அரச மர வழிபாடு - என்ற வழிபாடு இந்துக்களிடையே மிகவும் சிறப்பான ஒன்றாகும். இது குறித்து குருதேவர், இந்து மதத் தந்தை, அருட்கொடை வள்ளல் வெளியிடும் செய்தியை வழங்குகின்றோம்.
அரசமரத்தை வழிபட நினைக்கும் ஆண் பெண் இருபாலரும் நாள்தோறும் சென்று சுற்றி வர வேண்டும். அவ்வாறு சுற்றி வரும்போது; ஞாயிற்றுக்கிழமைக்கு சூரிய காயந்திரியையும், திங்கட் கிழமைக்கு திங்கள் காயந்திரியையும், செவ்வாயன்று செவ்வாய் காயந்திரியையும், புதனன்று சீவ காயந்திரியையும், வியாழனன்று வியாழன் காயந்திரியையும், வெள்ளியன்று மாயோன் காயந்திரியையும், சனியன்று சனீசுவரக் காயந்திரியையும் கூறி வர வேண்டும். தங்களுக்கு நன்மையே வேண்டும் என்போர் மரத்தை இடமிருந்து வலமாகவும்; தீமை அகல வேண்டும் என்போர் மரத்தை வலமிருந்து இடமாகவும் சுற்றி வர வேண்டும். குருபாரம்பரியத்தில் இவ்வுண்மையைக் கூறினாலே தலை வெடித்துச் சுக்கு நூறாகிடும் என்றுள்ளது. இருந்தாலும், அருட்கொடை வள்ளல் மனமுவந்து இவ்வரிய செய்தியை வழங்கி யுள்ளார்.
அரச மரத்தின் அடிமரத்தில் அதாவது வேரில் “பிறமண்” தவநிலையில் இருப்பதாகவும்; அரசமரத்தின் தண்டில் மாயோன் உறக்கத்தில் இருப்பதாகவும்; அரசமரத்தின் மேல்பகுதியில் சிவபெருமான் இருப்பதாகவும், குருவாக தட்சிணாமூர்த்தியாக இருந்து மோனநிலையில் அனைத்து ஞானங்களையும் வழங்குவதாகவும் குருபாரம்பரியம் கூறுகிறது.
எனவேதான், கருத்தரிப்பதற்காகச் செல்கின்ற பெண்கள் அடிமரத்தைத் தொட்டு வணங்குவார்கள்.
செல்வங்களையும், கலைகளையும் அதாவது அரச நிலைகளையும், அரச பதவிகளையும் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள்; நடு மரத்தைத் தொட்டு வணங்குவார்கள்.
ஞானத்தையும், மோனத்தையும், தவத்தையும், அருட் சத்தியையும், சித்தியையும், பேரின்பப் பயன்களையும், சாகாக் கல்விகளையும் கற்க விரும்புகின்றவர்கள் அருளுலகில் பரம்பொருளாகவும், மூலப் பொருளாகவும், அனாதிப் பொருளாகவும் இருக்கின்ற சிவபெருமானை வணங்குவதற்காக எட்ட இருந்து அரச மரத்தை முழுமையாகக் கண்ணால் கண்டும்; அரச மரத்தின் அடியில் அமர்ந்து மேல் நோக்கி நுனியைப் பார்த்தபடியும் பூசைகளைச் செய்வர்.
இந்த மூன்று பூசையே அரச மரப் பூசை எனப்படும். இது பற்றிய மற்ற விபரங்களைக் குருவழிக் காண்க.
குறிப்பு:- (1) அரச மரத்தடியில் நிர்வாணமாக அமர்ந்து தவபூசை செய்தலும், அரச மரத்தை நிர்வாணமாகச் சுற்றி வந்து வழிபடுதலும் என்ற முறைகளும் உண்டு.
(2) தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் அடிப்பகுதியிலும் அரசமரத்தின் மேல் பகுதியிலும் அமர்ந்திருக்கிறார் என்பதே குருபாரம்பரியச் செய்தி.