Gurudevar-yaar
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் யார்?>
  • அருட்கொடை வள்ளல்
  • அருட்கொடை வள்ளல்

    அருட்கொடை வள்ளல்

    [1987இல் தயாரிக்கப் பட்டது]Gurudevar Thavam கடந்த ஐநூறு கோடியாண்டுகளில் சாதாரண மக்களின் நிலைக்கு இறங்கி வந்து அநுபவப் பூர்வமாக அருளை அனைவருக்கும் வழங்குகின்ற முதல் சித்தர் நமது குருதேவர்தான். நாயன்மார்களும், ஆழ்வார்களும், அருணகிரியார், பட்டினத்தார், பத்திரகிரியார், தாயுமானவர், இராமலிங்கர்... போன்ற அருளாளர்களும் தாங்கள் பெற்றிட்ட பேரின்பத்தைப் பற்றித்தான் பாடினார்களே தவிர பேரின்பத்தைப் பெறுவது எப்படி? என்பதைப் பற்றி ஊசிமுனையளவு கூட வெளியிட வில்லை. ஆனால், நமது குருதேவரோ ஆயகலைகள் 64, அருட்கலைகள் 48, கடவுட்கலைகள் 9, தெய்வீகக் கலைகள் 9, பேய்க்கலைகள் 9, நோய்க்கலைகள் 9, தேய்கலைகள் 9, இவையன்றி எண்ணற்ற பூசைமுறைகள், தவ ஒழுகலாறுகள், ஓகமுறைகள், ஆகம வழிபாட்டு வகைகள்.... நமது குருதேவரால் உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

    அதனால்தான், அவரை நன்கு புரிந்து கொண்ட அடியான்கள், அடியாள்கள், அடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், விருப்பாளர்கள், பத்தர்கள், ஆத்திகப் பெருமக்கள், ... முதலியவர்கள் நமது குருதேவரை அருட்கொடை வள்ளல் என்று அழைத்து வருகிறார்கள். அவர் யாருக்கும் இல்லை என்று கூறாது நேரிடையாக அருளையும், அருள்பெறும் வழிவகைகளையும் வாரிவாரி வழங்கிக் கொண்டுள்ளார். மதம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் எல்லாம் மத மறுப்பிலும், வெறுப்பிலும், எதிர்ப்பிலும் ஈடுபட்டிட்ட காரணத்தால்தான் நமது நாட்டில் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு... முதலிய அனைத்தும் சீர்கெட்டு, முறைகெட்டு, பாழ்பட்டுப் பயனற்றுப் போய்விட்டன. இவையனைத்தையும் செப்பனிட வேண்டிய மாபெரும் பணி நமது குருதேவர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதால்தான் பத்தி இயக்கத்தைப் பசணை இயக்கமாக வளர்க்காமல் ‘பண்பாட்டுக் கழகமாக’, ‘நாகரிகக் காப்பு இயக்கமாக’, ‘கலைக்காப்பு இயக்கமாக’, ‘அறிவியல் காப்பு இயக்கமாக’ வளர்க்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளார் நமது குருதேவர். இதனை உலகச் சமாதான இயக்கமாக, உலக ஒற்றுமை பேணும் இயக்கமாக, உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவச் சமுதாயம் அமைக்கும் இயக்கமாக முதிர்ச்சி பெறும் வண்ணம் செயலாற்றி வருகிறார் நமது குருதேவர்.

    அவர் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை. உயர்ந்தன, பயன்மிக்கன, நீதிக்குரியன, நிம்மதிக்கும் நிறைவுக்கும் உரியன என்று போற்றும், பாராட்டும் வண்ணமே நமது குருதேவர் அவர்களின் ஒவ்வொரு செயலும் செய்யப்பட வேண்டும் என்ற தத்துவத்தைச் செயலாக்குவதில்தான் அவர் கவலைப் படுகிறார். புகழோ, பதவியோ, அதிகாரமோ, செல்வமோ அவருக்குத் தேவையில்லை. அனைவரும் ஏற்றத் தாழ்வற்ற தீண்டாமைக் கொடுமையற்ற, சுரண்டலற்ற, சகவாழ்வும், சுகவாழ்வும் வாழ வேண்டும் என்பதே நமது குருதேவரின் கொள்கை, குறிக்கோள், நோக்கம், தத்துவம், சித்தாந்தம், வேதாந்தம், நாதாந்தம், போதாந்தம் ஆகும். குருதேவர் என்பவர் யாருக்கும் முதலாளியாகவோ, தலைவராகவோ இருக்க விரும்புகிறவர் அல்ல. அவர் அனைவருக்கும் நலம் விளைவிக்கும் தொழிலாளியாகவும், தொண்டராகவும் இருப்பவரே. அவருடைய வாக்கும் வாசகமும், நோக்கும், போக்கும், ஊக்கும்.... அனைவரின் நலிவு, மெலிவு, முடக்கம், ஒடுக்கம், தொல்லை, துன்பம், தோல்வி, கவலை, ஏக்கம், ஏமாற்றம், புரியாமை, அறியாமை, இல்லாமை, இயலாமை... முதலிய குறைகளை அகற்றுவதற்குத்தான் பயன்படுபவை.

    குருதேவர் இன்றைய உலகியல் நடைமுறைகளுக்கெல்லாம் முந்தியவர் என்பதால் உலகியலுக்கு உட்பட்டுச் செயல்பட முடியாத இக்கட்டுக்களையும், குற்றச் சாட்டுக்களையும், மறுப்புக்களையும், விருப்புக்களையும், துரோகங்களையும், விரோதங்களையும் சமாளித்தே செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, குருதேவர் என்பவர் அருளுலகில் வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக.... செயல்படுவது என்பது அவரிடம் அருள்நலம் வேண்டுபவர்களின் தரம், உரம், திரம், தீரம், அறம், மறம், ஆர்வம், மனப்பக்குவம், சிந்தைத் தெளிவு, குரு நம்பிக்கை, இரகசியம் காக்கும் பண்பு... முதலியவைகளுக்கு ஏற்பத்தான் அமையும்” என்பது குருபாரம்பரிய வாசகம். நாம் இதுவரை தோன்றிய பெரும்பாலான அருட்செல்வர்களைப் போல் சில மாயங்களைச் செய்து சிலருக்கு அருள் வழங்கிப் புகழுடம்பு பெற்றுச் சமாதி ஆகப் போகிறவர்கள் அல்ல! நாம், வாழையடி வாழையாக அருளுலக வாரிசுகளை உருவாக்கப் போகிறவர்கள். நம்மிடம் தத்துவமும், அநுபவ முறையும் இருப்பதால் நாம் அருளுலக இருளையெல்லாம் அகற்றப் போகிறோம். அத்துடன் நம்மால் அருளாளர்கள் அருகம் போல் பரவிடவும், ஆலமரம் போல் பெரிதாக வளர்ந்து நிலைத்து நிற்கவும் செய்யுமாறு செயலாற்றப் புறப்பட்டு விட்டோம். நம்மிடம் கற்பனையோ, கதையோ, கனவோ இல்லை. அனைத்தும் விஞ்ஞானச் சூழலில், பகுத்தறிவுப் போக்குடன் நிறைவேற்றப் படுகின்றன.

    இன்னும் சொல்லப் போனால் பாரம்பரிய இரகசியங்களையும், மறைகளையும், எழுதாக் கிளவிகளையும் கூட நாம் தகுந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அறிவித்து செயலில் வாழவைக்கிறோம். எனவே, நம்மவர்களின் சொல்லிலோ, செயலிலோ, எள்முனையளவு கூடக் கலக்கமோ, தயக்கமோ, மயக்கமோ தேவையில்லை. யாராக இருந்தாலும் நம்மிடம் வரட்டும். பயிற்சி பெறட்டும். முயற்சி செய்யட்டும்! சித்திகளைப் பெறலாம். சாதி, இன, மத, நாட்டு வேறுபாடு இல்லாமல் அனைவரையுமே அருளுலக அநுபவங்களைப் பெற அழைக்கிறோம்

    நாம். நமது கொள்கை, “அகில உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு” ஆகும். நமது குறிக்கோள், “எவ்வித வேறுபாடும் இல்லாத சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் காண்பது” ஆகும். நமது நெறி, “உலகச் சமரச சன்மார்க்கச் சமாதான வாழ்வு அமைப்பது” என்பதில் அனைவரும் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும்.

    “தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப் படும் கருத்துக்களையும் செயல் நிலைகளையும் உலகுக்கு வழங்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அருளுலக உரிமை வாரிசுதான் குருதேவர். இவருடைய விருப்பு, வெறுப்புப்படி தோற்ற மாற்ற ஏற்றத் திரிபுகளை எளிதில் செய்ய முடியாது. உலகளாவிய முயற்சியால்தான் அருளுலகில் மிகச் சிறிய திருத்தம் செய்ய முடியுமென்பதை உணர்ந்தால் குருதேவர் என்பவரின் நிலையுணரலாம்” என்பது கருவாசகம். “... தமிழகம், தென்னிந்தியா, இந்தியா, உலகம் என்று அனைத்திலும் ‘சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம்’ அமைக்கப் புறப்பட்டிருக்கும் உண்மையான இந்து மதத்தின் வாரிசுகளே நாம். எனவே, கற்பூரத் தட்டும் பூசைமணியும் பிடித்து நிற்கும் பூசாரிகள், உடுக்கையடிக் காரர்கள், கோடாங்கிக் காரர்கள், ......., மந்திரவாதிகள் ... என்ற நிலையில் மட்டுமே செயல்படக் கூடியவர்கள் “சித்தர் நெறி இயக்கத்தவர்கள்” என்று தவறாக யாரும் எண்ணிட வேண்டாம்.

    நாம், அருளுலகத்திலும், பொருளுலகத்திலும் உள்ள தவறுகள், ஏமாற்றுகள், பொய்கள், மடமைகள், சுரண்டல்கள், வறுமைகள், கொடுமைகள், கடுமைகள், இருள்கள், இருட்டடிப்புக்கள், கற்பனைகள், ஏதேச்சாதிகாரங்கள், மானுட நல விரோதங்கள்... முதலிய அனைத்தையும் ‘மதவழிப் புரட்சி’ மூலம் போக்கிட அணி வகுத்திருக்கும் புதுமை விரும்பிகளே, பகுத்தறிவு வாதிகளே, சமுதாய முழுமை மாற்ற முயற்சியாளர்களே” -- குருவாசகம். “இம் மண்ணுலகில் 500 கோடியாண்டுகளின் வரலாற்றில் அரசயோகமும், அண்ட பேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமும் பெற்றுள்ள நமது குருதேவர் காலத்தில் வாழக் கூடிய இம்மண்ணுலக மக்கள் பெறற்கரிய பேறு பெற்றவர்கள். இதை உணராது இருப்போர் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், கைகாலிருந்தும் முடவராய் செயல்பட்டு வாழ்வின் இல்லாமைகளையும், இயலாமைகளையும் தாமே தேடித் துன்புறுவர். குருவைத் தெரிந்தும், பழகியும், உறவாடியும் விட்டு விலகிச் செல்பவர்களை விட ஏதும் தெரியாத மூடனே மேலானவன் என்பதை உணர்ந்து நமது அ.வி.தி. செயல்வீரர்கள் குருவைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும்.” நமது குருதேவர் குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்துக்கோ, இனத்துக்கோ, நாட்டுக்கோ ... மட்டும் அருளை வழங்கும் அருளாளர் இல்லை. அதாவது, இம்மண்ணுலகில் உள்ள அனைத்து மானுடரையும் அருளாளராக ஆக்கிடும் வல்லமை பெற்ற ஒரு மாபெரும் அருட்சத்தியாக, அருளுலக உரிமை வாரிசாக வாழும் பேறு பெற்றவரே நமது குருதேவர். எவ்வித ஆடம்பர ஆரவாரம் இல்லாத ஒரு அவதாரப் பிறவியே ஆவார் நமது குருதேவர். அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால்

    ஞாலகுரு சித்தர் கருவூறார் தனி மனிதர்களின் தவறுகள் சித்தர்களையோ, சித்தர் நெறியையோ, இந்துமறுமலர்ச்சி இயக்கத்தையோ, இந்து மதத்தையோ, அருளாளர்களையோ, அருட்பணி விரிவாக்கத் திட்டத்தையோ பாதித்து விடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது! என்பதற்காகத்தான் இன்றைய ஞாலகுருவாக, ஞானகுருவாக, அரசயோகியாக, ஆத்தாள் அமளிகையாக, கொற்றவை இருக்கையாக, பராசத்தி திருவடியாக, இராசிவட்ட நிறைவுடையாராக, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாக, இந்துமத இயக்கப் பாரம்பரியத் தலைவராக இருந்துவரும் குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாராகிய நமது குருதேவர் அவர்கள் அனைவரையுமே மிகவும் கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும், பொறுப்புடனும், பொறுமையுடனும், நிதானத்துடனும், அமைதியுடனும், அடக்கத்துடனும் எவ்விதக் கற்பனையும் கனவும் இல்லாமல் செயல்படும் வண்ணம் பழக்கி வருகிறார்.

    இதற்காகவே அடிக்கடி மிகமிகக் கடுமையான கண்டிப்புக்களையும், அறிவிப்புக்களையும், எச்சரிக்கைகளையும், இடைக்காலப் பொறுப்பு நீக்கங்களையும், செய்வதற்குச் சிரமமான பரிகாரங்களையும்; அதிக பொருட்செலவு உள்ள பரிகாரங்களையும், மிகக் கடுமையான வாசகங்கள் உள்ள மன்னிப்பு உறுதி மொழிகளையும் செயலாக்க வேண்டியிருக்கிறது.

