Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • கோயில்கள்>
  • ஐயப்பன் யார்?
  • ஐயப்பன் யார்?

    ஐயப்பன் யார்?

    சபரியின் மலையில் சமாது கொண்ட அருள்மிகு ஐயப்ப பண்டாரம்.

    திரேதகா யுகத்தின் நாயகரான யக்ஞவல்லியின் குருவாக விளங்கிய ஏழாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் கபாடபுரத்துக் கருவூறார் அவர்கள் அயோத்தி தசரத இராமன் வேண்டுகோளால் வேடுவ குலத்துத் தவமூதாட்டி சபரி தீப்புகுந்து எரிந்த யக்ஞ குண்டத்தின் மீது கட்டிய சமாதின் சத்தி வழங்கு அருளூற்றுத்தான் சபரி மலை. இச் சபரி மலையின் அருளூற்றுக் காப்பாற்றப் பட அக்காலத்து அருளாட்சியில் முதன்மை பெற்று விளங்கிய பதினெட்டாம்படிக்கருப்புகள் அருவுருவ சமாதியாயினர். அத்துடன், காலங்கள் தோறும் சித்தி முத்தி பெறும் ஐயனார்களில் விருப்பமுள்ளவர்கள் இந்தச் சபரி மலையில் பதினெட்டாம்படிக் கருப்புகளின் அருட்கோட்டத்தில் சமாது ஆகி இந்துமத மறுமலர்ச்சிக்கும் வளவளர்ச்சிக்கும் உறுதுணையாகிடும் திட்டம் அறிவிக்கப் பட்டது. எனவே, சபரி மலையில் காலங்கள் தோறும் பல ஐயனார்கள் சமாது ஆகி வருகிறார்கள்.

    சபரிமலையில் சமாது ஆகியுள்ள பல ஐயனார்களில் ஒருவரே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கேரள நாட்டுப் பந்தள மன்னனின் திருமகன் ஐயப்பன்.

    இவன் கருவில் திருவுடையானாகத் தோன்றிச் சித்துக்கள் விளையாடித் தனது பதினாறாவது வயதில் ஞான முதிர்ச்சி பெற்றான். இவனுக்கு அருவுருவ சித்தியும் முத்தியும் கிடைத்ததால், இவன் சூரிய குலத்துக்குரிய சித்தர் காகபுசுண்டரின் வாரிசுகளையும், சந்திர குலத்துக்குரிய சித்தர் கருவூறாரின் வாரிசுகளையும் சந்தித்து முறைப்படி குருவருளும் திருவருளும் சித்தி செய்து கொண்டான். பிறகு கலியுகத்தில் இந்துமத மறுமலர்ச்சிக்காகவும், பத்தி இயக்கப் புத்தமைப்புக்காகவும்; அருளுலகக் குருநிலை மாணாக்க நிலை விளக்கத்துக்காகவும் ….. மூன்று யுகங்களாகச் சிறந்த அருளூற்றாக இருந்து வரும் சபரியின் சமாது அருகிலும், பதினெட்டாம்படிக் கருப்புகளின் அருட்கோட்டத்துள்ளும் அருவுருவ சமாது நிலையை நிறுவினான்.

    இவன் கலியுகத்தில் ஆண்டுக்கொரு முறை அருள் வழங்கு பண்டாரமாக விளங்கிட அருளுலகத்தார் ஒப்புதல் வழங்கினார்கள். அதுவும், இந்துமத ஆண்டு பிறக்கின்ற தை மாதத்தின் முதல் வாரத்தோடு இப் பண்டாரப் பணிவு நிறைவுற்று; மீண்டும் ஐயப்பன் அருவுருவ சமாதியில் நிறைந்திடல் வேண்டும். ஐயப்பன் பண்டார நிலை பெறக் கார்த்திகை மாதத் துவக்கம் முதல் பத்தர்கள் பூசை செய்து, வருந்தி, அரற்றி, பாடுகிடந்து, தொழுது, புலம்பி, ஆடிப்பாடி, கூப்பாடு போட்டுக் கும்பிட்டுத் தவநிலைகளை வெற்றியுறச் செய்ய வேண்டும். சிவநிலைக்குரிய கார்த்திகை மாதமும், திருமால் நிலைக்குரிய மார்கழி மாதமும் பத்தர்களின் தவநிலை மாதங்கள். பிறம்மன் நிலைக்குரிய தை மாதத்தின் முதல் வாரமே ஐயப்பன் அருள்வழங்கு பண்டாரமாகச் செயல்படும் நன்னாட்கள்.

    “ஐயப்பன் அருள் வழங்கிடல் அறுபத்து நான்கு நாள்” - என்ற குருபாரம்பரிய வாசகம் மேற்படி விளக்கங்களின் சாரம்.

    தொடர்புடையவை: