Gurudevar-yaar
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் யார்?>
  • சிந்திக்கலாமா?
  • சிந்திக்கலாமா?

    சிந்திக்கலாமா?

    சிந்திக்கலாமா?!?!... என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்(1975இல் எழுதப்பட்டது)

    குவலய குருபீடம்

    “... பதினோராவது இராசிவட்டத்துக் கருவூறாரும், பதினெண்சித்தர் பீடாதிபதியுமான குருமகா சன்னிதானம் சித்தர் கருவூறார் அவர்கள் தனது ‘குருபாரம்பரியம்’ என்ற நூலில்

    “… இத்திருநாட்டு மக்களில் உயர்ந்த செல்வர்களும், செல்வாக்குடைய பெரியவர்களும், புகழ் படைத்தவர்களும், அரசர்களும், தளபதிகளும், அமைச்சர்களும், உடல்வலிமை படைத்தவர்களும், உயர்ந்த சாதிக்காரர்களும் … ஒருமுறை சித்தர் நெறியின் உயிர்நாடியான மறுபிறப்புத் தத்துவத்தை நினைத்துப் பார்த்தல் வேண்டும். அப்போதுதான், இவர்களெல்லாம், மறுபிறப்பில் இதே நாட்டில் ஏழைகளாய், அனாதைகளாய், அடிமைகளாய், எந்த நிலையுமில்லாத நாடோடிகளாய், எந்தப் பதவியுமில்லாத எளிய குடிகளாய், நோயாளிகளாய் பிறக்க நேரிட்டால் என்னவாகுமென்று ஆழ்ந்து சிந்திப்பார்கள். அப்படிச் சிந்திக்க நேரிடும் போதுதான் சாதிவெறி, ஏற்றத் தாழ்வு, அதிகாரம், ஆணவம், உடல் திமிர், உணர்வு வெறி, … முதலியவைகளை யெல்லாம் அழிக்க வழிகள் பிறக்கும்…” என்று கூறும் வாசகங்களையே என்னுடைய உரையின் உள்ளுறையாக, உயிராகக் கூற விரும்புகிறேன்.

    இன்று, அரசியலிலும், சமுதாயத்திலும், தொழிலிலும் உள்ள ஆணவம், வெறி, ஏற்றத் தாழ்வு, வேறுபாடு, பிரிவு, பகைமை, ... முதலிய அனைத்தும் அகலச் ‘சித்தர் நெறி’ மீண்டும் உடனடியாக இத்திருநாட்டிலாவது மறுமலர்ச்சி பெற வேண்டும் என்பதே என்னுரை. என் தந்தை கருதியது போல் தெய்வ நம்பிக்கையற்ற மார்க்சீயத்தால்தான் இத்திருநாட்டைத் திருத்த முடியும் என்று கூறத் தயாராக இல்லை நான். தெய்வத் திருநாடு இது. இங்கே தெய்வீக நெறிதான் ஆள வேண்டும்.....”

    “…பன்னெடுங் காலமாகப் பகைவரால் வீழ்த்தப் பட்டுத் தாழ்த்தப்பட்டு அடிமைச் சேற்றில் ஆழ்த்தப்பட்டு அறியாமை இருளில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் இனத்தின் மீட்சிக்குப் போராட வேண்டிய மாபெரும் பொறுப்பை ஏற்றுள்ள என் போன்றோர், வாழ்நாள் முழுதும் தங்கள் கடமையுணர்வை ஊமையனின் கனவாக ஆக்கிச் சென்றிட முடியுமா? அதுவும், தனது சமுதாய அமைப்புக்கும், அரசியல் வாழ்வுக்கும், சமய நெறிக்கும் உயிர்நாடியான உயரிய மாபெரும் தத்துவத்தை மறந்து; அன்னிய இனத்தின் தத்துவத்தை மதித்தும், போற்றியும், பேணியும் தன்மானமிழந்து, தன்னம்பிக்கையற்று, ஒற்றுமையிழந்து, சுரண்டலுக்கு உள்ளாகி, வறட்சி மீக்குற்று, வாடி வதங்கி அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்திற்கு மீண்டும் தனது தத்துவத்தை நினைத்துப் பார்க்கும்படி செய்யும் கடுமையான அரும்பெரும் பணியை ஏற்றுள்ள என் போன்றோர்; காலத்தை வீணாக்காது, பிஞ்சுப் பருவத்திலேயே அஞ்சா நெஞ்சுடன் தன் இனத்தின் மீட்சிப் பணியைத் துவக்கிடல் வேண்டும்.