    அதாவது, இன்றைய இந்தியத் துணைக் கண்டத்துக்குள் இருக்கின்ற அறுபது கோடி மக்களுக்கும் ‘ஆன்ம விடுதலை’, ‘ஆவி விடுதலை’, ‘உயிர் விடுதலை’, ‘சமய சமுதாய விடுதலை’, ‘பொருளாதாரச் சமத்துவம்’, ... முதலியவைகளைக் கருவாக்கி உருவாக்கித் தரும் மாபெரும் பொறுப்பை ஏற்றிருக்கும் குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் நமது குருதேவர் அவர்கள் மிகவும் கண்டிப்புடனும், எச்சரிக்கையுடனும் எந்தவித சலுகை நோக்கமுமின்றி சார்பு மனப்பான்மையை விடுத்து அவசர அவசரமாக உடனுக்குடன் நெருப்பெனச் செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. இதற்காக யார் வருத்தப் பட்டுக் கொண்டாலும் அதைப் பற்றி வருத்தப் பட்டுக் கொண்டிருக்க முடியாது.

    அதாவது பலர் நமது இயக்கத்தை விட்டு விலகிச் செல்வதும், விலக்கப்பட்டு நீக்கப்பட்டுச் செல்லுவதும் தவிர்க்கவே முடியாததாகும். எனவே, எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தவர்களானாலும் சரி, எத்தகைய அரிய பெரிய உழைப்பை நெடுங்காலமாக நல்கியவர்களானாலும் சரி, கண்டிக்கப் படுவதும், தண்டிக்கப்படுவதும் நிகழ்ந்தே தீரும். இதில் தயக்கம் காட்டுவதோ மயக்கம் காட்டுவதோ காலதாமதம் செய்யவோ இயலாது! இயலாது! இயலாது! இயலவே இயலாது!

    எனவே, குருதேவரின் எழுத்தும் செயலும் சிந்தையும் எண்ணமும் உணர்வும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் திருவருளால் நிகழுபவைதான் என்று முழு நம்பிக்கையோடு செயல்படுபவர்களாக நம்மவர்கள் அனைவரும் இருக்க வேண்டும்! இருக்க வேண்டும்! இருக்க வேண்டும்! யாரும் குருதேவரால் வருந்துகின்ற நிலையை அடையவே கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது! அனைவரும் உடனுக்குடன் உண்மையுடன் தலைமையை ஏற்றுப் பணிவுடனும் துணிவுடனும் செயல்படுபவர்களாகத் தங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்! பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்! பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்! இதனைக் குருபாரம்பரியத்தின் “அறிவுரையாக”, “அருளுரையாக”, “அறிவார்ந்த அருளுரையாக”, “அருளார்ந்த அறிவுரையாக” அனைவரும் ஏற்க வேண்டும். பதினெண் சித்தர்கள் மரபுப்படி பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தங்களுக்குச் சமமாகத்தான் எல்லோரையும் உருவாக்குவார்கள் என்பதால்; அருட்செல்வர்கள் குறுகிய காலத்துக்குள் தங்களுக்குக் கிடைக்கும் சத்திகளையும், சித்திகளையும் கண்டு மயங்கி குருவை மாறியோ, மீறியோ அல்லது மறந்தோ, துறந்தோ செயல்படக் கூடாது. அதாவது, “குருவால் சித்தி பெற்றவர்களே ‘குருவாழ்க, குருவே துணை, குருவே எல்லாம், குருவே வழி, குருவே வழித்துணை, குருவே வழிப்பயன், குருவே அனைத்துக்கும் கரு, குருவும் திருவும் ஒன்று, குருவில்லா வித்தை பாழ்’ என்ற ஒன்பது வண்ணத் தத்துவங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்” என்ற குருவாசகம் பிறப்பிக்கப் படுகிறது. எனவே அன்புள்ளம் கொண்ட அடியான்களே, அடியார்களே, அடியாள்களே அருளுலகத்திற்கென்றுள்ள வரம்புகளைக் கரையாகக் கொண்டே அருளாறு (The River of Divinity) தொடர்ந்து கரை உடைக்காமல் ஓடி அனைத்து நலன்களையும் வழங்கி வருகிறது. எனவே, நம்மவர்கள் குருவைத் தெரிய தெரிவிக்க, அறிய அறிவிக்க, புரிய புரிவிக்க, உணர உணர்விக்க, ஏற்க ஏற்கவிக்க .... செயல்படுமாறு அறிவுரையும் ஆணையும் வழங்கப் படுகிறது.


    தொடர்புடையவை: