பத்தி 14

இந்த உலகத்தை நான்கு வகைப்பட்ட நிலங்களாக

  1. குறிஞ்சி (மலையும் மலைசார்ந்த இடமும்),
  2. முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்),
  3. மருதம் (வயலும், வயல் சார்ந்த இடமும்),
  4. நெய்தல் (கடலும், கடல் சார்ந்த இடமும்)

என்று நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள் பதினெண்சித்தர்கள். எனவேதான், இந்த உலகத்தை நானிலம் என்று பெயரிட்டார்கள்.

இதனடிப்படையிலேயே இந்து வேதத்தின் உறுப்புக்களை பூசை மொழி, பூசை விதி, தத்துவம், செயல் சித்தாந்தம் என்று நான்கு பகுப்புக்களாகப் பிரித்தார்கள்.

இதே போல், இந்து வேதத்தின் செயல் வடிவமான இந்து மதத்தின் செல்வங்களை மறைகள், முறைகள், நெறிகள், வேதங்கள் என்று நான்காகப் பகுத்தார்கள்.

இது மட்டுமின்றி இந்த நான்கிலுள்ள ஒவ்வொன்றையுமே நான்காகப் பகுத்து நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று ஆக்கியிருக்கிறார்கள்.

இதேபோல், இந்து வேதத்தின் செல்வங்களாக அதாவது, இந்து வேதத்தைப் பயன்படுத்தி அருளை அநுபவப் பொருளாக விளைவித்துக் கொடுக்க கூடிய சாதனங்களாக நான்கு வகைப்பட்ட இலக்கியங்களை சுருதி, ஆரணம், ஆகமம், மீமாம்சை என்று படைத்திருக்கிறார்கள்.

இந்த நான்கும் இந்து வேதத்தின் அடிப்படைகளையும், உள்ளீடுகளையும், உயிரோட்டங்களையும் சாறாக்கப் பட்டவைகளேயாகும்.

எனவே தான், இந்து வேதத்தின் செயல் வடிவமான இந்து மதத்தின் செல்வங்களை மறை, முறை, நெறி, வேதம் என்று நான்கு பெரும் பகுப்புக்களாகப் பகுத்து; அவை ஒவ்வொன்றையுமே நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம் என்று நான்கு உட்பகுப்புக்களாக பகுத்தது போல்;

இந்த இந்து வேதத்தின் செல்வங்களாக சுருதி, ஆரணம், ஆகமம், மீமாம்சை எனும் நான்கையும் நான்கு சுருதிகள், நான்கு ஆரணங்கள், நான்கு ஆகமங்கள், நான்கு மீமாம்சைகள் என்று ஒவ்வொன்றையும் நான்கு உட்பிரிவுகள் உடையதாக பகுத்திருக்கிறார்கள்.

அதாவது இந்து வேதத்தின் செல்வங்களும் பதினாறு பிரிவுகளை உடையவைகளாக அதாவது, பதினாறு வகைப் பட்டவைகளாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

இந்து வேத்தின் செயல் வடிவமான இந்து மதத்தின் செல்வங்களும் பதினாறு வகைப்பட்ட பிரிவுகளாக அதாவது, பதினாறு வகைகளாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.