக்கிய அடியான், அடியாள், அடியார் மூலம் எல்லா பொதுமக்களுக்கும் வழங்குகிறார்கள்.
ஆனால் எல்லா பொதுமக்களுமே தானென்ற வம்பு, வீம்பு, அகம்பாவம், ஆணவம் எனும் நான்கினாலும் அலைக்கழிக்கப்பட்டு வீணாகி விடுகிறார்கள். கோடியில் ஒருவர் இருவர் இந்தப் பாதிப்புக்களுக்குத் தப்பிப் பிழைத்துக் குருவின் அருளையோ, திருவின் அருளையோ பெற்றிட்டாலும்; பேராசை, அதிகார வெறி, போட்டி, பொறாமை எனும் நான்கு வகைப்பட்ட மாயைகளால் தங்களுக்குக் கிடைத்திடும் குருவின் அருளையும், திருவின் துணையையும் அற்ப சொற்ப உலகியலில் வீணாக்கியே விடுகிறார்கள்.
எனவேதான் நான்கு யுகங்களாகியும் இம்மண்ணுலகின் சாதாரண மானுட இயல்புகளைக் கடந்து அறிவார்ந்த வாழ்க்கை, அன்பார்ந்த வாழ்க்கை அருளார்ந்த வாழ்க்கை, அனைத்தும் கடந்த பேரருள் வாழ்க்கை எனும் நான்கு வகைப்பட்ட வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் விரல் விட்டு எண்ணிடக் கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் இந்தச் சிலரில் பலர் உலகியலுக்குத் தெரியாமலே போய் விடுகிறார்கள்.
எனவேதான் அருளுலக மூலவர்களாகவும், காவலர்களாகவும் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஞானாச்சாரியாராகவும், தமிழினத்துக் குருபீடமாகவும், தமிழ் மொழியின் மெய்ஞான சபையின் தலைவராகவும் தோன்றிடும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளே இந்துமதத் தந்தையாக இருந்து இந்து மதத்தைக் காக்க எல்லா ஏற்பாடுகளையும் தங்கள் காலத்திலேயே செய்கிறார்கள். அதாவது ஞானாச்சாரியார்களே இந்துமத மறுமலர்ச்சிக்காக, வளவளர்ச்சிக்காக, ஆட்சி மீட்சிக்காக, விழிச்சி எழிச்சி எப்போதும் காக்கும் செழிச்சிக்காக அருள்வாக்குக் கூறும் பணியில் தாங்களே ஈடுபட்டிடுகிறார்கள்.
எனவேதான் அருள்வாக்கும் இந்துமதமும் உயிரும் உடலுமாக இருக்கின்றன. இந்தப் பெரிய அரிய சீரிய பிணைப்பையும், இணைப்பையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் சிலராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளான ஞானாச்சாரியாரின் காலத்திலே தோன்றிடுகிறார்கள். எம் காலத்தில் தோன்றியவர்கள் நிலவறையின் வாயிலுக்குக் கூட வர முடியாமல் தொலைவில் நிற்கிறார்கள்…..”
இந்தக் குருபாரம்பரிய வாசகம் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகங்களில் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது.