Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • வினா-விடைகள்>
  • இறைச்சியும் இறைவனும்.
  • இறைச்சியும் இறைவனும்.

    இறைச்சியும் இறைவனும்.

    இறைச்சியும் இறைவனும்:-

    ‘இறைச்சி’ என்ற சொல்லுக்கே ‘இறைவன்’, ‘தலைவன்’, ‘மேலோன்’, ‘முதல்வன்’, ‘மூலவன்’, ‘எல்லாமாக இருப்பவன்’, ‘எங்கும் நிறைந்தவன்’, ‘நிறைவை உடையவன்’, ‘முழுமை உடையவன்’ …. என்று பல பொருள்கள் சித்தர்களின் நூல்களில் குறிக்கப் படுகின்றன.

    இறைச்சி யுணவைப் படையலாகப் படைத்து இயவுளின் அருளைப் பெறுவதே இறைமை. இறைமை ஆற்றலை வழங்கும் இறைவன் இறைச்சி யுணவின் அவிர்ப்பலியில் தோன்றுவான்.

    ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், ஞானம், மாந்தரீகம் எனும் எட்டினையும் சூரிய குலத்தார் இறைச்சிப் படையலின் மூலமே சித்தி செய்வர்.

    நேமம், நியமம், நிடதம், நிட்டை, சுருதி, ஆரணம், ஆகமம், மீமாம்சை, தாந்தரீகம், ஏந்தரீகம் எனும் பத்தினையும் சந்திர குலத்தார் இறைச்சிப் படையலின் மூலமே சித்தி செய்வர்.

    பதினெண் சித்தர்களின் மேற்கூறிய பதினெட்டுப் பூசை முறைகளும் இறைச்சி யுணவுப் படையலின் மூலமே இறைமை பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.

    ….. இவை யாவும் குருவாக்கு, குருவாசகம், குருபாரம்பரியம்.

    பலியிட்டு இறைச்சி யுணவைப் படைத்து வழிபடுவது சரியா?

    பதினெண்சித்தர்கள் படைத்த இந்துமதத்தின் அடிப்படையும், உள்ளீடும் முடிவும் பலிகள் கொடுத்துத்தான் பூசைகளைத் துவக்க வேண்டும். இறைச்சி யுணவுப் படையலைப் படைத்துத்தான் பூசைகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற முறையான சட்டதிட்ட செயல்நிலை உள்ளது. இதனை மாறியும் மீறியும் மறந்தும் துறந்தும் மறுத்தும் வெறுத்தும் செயல் பட்டிட்டதால்தான் இந்துமத வழிபாட்டு நிலையங்கள் அனைத்தும் பாழடைந்தன, பயனிழந்து நின்றன என்ற பேருண்மையினைப் பத்தாவது பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தங்களது குருபாரம்பரியம், குருவாசகம், குருவாக்கியம்…. முதலியவற்றில் மிகத் தெளிவாகக் குறிக்கின்றார்கள்.

    இறைச்சி யுணவு உண்ணாதவனுக்கு முத்தி கிடையாதென்றும் அவன் மறுபிறப்பில் உலர்ந்த எலும்புத் துண்டுகளைக் கடித்துத் தன் பசியடங்காது திரியும் சொறிபிடித்த தெரு நாயாகப் பிறந்து துன்புறுவான் என்ற கண்டிப்பும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளால் வெளியிடப் பட்டுள்ளது. இதில் விதிவிலக்கு பெறுபவர்கள் ஞானசித்தர்கள் மட்டுமே என்ற குறிப்பு இருப்பதால்தான் ஞானசித்தராகிய இராமலிங்க அடிகளாரைப் போற்றுகிறோம்.

    உயிர்க்கொலை செய்வது பாவமல்லவா?

    பதினெண்சித்தர்களின் உண்மையான இந்துமதப்படி உயிர் அழியாதது, அதை யாரும் கொல்ல முடியாது, அது எண்ணற்ற பிறப்புக்களை எடுத்து ஆவியோடும், ஆன்மாவோடும் ஒன்றி முச்சித்தி நிலையைப் பெற்று இயற்கையோடு கலக்கும். அதாவது அணுக்களாகப் பிரிந்து கலக்கும். எனவே, உயிர்க் கொலை என்பதற்கு இடமில்லை. இந்தச் சொல்லே பொருளற்றது.

    பதினெண்சித்தர்கள் அருளுலக பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கினையும் பெறுவதற்குரிய பூசைப் பொருளே இம் மண்ணுலகிலுள்ள பயிரினங்களும் உயிரினங்கலும் என்று மிகத் தெளிவாக விளக்கமாக ஆணையிட்டுக் கூறுகிறார்கள். இதனை,

    “பொன்னுக்கும் ஓட்டுக்கும் மாறுபாடு கருதாதே புலாலுக்கும் பயிருணவிற்கும் வேறுபாடு கருதாதே குருவுக்கும் திருவுக்கும் முரண்பாடு கொள்ளாதே அனைத்தும் இணைத்து ஒன்றென உணர்வதே ஞானம்”

    என்ற குருவாக்கியம் மிகத் தெளிவாக மேற்சொன்ன கருத்தை விளக்குகிறது.