Gurudevar-yaar
  • முகப்புப் பக்கம்>
  • குருதேவர் யார்?>
  • முன்னுரை
  • முன்னுரை

    முன்னுரை

    Gurudevar as Gnaanaachaariyaar குருதேவர் ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் பெருமளவில் உலக மானுடர் போலவே தமது சித்தர் நிலையை, தமிழினத் தலைமை ஆச்சாரிய குருபீடநிலையை யாருக்கும் காட்டிக் கொள்ளாமலேயே வாழ்ந்தார். இருந்தாலும், சித்தர் என்று கேள்விப்பட்டு அவரைத் தேடி வந்து அருள் வேண்டுபவர்களுக்கும், அருட்கலைகளைக் கற்றுத் தருமாறு வேண்டுபவர்களுக்கும், தத்துவ விளக்கங்கள் கேட்பவர்களுக்கும், சமுதாயப் பிறச்சினைகளை முன்வைத்து வழி கேட்பவர்களுக்கும், … குருதேவர் அவர்கள் சித்தர் நெறியை, தமிழர்களின் சொத்தான மெய்யான இந்துமதத்தை எளிமையாக விளக்கிடுவார். அதன் அடிப்படையில் மேலும் விளக்கங்கள் தந்து வேண்டுவனவற்றை வேண்டுவோர் தரத்திற்கும், வாங்கிக் கொள்ளும் திறத்திற்கும் ஏற்ப வழங்கிடுவார். பெரும்பாலும் குருதேவர் அவர்கள் கேட்போர் கேட்டதற்கும் மேலாகவே வழங்கி அருட்கொடை வள்ளலாகவே திகழ்ந்தார்.

    உதாரணமாகப் பரிகாரம் தேடி வருவோரை அருளாளராக ஆக்கிப் பிறருக்கு அருள் வழங்கும் நிலைக்கே உயர்த்தினார். தம்மிடம் கம்யூனிசம் பற்றி விளக்கம் கேட்டவர்களையே அருளாளராக வேடம் ஏற்று பிறருக்கு மந்திரிப்பவர்களாகத் தயாரித்தார். தாம் பணிபுரிந்த கல்லூரியில் மாணவராகப் படிக்க வந்தோரிலும் தக்காரைத் தேர்ந்தெடுத்து கடவுளரோடு தொடர்பு ஏற்படுத்தி அருட்பட்டங்கள் வழங்கிப் பூசைகளை அறிந்தாராகப் பயிற்சி பெறச் செய்தார். சுயநலம் தேடி வந்தோரைக் கூட பிறருக்கு நலம் விளைவிக்கும் அருட்கோட்டம் நடத்துவோராக மாற்றினார். மிகவும் தீவிரவாதிகளாக நாட்டின் கெட்ட நிலையை மாற்றத் துடிப்போடு வந்தோரையே அமைதியோடு கற்பூரத் தட்டும் பூசைமணியும் ஏந்தி மிதவாதிகளாக அன்புவழியில், அமைதிவழியில் செயல்படச் செய்தார். அச்சம், கூச்சம் நிறைந்தவர்களை தமது தயாரிப்பினால் துணிவு நிறைந்த சமுதாயவாதிகளாக ஆக்கினார். நாத்திக வாதம் கூறி வந்தோரையும் சிவப்புடையும் திருநீறு குங்குமமும் அணிந்து அருட்பணி ஆற்றிடும் நிலைக்கு உயர்த்தினார்.

    குருதேவரின் செயல்பாடுகளைக் கவனித்தோரால் இதுபோல் எண்ணற்ற உதாரணங்களைக் கூறமுடியும். இவ்வாறாகத் தமிழர் நாட்டில், தமிழர்களுக்குத் தங்களின் மதமான சித்தர்நெறியில் பயிற்சிகள் அளித்து தமிழர்களின் மெய்யான விடுதலைக்காகப் பாடுபட்டார். 

    1998இல் குருதேவர் உலகியலாக நிறைவு அடைந்த பின்னும் கூட குருதேவரிடம் முன்பு சாதாரணமாகத் தொடர்பு கொண்டு பழகியவர்கள் பலர் குருதேவரின் உயர்ந்த சித்தர் நிலைகளை இன்று உணர்கின்றனர். அப்படிப் பட்டவர்கள் குருதேவரின் சீடர்களிடம் வந்து குருதேவரைப் பற்றிய விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்தும், அருள் பெற்று உணர்ந்தும் குருதேவரின் சீடர்களாகத் தயாராகி வருகின்றார்கள். தமிழர்களின் மெய்யான இந்துமதத்திற்கும், பிறாமணர்களின் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து தெளிந்து பயனுள்ள வாழ்க்கை வாழத் தயாராகின்றனர்.

    குருதேவர் உலகறிய சித்தராக வாழ்ந்த காலம் 1972 முதல் 1998 வரை. உலகியலுக்கேற்ப அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகத் தம்மைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். திருமணம் புரிந்து இரு மகன்களோடு இல்லற வாழ்க்கையில் இருந்தபடியே சித்தராகச் செயல்பட்டார். இந்தக் காலக்கட்டத்திற்குள் குருதேவர் சில நூறு நூல்களை எழுதியும், ஆயிரக்கணக்கில் அஞ்சல்களையும் கட்டுரை அஞ்சல்களையும் எழுதியும் செயல்பட்டிட்டார். அதேசமயத்தில் தாம் எழுதிய நூல்களில் ஒரு நூறு நூல்களுக்கு மேல் பதிப்பித்து வெளியிட்டார். ஆண்டிற்கு 10 சுற்றுப்பயணங்களுக்கு மேல் நடத்தி தமிழகம் எங்கும் பல புதியவர்களைச் சந்தித்து அவர்களைத் தம்மிடம் பயிற்சி பெறச் செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். தமிழர்களின் மதமான மெய்யான இந்துமதத்தை தமிழர்களுக்கு முழுமையாக விளக்கிடப் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டார். Gurudevar as Gnaalaguru இந்து மறுமலர்ச்சி இயக்கம், அருட்பணி விரிவாக்கத் திட்டம், இந்துவேத முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழின மொழி மத விடுதலை இயக்கம் … போன்ற பல இயக்கங்களை செயல்நிலைக்குக் கொணர்ந்தார். அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் அருட்கோட்டங்களை அமைத்து வாராவாரம் யாகம் நடத்தி பொதுமக்களுக்கு அருள்வழங்கும் திட்டத்தைச் செயலாக்கினார். எண்ணற்ற தனிமனிதர்களுக்கு அருள் வழங்கி ஞானக்காட்சி, அருட்காட்சி, அருட்கணிப்பு செய்யும் ஆற்றல், மந்திரிக்கும் ஆற்றல் … போன்ற அருட்கலைகளில் சித்தி பெறச் செய்தார். இவை அனைத்தையும் பகுத்தறிவுப் பூர்வமாகவே நடத்திக் காட்டினார். பொய்யான ஹிந்துமதத்தில் கற்பனையாகக் கூறப்படும் அனைத்தையும் மெய்யான இந்துமதப் பயிற்சிகள் மூலம் நடைமுறையில் அநுபவப் பூர்வமாகச் செயலாக்கிக் காட்டினார்.

    குருதேவரின் எழுத்துக்களிலிருந்து சில பத்திகளைக் கோர்த்து குருதேவர் யார் என்ற விளக்கத்தை வழங்கும் வண்ணம் ஒரு தொகுப்புக் கட்டுரையை இந்த சிறு நூலில் வழங்குகிறோம். குருதேவரைப் பற்றி அவரது நேரடி வாரிசுகளிடம் கேட்டுத் தெரிந்தோர்க்கும், குருதேவரது நேரடி வாரிசுகளிடம் அருள் நலம் பெற்றோருக்கும், குருதேவர் எழுதிய நூலினைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கும், இன்ன பிறருக்கும் ஓரளவு குருதேவரைப் பற்றிய ஓர் அறிமுகம் வழங்குமுகமாக 14ஆம் ஆண்டு குருபூசையில் இந்த நூல் தயாரிக்கப் பட்டிருக்கின்றது. மற்ற விளக்கங்களை குருவழிக் காண்க.

    – அருளாட்சித் திருநகராம் மதுரை வாழ் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள்.

    தொடர்புடையவை: