பத்தி 3

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப் படுத்தப் பட்டது, பதப் படுத்தப் பட்டது, பண் படுத்தப் பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, நல்ல வழியாக இருப்பது, நல்ல வழிகாட்டியாக விளங்குவது, வழித்துணையாக இருப்பது, வழிப்பயனாக நிற்பது, உயிர் போன்றது, வாய்மையானது, மெய்மையானது, தூய்மையானது, துயரத்தைப் போக்க வல்லது, துன்பத்தைத் தடுத்து உடனடியாக அகற்ற வல்லது, உய்வினைத் தரக்கூடியது, உயர்வானது, உண்மையானது, உற்சாகத்தைத் தரக் கூடியது, உள்ளொளி வழங்குவது உலகு காப்பது, தொய்வினை நீக்க வல்லது, சோர்வினை மாற்ற வல்லது, அச்சத்தை அழிக்க வல்லது, கடவுளால் கூறப்படுவது, கடவுளைப் பற்றிக் கூறுவது... என்று பல பொருள்கள் உண்டு.

எனவேதான் இந்துவேதம் என்ற சொல்லுக்கு இந்து என்ற சொல்லுக்கு உரிய பொருள்களும், வேதம் என்ற சொல்லுக்கு உரிய பொருள்களும் இரண்டறக் கலக்கப் பெற்று எண்ணற்ற புதுபுதுப் பொருள்களும், இரண்டுக்கும் உரிய பொருள்களும் கூறப் படுகின்றன.

குறிப்பாக இந்து வேதம் என்றால் அழியாதது, செழிப்பானது, கொழுமையானது, வளமானது, வலிமையானது, வாலிப்பானது, பொலிவு மிக்கது, விழிச்சிக்குரியது, எழிச்சிக்குரியது, பயிற்சிக்குரியது, முயற்சிக்குரியது, உயர்ச்சிக்குரியது, மலர்ச்சிக்குரியது, மறுமலர்ச்சிக்குரியது, வளவளர்ச்சிக்குரியது, ஆட்சிக்குரியது, மாட்சிக்குரியது, மீட்சிக்குரியது, கடவுளைக் காண உதவுவது, மனிதனைக் கடவுளாகவே காண வல்லது, கடவுளை உடனடியாக உதவிக்கு வரவழைப்பது, அருளுலகோடு உறவு கொள்ள உதவுவது, பிறப்பிறப்பை வெல்ல உதவுவது, பேரின்பத்தைத் தர வல்லது, எதையும் கடவுளாக்கும் வல்லமை பெற்றது. எல்லாக் கடவுள்களோடும் தொடர்பு கொள்ள உதவுவது, எல்லா வகையான போதனைகளையும் தர வல்லது என்றிப்படி எண்ணற்ற புதிய புதிய பொருள்கள் கூறப்படுகின்றன.

இதனால்தான், பதினெண்சித்தர்கள் இந்து வேதத்தை எந்த உலகுக்கும் முதன்முதலிலேயே வழங்குகின்றவர்களாக இருக்கின்றார்கள். அதாவது புதிது புதிதாக தோன்றக் கூடிய எந்த உலகானாலும் சரி, அந்த உலகில் தோன்றிடக் கூடிய பயிரினங்களும், உயிரினங்களும் பண்பட்டு, தூய்மைப்பட்டு, வாய்மைப்பட்டு உய்வடைவதற்காக இந்துவேதத்தை முதன்முதலிலேயே வழங்குகிறார்கள் பதினெண்சித்தர்கள்.