    நானோ, என் இனம், தனது ஆழ்ந்த உறக்கத்தினின்று விழித்தெழவும்; மாற்று இனத்திடமிருக்கும் மயக்கத்திலிருந்து தெளிந்து எழவும்; தீண்டாமை எனும் கொடிய கை விலங்கையும், சாதி உயர்வு தாழ்வு எனும் கால் விலங்கையும் ஒடித்தெறிந்து வீர நடை போடவும்; அன்னிய மொழியெனும் சிறைச் சாலையின் இரும்புக் கம்பிகளை உடைத்தெறிந்து புரட்சிக்குப் புறப்படவும்; இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று... என்பனவற்றையே போர் ஆயுதங்களாகத் தாங்கி முரசு முழக்கிக் கொடி பிடித்து அணி வகுத்துப் புரட்சிப்படை யுருவாகிப் பகைவரைச் சந்திக்கப் புறப்படவும்... செய்வதென்பது எளிய செயலன்று.

    நான், வரலாற்று ஏடுகளைப் புரட்டுகிறவன் என்பதால்; என் காலத்துக்குள் என் இனம் பெற வேண்டிய இத்தனை விழிச்சிகளையும் எழுச்சிகளையும் செய்து முடித்துத் திட்டமிட்ட செழுச்சியை உருவாக்க முடியாது என்பதை நன்கு அறிவேன். ஆனால், அதற்காகத் தளர்ச்சியோ! தயக்கமோ! அயர்வோ! மயக்கமோ! எனக்கில்லை. நான், இறைவனை நம்புகிறவன்; அவன் இயக்குவிக்க இயங்குகிறவனே நான் என்ற தெளிந்த நம்பிக்கையில் என் இனத்தின் மறுமலர்ச்சிக்காகச் செயல்படப் புறப்பட்டு விட்டேன். அதற்குரிய சூழல் உருவாவதை விட; அத்தகைய சூழலை உருவாக்கித் தீருவது என்று துணிந்து விட்டேன்.

    “…இத் திருநாட்டில், பொதுவாழ்வில் ஈடுபட்டுச் சிந்திக்கப் புறப்பட்டவர்கள் எல்லாமே “புதுவாழ்வு” தேடிக் கொண்டு விட்டார்கள். அப் புதுவாழ்வில், எதிர்பாராத அளவு வளமும் வலிவும் பொலிவும் நலமும் காய்த்துக் கனிந்து குலுங்க நேரிட்டிடுவதால்; பிறரின் வறுமை, வருத்தம், நோய், தேவை, ஏக்கம், தொல்லை, அல்லல், அவலம், … முதலியவை எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. எனவே, பொதுவாழ்வில் நேரடியாக ஈடுபடாமல்; சிந்தனையளவில் ஈடுபடக் கூடிய என் போன்றவர்களால்தானே! ஏழை எளியவர்களின் வறுமை, வருத்தம், நோய், தேவை, ஏக்கம், சிக்கல், தொல்லை, அல்லல், அவலம், சுழற்சி, உழற்சி, தாழ்ச்சி, தளர்ச்சி, மிரட்சி, … முதலியனவற்றை அடியோடு மாற்றி யமைத்துப் புதிய நிலையைத் தோற்றுவிப்பது பற்றிச் சிந்திக்க முடியும்.

    நாங்கள் முழுக்க முழுக்க எண்ணப் புரட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள். எங்களுக்கு ஆயுதப் புரட்சியிலோ, குருதி கொட்டும் புரட்சியிலோ நம்பிக்கையே கிடையாது. எங்கள் நம்பிக்கையெல்லாம் மனித மனத்திலே உணர்வுப் புரட்சியும், சிந்தையிலே எண்ணப் புரட்சியும் அமைதியான முறையில் நிகழ வேண்டும். அதற்கு இலக்கியப் புரட்சி அல்லது இலக்கிய உலகில் புரட்சி செய்தால் போதும் என்பதுதான்.

    எனவேதான், திடீரென்று வறியவர் கொதித்தெழுந்து மிகப் பெருமளவில் அழிவை யளிக்கக் கூடிய செயல்புரட்சி நிகழுவதற்கு முன்னரே! நம் நாட்டில் வளமான வாழ்வு வாழ்பவர்கள் வறியவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தனிநபர் வாழ்க்கைக்குரிய உறுதியை வழங்கி விட வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறோம்.

    இப்படி நாங்கள் முயல்வதற்கு ஓரளவாவது உரியவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தால் நல்லது. இல்லையேல், சமுதாயத்தின் அடித்தளத்தில் அனாதைகளாய், பிச்சைக் காரர்களாய், வாழ்க்கையில் எந்தவித உறுதிப்பாடும் அற்ற நிலையற்ற வாழ்வு வாழும் அப்பாவிகளாய், உழைப்புக்கேற்ற ஊதியம் பெற முடியாத அடிமைகளாய், உரிமை எதுவுமில்லாத எடுபிடிகளாய், என்றென்றும் வேலியில்லாப் பயிர் போல் அழிவை எதிர் நோக்கியே வாழும் கூலிகளாய், … உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து குருதி சிந்திப் புரட்சி செய்யத் தயார் ஆவார்கள்.

    அப்போது, நடுத்தரப் பொருளாதார வாழ்வு வாழும் அதிகாரிகள், எழுத்தர்கள், சிறுநிலக் கிழார்கள், சிறிய கடைக்காரர்கள், ... முதலியோர் குருதி சிந்திப் புரட்சி செய்யத் தயாராகிடும் மக்களோடு சேர்ந்திடுவார்கள். அப்படி நடுத்தரப் பொருளாதார வாழ்வு வாழும் மக்கள் ஏழைகளின் புரட்சிப் படையில் இணைவதன் மூலம் அப்படைக்குத் தேவையான போர் ஆயுதங்கள், மற்ற தளவாடங்கள், திட்டங்கள், ஆட்சிச் சத்தி முதலியவை அனைத்துமே கிடைத்திடும். அது, ஏழைப் புரட்சியாளர்களைப் புரட்சிப் படையாகவே மாற்றிடும்.

    அப்படையின் வெற்றியால்தான் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தீரும் என்ற ஓர் அவசர முடிவை வேலையில்லாத இளைஞர்கள் உருவாக்கிக் கொள்வார்களேயானால்; பிறகு, நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது வீடுகள் போர்ப் பாசறைகளாக மாறும்; நாட்டிலுள்ள பெரும்பாலான சாலைகள் அனைத்திலும் நடமாடுபவர்கள் புரட்சிப் படையினராக மாறுவர். அப்போது அப்பாவிகள், நல்லவர்கள் ஏராளமாக உயிரிழக்க நேரிடும்; குருதி ஆறுகள் நாடெங்கும் ஓட நேரிடும். எவ்விதப் பயனுமின்றி உற்பத்தியான பொருள்கள் சிதைந்தழிய நேரிடும்; அடுத்துப் பொருளை உற்பத்தி செய்வதும் சிறப்பாக நடைபெறாமல் போய்விடும்.

    ஒருவேளை, இப்புரட்சிப்படை தோற்கடிக்கப் படலாம். ஆனால், ஏற்பட்டுவிட்ட அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் ஈடு செய்வதற்கு எவ்வளவு காலமாகும்? எவ்வளவு காலமானாலும் பழைய அமைதியான நடைமுறை சமுதாயத்தில் உருவாகிட முடியுமா? முடியவே முடியாது என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகின்ற ஒன்றேயாகும். அடக்கப்பட்ட சத்திகளுக்கும் அடக்கிய சத்திகளுக்கும் இடையே என்றென்றும் போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அப்போராட்டம் ‘தனிநபர் அச்சுறுத்தல்’, ‘தனிநபர்களை அழித்தல்’ ... முதலிய கொரில்லாப் போர் முறையையே கடைப்பிடித்திட நேரிடும். அதனால், இரு சாரார்க்குமே பயன் ஏற்படாது.

    இப்படிப் பயனற்ற போராட்ட நிலைக்கு நாளைய வருங்காலத் தலைமுறையினர் உள்ளாகிக் கெட்டழிந்து துன்புற்று விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில்தான் என் போன்றோர் இன்றைய சமுதாய அரசியல் சீர்கேடுகளை அகற்ற அயராது சிந்திக்கின்றோம். எங்களின் சிந்தனைகளால், எங்களுக்கே இழிவும், பழியும், சீர்குலைவும், சிதைவும், அழிவும் ஏற்படக் கூடும் என்பதை நன்கு அறிந்திருந்தும் என் போன்றோர் எதற்கும் அஞ்சாது, மயங்காது, தயங்காது, பின்வாங்காது தொடர்ந்து சிந்தனை செய்து வருகின்றோம். ...” நிறை யக்ஞர் “...நான், ஏட்டுப் படிப்போடு மட்டும் செயலாற்றப் புறப்பட வில்லை; பதினெண்சித்தர் பீடாதிபதியாகப் பட்டம் சூட்டப்படும் வரை; அதாவது பதினெட்டாவது வயது முடிய கற்ற அனைத்தையும் இரண்டாவது பருவமான பதினெட்டு ஆண்டுகள் நாட்டு நடப்பில் பயிற்சி செய்து பார்த்து விட்டுத்தான் செயலாற்றப் புறப்பட்டுள்ளேன். சந்தர்ப்பம், சூழ்நிலை, தேவை, வசதிவாய்ப்பு ... முதலிய அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து அவற்றிற்கேற்பத் திட்டங்களை வகுத்து அமைதியாகவும் முறையாகவும் பொறுமையாகவும் செயல்படக் கூடிய பக்குவத்தைப் பெற்றுள்ளவனே நான்.

    என்னைப் பொறுத்தவரை, என் தாய்நாடு ‘மொழியில்’, ‘சமயத்தில்’, ‘சமுதாயத்தில்’, ‘கலையில்’, ‘தொழிலில்’, ... அடிமைப்பட்டு, மிடிமையுற்று, பிளவுபட்டு, பாழ்பட்டு, வீழ்ச்சியுற்றுக் கிடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எனது தன்னலமும், அச்சமும், இச்சையும் என்னைக் கோழையாக்கிட முடியாது. என் தாயகத்து மக்களுக்கு இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று முதலியவை பண்டைக் காலத்து இருந்தது போல் மீண்டும் செழிப்பாக ஏற்படல் வேண்டும். இப்பற்றுக்களைக் கோட்டையாகக் கொண்டே இத்திருநாட்டின் கலை, தொழில், இலக்கியம், வரலாறு, ... முதலிய அனைத்தும் பாதுகாத்து வளர்க்கப் படல் வேண்டும்.

    இக் குறிக்கோள் இத்திருநாட்டின் மாபெரும் சமயத்தின் வாரிசாக உள்ள என்னிடம் இருப்பது இயற்கையாகும். இதை இறைவன், என் பிறப்புக்கு முன்னாலும் என் இறப்புக்குப் பின்னாலும் என்னோடு இருக்கும்படிப் படைத்து விட்டான்.

    இந்நிலவுலகில் முதன்முதல் பிறந்த மனித இனமான தமிழினத்தில் பிறந்தவன் நான். அதிலும், இம்மண்ணுலக மனிதர் மனிதராகப் பாடுபட்ட சித்தர்களின் வாரிசாகும் பேறு பெற்றவன் நான். எனவே, எல்லாம் வல்லதாய், எல்லாமாய், எங்கும் நிறைந்ததாய் உள்ள பரம்பொருளின் அருள் துணையால் நான், ஏக காலத்தில் பலவகைப்பட்ட பகைவர்களைத் தன்னந்தனியாகச் சந்தித்துப் போரிடும் வல்லமையைப் பெற்றுள்ளேன். அதனால், என் மீதுள்ள அன்பினால் யாரும் எனக்கு ஊறு நேர்ந்திடுமோ என்று அனாவசியமாகப் பயப்பட வேண்டாம். அவனன்றி அணுவும் அசையாது. அப்படியே, ஏதாவது நேர்ந்தால்; என் எழுத்துக் குவியல்கள் இந்த நாட்டில் பருவமழை போல் தொடர்ந்து சிந்தனையாளர்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

