(1) வாரத்தில் சில நாட்களும், மாதத்தில் சில நாட்களும், ஆண்டில் குறிப்பிட்ட நாட்களிலும் தொடர்ந்து வழிபடுகின்ற அல்லது கும்பிடப் படுகின்ற கிராமப் பொதுத் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள், காவல் தெய்வங்கள் முதலியவற்றை ஆண்டுக்கொரு முறைதான் கும்பிட வேண்டுமெனச் செய்து விட்டார்கள். இதேபோல், மேற்படி தெய்வங்களைக் குருதிப்பலி இல்லாமல், இறைச்சிப் படையல் இல்லாமல், தேங்காய்ப் பழம், பால், சர்க்கரை, பாயாசம், பொங்கல்,…. என்று படையலிடும் முறைகளை உருவாக்கினார்கள். இவற்றால், தமிழர்கள் காவல் தெய்வங்களின் காவலை இழந்தார்கள்.
(2) தலைவர்கள், தளபதிகள், வேளிர்கள், சிற்றரசர்கள், நிலக்கிழார்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், பூசாறிகள், வழிபடு நிலைய ஊழியர்கள்….. முதலியோர் குருதிப் பலியிட்டும், இறைச்சிப் படையலிட்டும் வழிபடும் முறையை மாற்றி மேற்படி அனைத்து வகையினரும் அருளை அநுபவப் பொருளாக பெறாத வன்ணம் தடுத்தனர், கெடுத்தனர்.
(3) சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும், புதைகாடுகளிலும், காடுகளிலும் பூசை செய்வதை சிறு தெய்வ வழிபாடு, துட்டத் தெய்வ வழிபாடு, ஆபத்தான வழிபாடு என்று குறைகூறித் தடுத்துக் கெடுத்தனர்.
(4) தமிழர்கள் தங்கள் தங்கள் வாழ்வியலின் தேவைகளுக்கேற்ப முத்தீ ஓம்பல், ஐந்தீ வேட்டல் பூசைகளைச் செய்து அருட்சத்தியைப் பெறுவதைத் தடுத்துக் கெடுத்து விட்டனர். அதாவது, வட ஆரியர்களான பிறாமணர்கள் தாங்கள்தான் யாகம் செய்ய வேண்டும் என்ற முறையை வகுத்தனர். இதனால் தமிழர்கள் மேற்படிப் பூசை செய்வதைத் தடுத்தனர். தமிழர்களும் ஏமாந்தனர்.
(5) இல்லறத்தில் இருக்கின்ற பெண்கள்தான் அனைத்து வகையான பூசைகளையும் வீட்டுத் தெய்வங்களுக்கும், நாட்டுத் தெய்வங்களுக்கும், 18 வகைக் காட்டுத் தெய்வங்களுக்கும், கிராமக் காவல் தெய்வங்களுக்கும் பூசை செய்யும் பொறுப்பினைத் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்றிருந்தார்கள். இதுவே, பதினெண் சித்தர்களின் பூசாவிதி. வட ஆரியர்கள் சிறு பெண்கள் பூசை செய்யக் கூடாது, பருவமடைந்த கன்னிப் பெண்கள் சில பூசைகளை செய்யக் கூடாது, திருமணமாகி இல்லறத்திலிருக்கும் பெண்கள் பல பூசைகளைச் செய்யக் கூடாது. விதவைகளும், தீட்டுப் பெண்களும் (மாதவிடாய் காலத்து) பூசையே செய்யக் கூடாது…. என்று படிப்படியாகப் பல திட்டங்களைப் பரிந்துரைத்து முடிவில் பெண்களே பூசை செய்யக் கூடாது, ஆண்கள்தான் பூசை செய்ய வேண்டும் என்று கூறித் தடுத்திட்டனர். அப்பாவித் தமிழர்களும் ஏமாந்தார்கள், நலிந்தார்கள், மெலிந்தார்கள்.
குறிப்பு:- பதினெண் சித்தர்களின் குருபாரம்பரியத்தில் மிகத் தெளிவாக
“ஏழுபருவத்து பெண்களும், எல்லா நாட்களிலும் ஏத்திப் பூசை செய்ய சத்திகள் சித்திக்கும் காவல் தெய்வங்களுக்கு”,
என்ற குறிப்பு இருக்கின்றது. இது மட்டும் அல்லாது;
“அளப்பரிய அண்ட பேரண்டச் சத்திகளையும், ஏழு பருவத்து பெண்களின் பிண்டத்துக்குள் கொண்டு வந்து தேக்கி மண்ணுலகத் தெய்வங்களை வழங்கிடு, கருவறைகளுக்கு அருள்வார்த்திடு”
என்ற குறிப்பும் இருக்கின்றது. ஆனால், வட ஆரியர்கள் அருளுலகில் பெண்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், புனிதப் பிறவிகளான பெண்களை பாவப் பிறப்புக்கள் என்று துணிந்து கூறித் தவறான கருத்தை வளர்த்து விட்டார்கள்.
(6) தமிழர்கள் அன்றாடம் ஆறுகாலம் அவரவர் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப ஆலயங்களுக்குச் சென்றோ, அலுவல் புரியுமிடங்களில் இருந்தோ, வீடுகளிலிருந்தோ தொழுகை செய்யும் பழக்கத்தைக் கைவிடும் படிச் சதிச் செயலைச் செய்தனர். இப்படிப்பட்ட செயலை எவ்வாறு திட்டமிட்டு செயலாற்றி வெற்றி கண்டனர் என்பது புரியவில்லை, தெரியவில்லை. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற மூதுரைப் படிப் பார்த்தால் கிராம தெய்வக் கோவில்கள் எல்லாமே ஆலயங்கள்தான். வட ஆரியரின் நுட்பதிட்ப முயற்சிகளால், சதிச் செயல்களால் ஆறுகாலம் தொழுகைகள் நிகழ்த்தப் பட்ட ஆலயங்களான கிராமத் தெய்வங்கள் வாழுமிடங்கள் தவறான பூசை முறைகளாலும் காலந்தாழ்த்தியப் பூசை முறைகளாலும் பாழடிக்கப் பட்டன. அப்படி இந்த ஆலயங்கள் கோயில்களாக்கப் பட்டன. இதனையே குதம்பைச் சித்தர்,
“ஆலயம் கோயிலாச்சுதடி குதம்பாய்
கோயில் ஆலயமாச்சுதடி குதம்பாய்
அருளுலகு இருளுலகாச்சுதடி குதம்பாய்
மருளாளியும் அருளாளியும் மறைந்தாரடி குதம்பாய்
கருக்களேதடி குருக்களேதடி குதம்பாய்
தருக்களேதடி திருக்களேதடி குதம்பாய்
உருவங்களே தெய்வங்களாச்சுதடிக் குதம்பாய்
அருவுருவங்கள் கருவறைத் திறந்தோடினதடிக் குதம்பாய்
விண்ணேது மண்ணேது குதம்பாய்
பூசைக்கு ஆசை வைக்காதடி குதம்பாய்”
என்று பாடிவிட்டுச் சென்றார். இது குறித்து சிவவாக்கியர், இடைக் காடர், கடுவெளிச் சித்தர், வெட்டவெளிச் சித்தர், போகர்,…. முதலியவரின் பாடல்கள் நிறைய இருக்கின்றன. விரிவஞ்சி இத்துடன் விடுக்கின்றோம்.
எனவேதான், 10வது பதினெண் சித்தர் பீடாதிபதிக்குப் பிறகு ஐநூறு அறுநூறு ஆண்டுகளுக்கிடையில் பிறமண்ணினரான பிறாமணர்கள் அனைத்து வகையான கிராம நகர வட்டாரக் காவல் தெய்வங்களின் செல்வாக்குகளை அழித்தொழித்து விட்டனர். அதாவது ஆலயங்களைக் கோயில்களாக்கி சமசுக்கிருத மொழியில் பூசை செய்து வலுவிழக்கச் செய்தனர். தங்களால் முடியாத, நெருங்க முடியாத ஆலயங்களில் பிறரும் பூசை செய்து பயனடைய முடியாமல் தடுத்து விட்டனர். அதாவது, முடிந்த வரை காவல் தெய்வங்களை தங்களுக்கு உரியவைகளாக்க முற்பட்டனர். முடியாதவைகளை அழித்தொழித்து விட்டனர். இதற்கு அப்பாவித் தமிழர்கள் துணையாகி விட்டனர். அரசன் முதல் ஆண்டி வரை வட ஆரிய வேத மதத்தையும் சமசுக்கிருத ஆரிய நெறியையும் இந்துமத முறையாக ஏற்றுப் போற்றி வீழ்ந்தார்கள்.