கேள்வி:- மார்கழி மாதம் பீடை மாதம் என்பது சரியா?
பதில்:- மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் இடையேயுள்ள வரலாற்று வேறுபாடுகளையும், தத்துவ சித்தாந்த புராண இதிகாச பழக்க வழக்க சடங்கியல்….. வேறுபாடுகள், மாறுபாடுகள் முதலிய அனைத்தையும் விளக்கி யுரைக்கும் பணி துவக்கப் பட்டு இருப்பதே இந்து மதத்தையும், இந்துமத மூலவர்களான தமிழர்களையும், இந்துக்களையும் காப்பாற்றுவதற்குத்தான்.
ஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக்குரிய ஏழு (7) நாட்களையும், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும் செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதிகளை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆவார்கள். இவர்களின் கருத்துப்படி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான்.
எந்த நல்ல காரியம் துவக்க வேண்டுமென்றாலும் இந்த மார்கழியில்தான் துவக்க வேண்டும். அதாவது திருமணம், கால்கோள் விழா, குருகுலக் கல்வி, வழிபாட்டு நிலையப் பூசைகள்….. முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில்தான் செய்ய வேண்டும் என்பது மெய்யான இந்துமதத்தில் சட்டபூர்வமான அதிகாரப் பூர்வமான விதியாகும்.
“பீடு நிறைந்த மாதம் = பெருமைகள் மிகுந்த அரியன செய்தற்குரிய மாதம்; வாழ்வியல் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உகந்த மாதம். ‘பீட மாதம்’ = அருட்பீடம், குருபீடம், கருப்பீடம், கருமப்பீடம், திருப்பீடம்…… முதலிய பீடங்களை அமைப்பதற்குரிய குலவளர் மாதம் = அருளுலகுக்கு மிக மிக சிறந்த மாதம்.”
அனைத்து வகையான கலை வல்லார்களும் இந்த ஒரு திங்கட்குரிய முப்பது (30) நாட்களும் அதிகாலையில் தங்களுடைய கலைகளைப் பயிற்சி செய்தால் நல்லது. அவர்கள் ஆண்டு முழுதுமுள்ள 11 மாதங்களில் பயிற்சி செய்யாவிட்டாலும் பாதகமில்லை….. என்று இப்படிக் குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், குருபாரம்பரியம் முதலியவை தெளிவாகக் கூறுகின்றன.
எனவே, மார்கழி மாதத்தைப் பீட மாதமென்று வெறுத்து ஒதுக்கும் கருத்தையும், பழக்கத்தையும் புகுத்தியவர்கள் பிற மண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்களே. அதாவது இந்த வட ஆரியர்கள் மெய்யான இந்து மதத்தையும், இந்து மத மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள தமிழர்களையும் அருள் அற்றவர்களாக, ஆற்றலற்றவர்களாக முறையான பயிற்சியும் தேர்ச்சியும் பெற முடியாதவர்களாகச் செய்வதற்காகத்தான் பொய்யான ஹிந்து மதத்தின் மூலம் மார்கழி மாதத்தை வெறுத்து ஒதுக்கச் செய்தார்கள். இதனைப் புரிந்து இனிமேலாவது நம்மவர்கள் மார்கழி மாதத்தை சிறப்பாகக் பயன்படுத்த வேண்டும் .