Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • மெய்யான இந்துமதம்>
  • இந்துமதம் என்பது எது ?
  • இந்துமதம் என்பது எது ?

    இந்துமதம் என்பது எது ?

    மிகப் பெரிய நெடிய இடைவெளிக்குப் பிறகே ‘இந்து மதம்’ என்று வெளிநாட்டாரால் அழைக்கப் படும் இந்தியாவின் பூர்வீக மதமான ‘சித்தர் நெறி’ உண்மை வடிவில் வெளியுலகுக்கு அறிமுகமாகிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘பிற + மண்ணிலிருந்து வந்தவர் = பிறமண்ணினர் = பிறாமணர் = அன்னியர் = வெளிநாட்டவர் - ‘ தங்களுடைய வேதநெறிகளைச் சித்தர் நெறிகளோடு கலந்து செயல்பட்டதால்தான்; இந்துமதம் தனது பேராற்றலை இழக்க நேரிட்டது. ஆதியில் இருந்த பயன்மிக்க, நன்மைமிக்க, உண்மையான இந்து மதம் பாதியில் கற்பனை, பொய், மடமை…. முதலியவைகளால் நலிவுற்று மெலிந்தது.

    இப்போது மீண்டும் ஆயிரமாயிரம் சித்தர் நெறிச் செல்வர்கள், அருளாளர்கள்…. தோற்றுவிக்கப்பட்டுச் சித்தர் நெறி நலிவுகளையும், மெலிவுகளையும் அகற்றிக் கொண்டு வலிவும், வனப்பும், வாலிப்பும், பொலிவும், செழிப்பும் பெற்று வளர ஆரம்பித்து விட்டது. அதனால், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் செயல்வீரர்களின், தளபதிகளின், நாயகங்களின்….. சுற்றுப்பயணங்கள் மக்களுக்கு “ஆதி இந்துமதத்தை”, அதாவது ‘சித்தர் நெறி’யை அநுபவப் பொருளாக வழங்கவே பயன்பட வேண்டும். ‘கண்டவர் விண்டதில்லை’; ‘விண்டவர் கண்டதில்லை’ என்ற வாசகம் தவறானது என்று மெய்ப்பிக்க வேண்டும்.

    சாதி, மத, பொருளாதார வேறுபாடின்றி யார் வேண்டுமானால் ‘தன்னையறிதல்’, ‘தலைவனை அறிதல்’, ‘வினை அறிதல்’, ‘உயிர் அறிதல்’, ‘ஞானக் காட்சி காணல்’, ‘இறவாமை பெறல்’, ‘பிறவாமை பெறல்’, ‘சித்திகள் பெறல்’, …. முதலியன நிகழ்த்தப் படும். அதற்காகவே, யாம் உருவாக்கியிருக்கும் அடியான்கள், அடியாள்கள், அடியார்கள்…. பாடுபட வேண்டும். அதாவது, நாம் நமது சத்திகள், சித்திகள், பிற சாதனைகள்…. முதலியவற்றிற்குச் சாட்சிகளையும், சான்றுகளையும் மனித வடிவில் உருவாக்குகிறோம். இதனால், நமது எழுத்துக் குவியல்கள் மக்களைத் திருத்தும் முன்னரே நமது படைப்புக்களான மனிதர்கள் நம் எண்ணப்படி மக்களைத் திருத்திடுவார்கள்.

    இந்துமதத்திற்கும் உலக மற்ற மதங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு:

    இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு அருளாளரும் தமது பெயரால் ஒரு மதத்தை உண்டாக்கிச் சென்றிட்டனர். அதற்காகத் தங்களது அடைவுகளை ஒரு மத நூலாக, வேதமாக ஆக்கிட்டனர்.

    ஆனால், சித்தர்கள் உருவாக்கிய இந்து மதத்தில் ஒரே காலத்தில் பல அருளாளர்கள் வாழ்ந்து பல நூல்களை உருவாக்கினால் கூட யார் பேராலும் புதிய மதம் உருவாகவே இல்லை. உருவாகவே முடியாது. ஏனெனில் ஆற்று நீர்களால் கடல்கள் அதிகமாகி நிலத்தை விழுங்கும் நிலை உருவாகவே உருவாகாது. அருட்செயல்களும், அருள் நிலையங்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்.

    இந்து இறவாத நிலையை மறவாத மனிதர்களைத் தோற்றுவிப்பதே நமது கடமை. அதற்காகத்தான் எல்லா வழிபாட்டு நிலையங்களையும் ‘கோவில்கள்’ புத்துயிர்ப்புச் செய்து அருளூற்றுக்களாக, அருட்சூரியன்களாக…. ஆக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் நாம். இப்படிப்பட்ட நம்மைத் தவிர வேறு யாராலும் சமய, சமுதாய, அரசியல், கலை, தொழில், இலக்கிய, அறிவியல் துறைகளைச் செம்மைப் படுத்த, சமத்துவப் படுத்த, பொதுவுடமைப் படுத்த இயலவே இயலாது; முடியவே முடியாது! முடியாது! –"


    தொடர்புடையவை: