Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • திருஞானசம்பந்தர் பிராமணரா?
  • திருஞானசம்பந்தர் பிராமணரா?

    திருஞானசம்பந்தர் பிராமணரா?

    கேள்வி:- திருஞான சம்பந்தர் பிறாமணரா? ஆரியரா? பார்ப்பனரா?

    பதில்:- வடமொழிக்கும், பிறாமணருக்கும், ஆரிய மதத்துக்கும், பார்ப்பனச் சனாதன தருமத்துக்கும் ஆதரவாளராக விளங்கிய பல்லவர்களையே நிலைகுலையச் செய்த திருஞான சம்பந்தர் சீர்காழித் தமிழ் அந்தணர், குருக்கள், சிவாச்சாரியார் சிவபாத இருதயர் எனும் கருணீக்க சைவ வேளாளர் குடும்பத்தில் தோன்றியவரே யாவார். இவருடைய பெயர் ‘ஆளுடைய பிள்ளை’, ‘திருஞான சம்பந்தம் பிள்ளை’, ‘சீர்காழிப் பிள்ளை’,……… என்று சித்தர் நெறிப்படி தமிழர்க்கே உரிய சிறப்புப் பட்டப் பெயரால் அழைக்கப் படுகிறார். அதாவது, திருநாவுக்கரசு வேளாளர், திருநாவுக்கரசுச் சைவன், சுந்தரம் பிள்ளை, சுந்தர வேளாளர், சுந்தரச் சைவன், திருஞானசம்பந்தாச்சாரியார், திருநாவுக்கரசாச்சாரியார், சுந்தராச்சாரியார் என்று தேவாரம் பாடிய மூவரும் குறிக்கப்படும் மரபே இவர்களைத் தமிழர் என்று விளக்குகின்றது.

    பெரிய கோயில் தில்லையம்பதி யருகேயுள்ள திருநாரையூர்ப் பிள்ளையார் கோயில் ஆண்டி மகன், பண்டாரம் மகன், பூசாறி மகன், சிவாச்சாரியார் மகன், அந்தணன் மகன், அருட்பா காத்த நம்பி …. என்று பாராட்டப்படும் சைவ வேளாளன் நம்பியாண்டான் நம்பி தனது அருள் சமத்துவப் பொதுவுடமை நிலைகளை யெல்லாம் கடந்து தனது குல முதல்வனான சீர்காழிப் பிள்ளை சிவபாத இருதயரின் மகன் திருஞான சம்பந்தம் பிள்ளையை ‘ஆளுடைய பிள்ளை’ என்று தமிழ்ச் சாதிப் பெயரால் பாராட்டுகிறான்.

    இந்த நம்பியாண்டான் நம்பி சைவத் திருமுறைகளைத் தொகுத்ததால்தான் பிறாமணர்களின் எதிர்ப்பையும் மறுப்பையும் வென்று 1.திருமூலர், 2.மாணிக்கவாசகர், 3.திருமாளிகைத் தேவர், 4.சேந்தனார், 5.கருவூர்த் தேவர், 6.பூந்துருத்தி நம்பி, 7.காடநம்பி, 8.கண்டராதித்தர், 9.திருவாலியமுகனார், 10.புருடோத்தம நம்பி, 11.சேதிராயர், 12.திருவாலவாயுடையார், 13.காரைக்காலம்மையார், 14.ஐயடிகள் காடவர் கோன், 15.சேரமான் பெருமாள் நாயனார், 16.நக்கீர தேவர், 17.கல்லாட தேவர், 18.கபில தேவர், 19.பரணதேவர், 20.இளம் பெருமானடிகள், 21.அதிராவடிகள், 22.திருவெண் காட்டடிகள்…. முதலிய தமிழர்களின் போதனைகளும், சாதனைகளும்…. நிலையான வாழ்வைப் பெற்றுத் திருமுறைப் பட்டியலில் இடம் பெற்றனர்.

    நம்பியாண்டான் நம்பிக்குத் தனது பூசாறி குலத்துக்கு, ஆச்சாரிய குலத்துக்கு, தமிழ் அந்தண குலத்துக்கு, சைவ வேளாளர் குலத்துக்குப் பெருமை தரும் மூலவராக, முதல்வராக, இளைஞரான திருஞானசம்பந்தம் பிள்ளை திகழ்வது குறித்துப் பூரிப்பும், பெருமிதமும் அளவற்று ஏற்பட்டன. அதனாலேயே, அவர் பாடிய பத்து நூல்களில் ஆறுநூல்கள் திருஞான சம்பந்தம் பிள்ளையைப் பற்றியனவாகவே அமைந்தன.

    1. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
    2. ஆளுடைய பிள்ளையார் திருச்சபை விருத்தம்
    3. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
    4. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை
    5. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
    6. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

    எனும் இந்த ஆறு நூல்கள் திருஞான சம்பந்தர் ‘பிள்ளை’ எனப்படும் தமிழ் அந்தணரே, சைவ வேளாள மரபினரே, பூசாறியே, ஆச்சாரியே என்ற பேருண்மையை விளக்குகின்றன.

    1. திருநாவுக்கரசர் ஏகாதசமாலை
    2. திருநாரையூர் வினாயகர் திருவிரட்டை மணிமாலை
    3. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
    4. திருத்தொண்டர் திருவந்தாதி

    — ஆக மீதி நான்கு நூல்கள்.

    இம் மாபெரும் பேருண்மைகளை விளக்கும் வண்ணமே காலடி ஆதிசங்கராச்சாரியார் தமது ‘செளந்தர்ய லகரி’யில் 75வது சூத்திரத்தில் திருஞான சம்பந்தரையும் தன்னையும் திராவிட சிசு என்று குறிக்கிறார். - இவை போதும் திருஞான சம்பந்தர் ஒரு தமிழரே (பிறாமணரல்லர்) என்பதை விளக்கிட.