    நிறை யக்ஞர்

    ... ... நான், பதினெண்சித்தர் பீடாதிபதியாகப் பட்டமேறியதுமே; என் தந்தை, எனக்கு, ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழல்களையே மிகுதியாக உருவாக்கினார். நானோ! தெய்வீகத் துறைக்குரிய அன்புநெறி, அமைதி முறை, நிறைவு காணும் போக்கு ... முதலியவைகளையே விரும்பினேன். அதனால், நான், பலமுறை என் தந்தையிடம், “பின்னால் ஆபத்துக்களை ஏற்றுச் சமாளிக்க நேரிடும் என்பதற்காக; இப்பொழுதே ஆபத்துக்களைத் தேடிச் சென்று செயல்படுவது அறிவுக்குப் பொருத்தமாகாது” என்றேன்.

    என் தந்தையோ, “நீ சொல்வது சாதாரணப் பொதுமக்களுக்குரியது. சில ஆயிரம் ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு, அடிமையாக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, தன்மானமிழந்து, மொழியுணர்வற்று, இன உணர்வற்று, நாட்டுணர்வற்றுக் கிடக்கும் ஓர் இனத்தின் மீட்சிக்குரிய எல்லாப் பணிகளையும் விழிப்போடு ஆற்ற வேண்டிய உன் போன்றோர்க்கு உரியதல்ல. போர்முறையைத் தேடிப் பெறுபவனே ஓர் இனத்தின் விடுதலைக்குப் பாடுபட முடியும் என்று கூறித் தொடர்ந்து என்னைத் தன் திட்டப்படி எல்லாவகை ஆபத்துக்களிலும் பயின்று தேறிவரச் செய்தார்.

    எனவே, நான், என் தாயகத்துக்குள்; ஓரளவு என் தாயகத்து மக்களால் உணரப்பட்ட நிலையில், சமயத் துறைப் பணி மகனாகச் செயல்பட ஆரம்பித்து விட்டேன். இனி, எனக்கு எது நேர்ந்தாலும் என் இனம், மொழி, சமயம், நாடு ... என்னைக் காத்திடும் என்ற தன்னம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. எனவே, நானிப்படிச் சிந்திக்கலாமா? என்று யாரும் பயப்பட வேண்டாம். ஒரு நூறு நூல்களுக்கு மேல் எழுதியுள்ளேன். அவை, என்னையும், என் இனத்தையும் காக்கும் படைகள். ...”

    “…நான், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் என் தந்தை எந்நேரமும் நமது இனத்தின் வீழ்ச்சி பற்றிய சோக வரலாற்றையும்; தாழ்ச்சி பற்றிய துன்ப வரலாற்றையும்; மீட்சி பற்றிய புரட்சித் திட்டங்களையும் சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவன். அதனால், தன் நினைவற்று நீள் துயிலில் ஆழ்ந்துவிட்ட நம் இனத்தின் துயிலை மீள் துயிலாக்க வேண்டும். அதாவது, நமது இனத்தின் வரலாறு வையகம் முழுதும் உணரத்தக்க ஈடு இணையற்ற மாபெரும் வரலாறு என்பதை முதலில் நம் இனத்தவர் உணரச் செய்ய வேண்டும். அதற்காக நமது இனத்தின் ஒப்புயர்வற்ற மாபெரும் வரலாறு பெரும் புரட்சிகளால் எழுதப்பட இருக்கும் காலக் கட்டத்தில் வாழுகின்றோம் நாம் என்ற உணர்வு உனக்கு ஏற்பட வேண்டும்.

    எனவே, நாம், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில் மட்டுமல்ல; இவ்வையகத்தின் வரலாற்றிலேயே இடம் பெறப் போகிறோம். ஏனெனில், நமது இனத்தை வீழ்த்தி, தாழ்த்தி, மாள இகழிலும் இன்னலிலும் ஆழ்த்தி வெற்றி வாழ்வு வாழும் இனம் இன்னும் நம் தாயகத்திலேயே வாழ்வதால்; நமது புரட்சித் திட்டங்கள் பெரும் போர்களில் போய் முடிந்தாலும் முடியலாம். அதுவரை, நாமிருப்போமோ மாட்டோமா தெரியாது; ஆனால், நம் இனம் விழிச்சி பெற, எழுச்சி பெற, செழுச்சியுறத் தேவையான எல்லாவற்றையும் தெளிவாக ஏட்டளவிலாவது திட்டமாகத் தீட்டிக் கொடுத்து விட்டுப் போக வேண்டிய மாபெரும் பொறுப்பு என் தலைமேல் வைக்கப் பட்டுள்ளது. அதை, எப்பாடுபட்டாவது செய்து முடிக்க வேண்டியவன் நான். எனவே, எனது அறிவும், எண்ணமும் முழுக்க முழுக்க நம் இனத்தின் தாழ்ச்சிகளைத் தகர்ப்பதிலும்; புகழ்ச்சி மிக்க வளர்ச்சியை உருவாக்குவதிலுமே ஈடுபட்டிருக்க வேண்டும். ...”

    “…எல்லாத் துறைகளிலும் தனது பழம்பெருமைகளையும், உரிமைகளையும் மறந்து அனாதை போல அடிமைப்பட்டு ஏனோதானோ என்றிருக்கும் ஓர் இரங்கற்குரிய நிலை என் தாய் நாட்டுக்கும், மொழிக்கும், இனத்துக்கும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த பிறகு; “நான் ஒரு சாதாரண மனிதன் தானே” என்று என்னால் எண்ணிக் கொள்ள முடியவில்லை. அப்படிப் பலரும் எண்ணிக் கொள்வதால்தான் அறிந்தவைகளை ஊமையன் கனவுகளாக்கிச் செல்லும் பெரிய மனிதர்களின் தொகை கணக்கற்றதாக உள்ளது இத்திருநாட்டில்.

    அதாவது, நான் பிறர்க்குள்ள வசதி வாய்ப்புக்களையும் உரிமைகளையும் பெருமைகளையும் விடச் சற்று அதிகமாகச் சமயத்தின் பெயரால் பெற்றிருப்பவன். எனவே, நான், என்னுடைய பணிகளைச் சாதாரண மனிதனாக என்னை யெண்ணி அடங்கி யொடுங்காமல் மிடுக்கோடும் எடுப்போடும் துவக்கி விட்டேன். அது, ஆரவாரமின்றி, ஆடம்பரமின்றி, விளம்பரமின்றி ... அமைதியாகத் தொடர்ந்து நடந்தேறி வருகின்றது. இந்த நூலின் மூலம் என் பணியும் நானும் என் தாயகத்துக்கு அறிமுகமாகிறோம். இது, எத்தகைய பயனை நல்குமோ! என்ற அச்சமோ! தயக்கமோ! இன்றித்தான் நான் செயல்படுகிறேன்.

    … … … எந்த ஒரு மனிதனும் தன் தாய்நாடு, மொழி, இனம் என்று நினைத்துச் செயல்பட்டதால் வீழ்ச்சியுற்றதில்லை. இன்னும் சொல்லப் போனால், இவை மூன்றையும் மறந்து செயல்பட்ட எந்த ஒரு மனிதனும் நிலையான புகழ்ச்சியைப் பெற்றதில்லை. என் சிந்தனைகள் எத்தகைய சூழ்நிலைகளைக் காலப்போக்கில் உருவாக்கப் போகின்றன என்பதை என்னால் ஓரளவு கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அக்கற்பனையின் பயனால்தான், நான், துணிந்து தொடர்ந்து என் கடமைகளை ஆற்றி வருகின்றேன். …”

    தொடர்புடையவை: