அன்பு சேவுக! - பகுதி 8


  1. அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்திற்கு உட்பட்டது அரசியலா?
  2. யார்வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண் சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!
[குருதேவர் அறிக்கை 38இலிருந்து]

அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்திற்கு உட்பட்டது அரசியலா?

அன்புச் சேவுக!

எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு இவ்வறிக்கையின் மூலம் நாம் மூன்றாண்டுகளை விரைந்து முடித்துவிட்டு; நான்காவது ஆண்டிலே காலடி எடுத்து வைக்கின்றோம், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை விட, இன்றைய நாட்டின் நிலை மிகவும் சிக்கலானதாகவும், சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய வகையிலும் அமைந்துள்ளது. ஏனெனில் நாட்டின் எல்லாத் துறைகளுமே மேலோட்டமாக அமைதியாகக் காணப்பட்டாலும் உண்மையில் மிகவும் கொடூரமான இறுக்கமான பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.

நண்ப!
சமயமும் - அரசியலும் ஒன்றையொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் காலக்கட்டம்' வந்துவிட்டது. மதவாதிகள் ஆங்காங்கே நேரடியாக இன்றைய அரசியலில் ஈடுபடத் துவங்கி விட்டனர். இந்த நிலை குறித்து, அரசியல் வல்லுனர்களும் பொருளாதார மேதைகளும், சமுதாய நிலை எழுத்தாளர்களும் மிகத் தீவிரமாக 'சமயம் -- அதாவது மதவாதிகள் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்றும்; 'சமயப் போதகர்களும் குருமார்களும் சட்டமன்றத்தையும் பாராளுமன்றத்தையும் நிர்ணயிப்பதா?'... என்றும் வினாவெழுப்பி வருகின்றனர். மேலும், 'சமயக் குருமார்களால்தான் மக்களின் வாழ்வும் வளமும் பாழாகி விட்டதாகவும்; பாழாகி வருவதாகவும் போலியான, மாயமான வாதத்தை மக்கள் முன் எடுத்து வைக்கின்றனர். இன்றைய நிர்வாகச் சீர்கேடுகளுக்கும்; சமுதாய ஒழுக்கக் கேடுகளுக்கும் காரணம் இந்த அரசியல் வாதிகளின் ஏமாற்றல்களும், பொருளாதாரவாதிகளின் பயனற்றத் திட்டங்களும், சமுதாயநிலை எழுத்தாளர்களின் சீழ்ப்பிடித்தக் கதைகளும் நவீனங்களும்தான் என்பதை மூடிமறைக்கவே இவ்வாறு சிந்துபாட ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் புகழ்பெற்ற அரசியல் விமரிசகர் ஒருவர் எழுதுகின்றார், 'பஞ்சாப்பின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவது இன்றைய சீக்கிய மதகுருமார்கள். எனவே, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சுத்தமான மக்களாட்சியை நிர்ணயிக்க வேண்டியது மக்களேயன்றி; மதக் குருமார்களல்ல ' - என்று கூறுகின்றார்.

இந்தியா விடுதலை பெற்று நாற்பது ஆண்டுகள் ஆகியும் நாட்டில் வறுமையோ, பஞ்சமோ, வேலையில்லாத் திண்டாட்டமோ ... முழுமையாக நீங்கவில்லை, மேலும், அரசியல்வாதிகள் தாங்கள் பதவிக்கு வந்து விட்டால் முடிசூடா மன்னர்கள் என்பதாகவும்; தங்களைத் தட்டிக்கேட்க நாட்டில் உள்ளவர்களில் எவருக்குமே தகுதியில்லை என்பதாகவும் ... நினைத்து இறுமாந்து வருகின்றனர். இவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களே கூட தட்டிக் கேட்க முடியாத கட்டத்தில்தான் வேறுவழியின்றி சமயவாதிகள் - குருமார்கள் தங்கள் பொற்கோவிலின் மாடங்களை விட்டு மக்களைக் காக்க, அநீதிகளைப் போக்கப் புறப்பட்டு விட்டனர். இதனை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பில் உள்ள சமுதாயவாதிகள்தான் இந்த நிலையைக் கண்டித்து போலியான வாதத்தை மக்கள் முன் வைத்துக் குழப்பி வருகின்றனர்.

பதினெண் சித்தர்கள், இந்துமதத்தை சமூக விஞ்ஞானமாகப் படைத்ததே, நாட்டில் ஒழுங்கு விதிமுறைகள் கெட்டுப் போகும் காலத்துக் கண்டித்துத் திருத்துவதற்காகத்தான். இதைத்தான் தமிழக, தமிழின அரசு வரலாற்றில் காண்கிறோம்.

தொடர்ச்சி - [குருதேவர் அறிக்கை 39இலிருந்து]

இதற்காகத்தான், பதினெண் சித்தர் பீடாதிபதிகளும்; அவர்களின் கருவழி, குருவழி, விந்துவழி வாரிசுகளும்; அரச குடும்பத்தினர்களுக்கு குருமார்களாக, குருக்கள்களாக ... இருந்து வந்துள்ளனர் . நமது மக்கள் போலியான அரசியல்வாதிகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியாத காலகட்டங்களில்; மதவாதிகளின் அரசியல் தலையீடு அவசியமே

ஏனெனில், இந்திய விடுதலைக்கு பிறகு: அரசியல்வாதிகள், 'இந்திய விடுதலையே மதத்தின் பெயரால்தான் மக்கள் சத்தியை ஒன்று திரட்டிப் பெறப்பட்ட ஒன்று' -- என்ற பேருண்மையை மறந்தும் துறந்தும் செயல்பட ஆரம்பித்திட்டார்கள் குறிப்பாக, இவர்கள், 'ஏறிவந்த ஏணி'யையே எட்டி உதைப்பது போலத் தங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்து மதத்தின் ஒற்றுமையையும், உரிமையையும், பெருமையையும், பாரம்பரியங்களையும், நிறுவனங்களையும், மதத் தலைவர்களையும், மதப் பேரரறிஞர்களையும், மத இலக்கியங்களையும், மத நிகழ்ச்சிகளையும், மதச் சின்னங்களையும் ... சிதைக்க, சீரழிக்க, இழித்துரைக்க, பழித்துரைக்க, கேலி செய்ய, கிண்டல் செய்ய, அன்னியர்கள் சூறையாடிடத் தேவையான வாய்ப்பு வசதிகளை வழங்கி வந்துள்ளார்கள்.

நண்ப! ஒழுக்கமோ, நேர்மையோ, நீதியோ, கட்டுப்பாடோ, உண்மையோ ... இல்லாதவர்களாகவே வாழுபவர்கள்தான் பெரும்பாலும், அரசியல் துறையில் இருக்கின்றார்கள். அவர்கள், நற்பண்புகளில் சிறந்த மதத்துறையினர் என்றாவது ஒருநாள் அரசியல் துறையைப் பிடித்துக் கொள்ள நேரிடுமோ என்று அஞ்ச ஆரம்பித்திட்டார்கள். அதனால்தான், மக்களுக்கு மதத்துறையில் பற்றோ, பாசமோ, மதிப்போ ஏற்பட்டு விடாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்கின்றார்கள். இதற்காக, அன்னிய மதங்களைக் கொண்டு இந்து மதத்தின் சிறப்பையும், செல்வாக்கையும் தாக்கித் தகர்த்துத் தரைமட்டமாக்கி வருகின்றார்கள். இந்த முயற்சியில், எல்லா அரசியல்வாதிகளும் ஒருமித்த கருத்தினராய் ஒற்றுமையோடு செயல்படுகின்றார்கள். அதாவது, மேடைப்பேச்சு, எழுத்து, நாடகம், திரைப்படம் அனைத்திலும் இந்துமதத் தத்துவத்தையும், செயல்முறைகளையும், தலைவர்களையும், அருளாளர்களையும் இழிவு படுத்துவது, கிண்டல் செய்வது, கேலிபண்ணுவது என்பது மிகமிகச் சாதாரணமாகிவிட்டது. அத்துடன், எப்போதாவது ஏதாவது ஒரு சாமியார் ஒரு சின்னத்தவறை, ஒரு சின்னக் குற்றத்தைச் செய்தால் கூட அதை மிகப் பெரிய அளவில் விளம்பரப் படுத்தி, தரக்குறைவாக விமரிசனம் செய்வது மரபாகி விட்டது. அதே நேரத்தில், அரசியல்வாதிகள் செய்யும் கொலை, கொள்ளை, கையூட்டு, ஏமாற்றல், சுரண்டல் அதிகார முறைகேடு ..... முதலிய தவறுகள் மிகமிகச் சாதாரணமாக மலிந்து நிறைந்து கிடக்கின்றன. 'இவைதான், அரசியல்வாதிகளின் இலக்கணங்கள் அல்லது வாழ்வியல் நடைமுறைகள் என்று நம்பி, விரும்பி மக்கள் ஏற்குமாறு செய்து விட்டனர். அதனால்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள்; பகுத்தறிவுவாதிகளாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், மத மறுப்பாளர்களாகவும் வேடமிட்டுக் கொண்டு வாழ்கின்றார்கள் அதாவது, மதவாதியாக அல்லாதவன் எந்தத் தவறையும் செய்யாலாம் அல்லது எந்தக் குற்றத்தையும் செய்யலாம் என்ற ஒரு தவறான நீதிக் கருத்துக்களை உண்டாக்கி விட்டனர். எனவேதான், இவர்கள், மதவாதிகள் அரசியலுக்கு வரவே கூடாது என்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், இந்துமத நிறுவனங்களும், நிர்வாகங்களும் மதத்தை வளர்க்கவே கூடாது என்று சொல்கின்றார்கள்.

ஆனால், இந்த அரசியல்வாதிகள் அன்னிய மதங்களுக்கு அளவற்ற மதிப்பும், செல்வாக்கும், சலுகையும் வாரிவாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றார்கள் அதாவது, இந்த அன்னிய மதத்தவர்களின் ஆதரவு (வாக்குச் சீட்டு = வோட்டு) தங்களுக்கு அரசியலில் என்றென்றும் தேவை என்பதற்காகவே; இப்படி, அன்னிய மத்த்தவர்களை, ஆதரிக்கின்றார்கள். அதே நேரத்தில் இந்தியாவுக்குரிய மதங்கள் வளர்ந்தாலோ, வலிமை பெற்றாலோ தங்களுக்கு ஆபத்து என்று நினக்கின்றார்கள். எனவே, 'மத்த்துக்குட்பட்டது அரசா? அரசுக்கு உட்பட்டது மதமா?'' - என்பதை இந்த நூற்றாண்டு விரைவில் தீர்மானிக்க வேண்டும். அதற்கு மக்களை பக்குவப் படுத்தும் மாபெரும் முயற்சியில்தான் கடந்த இருநூறு ஆண்டுகளாக இ.ம.இ. பாடுபட்டு வருகின்றது.

இ.ம.இ.யின் இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட முயற்சியின் உச்சக்கட்ட நிகழ்ச்சியாகவே இப்போழுதைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்கள் அனைவரும் குருபாரம்பரியம் கூறுகின்ற மூன்று வகையான அமைப்புக்களின் கீழ் செயல் படத் தயாராக இருக்க வேண்டுகிறேன். 1. தமிழ்ப் பண்பாட்டு விடுதலை இயக்கம். 2. தமிழ்மொழி விடுதலை இயக்கம், 3. தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்த மூன்று இயக்கங்கள் உருவாக்கும் முக்கோண அரணுடைய நகர்தான் அருளாட்சித் திருநகராக இருக்கும். அந்நகர்தான், 'அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்துக்கு உட்பட்டது அரசியலா? என்பதை நிர்ணயிக்கும். இந்த நிர்ணயிப்பின் கருத்தலைகள், செயலலைகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியே தீரும்; பிறகு உலகு முழுவதும் பரவியே தீரும்.

அன்பு,
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 42-48இலிருந்து]

யார்வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண் சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!

 அன்புச் சேவுக!

1. நமது இயக்க முதுபெரும் செயல்வீரர் Dr. S.R. நீலமேகம் பிள்ளை இறப்புக்கு மட்டுமே நம்மவர்கள் சென்றுள்ளார்கள். அதுவும், அனைவரும்; இவர் 'இறைமை' (இறைவன்) நிலையை எய்தியுள்ளவர்; அனைவருமே சித்தி பூசை செய்து கொள்ள வேண்டிய ஆலவாய் மாமூதூர் மதுரைச் சுடலையில் நிலையாக அருவுருவ அருளாட்சி அமைப்புப் பணியாளர்களில் ஒருவராக இருந்திடும் பேறு பெற்றவர்; இச்சுடலையின் பத்தரகாளி, பத்திரகாளி, பத்திறகாளி, ஈசுவரி, ஆண்டிச்சி எனும் அனைவராலும் மதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்; இ.ம.இ.யின் மூலவரான கருவூறார் வழிவந்த கண்டப்ப கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப்பிள்ளையின் வழி வந்தவர்; நமது இயக்கத்தில் 'பெரியவர்' என்று போற்றப் பட்டவர்...... என்று தெரிந்து புரிந்திருந்தும் யாருமே மறுநாள் பால்தெளியலுக்குச் செல்லவில்லை!!!.

2. அருளுலகில் சித்திகளைப் பெறுவதறகாக மிக மிகப் பெரிய அரிய உயரிய பூசைகளையெல்லாம் செய்து கொண்டவர்கள் மிகுதியாக உள்ள அருளாட்சித் திருநகரில்; வட்டாரத்தில்; மாவட்டத்தில்..... 'ஏனோ! தானோ'' நிலைக்குரிய நிகழ்ச்சி நடந்து விட்டது!!!......

3. நம்பிக்கையும், குருவாணை எதுவானாலும் அதனை உடனே முழுமையாக நிறைவேற்றும் போக்கும்; எதையும் குருவழியே உணர்ந்து செயலாக்கும் மனமும், எவருக்கும் குருவுக்கேவுரிய மேலாண்மை இடத்தைத் தன் வாழ்வில் தராத தரமும்; எப்படியும் குருவின் திட்டங்களைச் செயலாக்கிடும் திறமும் .... ஒருசேரப் பெற்ற ஊழ்வினைத் தொடர்புத் தோழா! நண்பா! அடியானே! அன்புச் சேவுகா! .... எந்தப் பீடாதிபதிக்கும் கிடைத்திடாத அளவு மக்கள் தொடர்பு எமக்குக் கிடைத்திடுகின்றது. இதற்குக் காரணம், யாமொருவரே அனைத்து வகையான பாரம்பரியச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளையும், மரபுகளையும், முறைகளையும், நெறிகளையும், விதிகளையும், ... தேவைக்கேற்ப முழுமையாக மாற்றியும், திருத்தியும், மீறியும், உடைத்தெறிந்தும் ... மானுடர்களுக்குள் பீடாதிபதியின் தொடர்பால் அருட்செல்வர்கள், அருட்சோலைகள், அருளூற்றுக்கள்,... தோன்றிடும் வண்ணம் வாழுகிறோம். இதில், எண்ணற்ற தோல்விகள், தொல்லைகள், ஏமாற்றங்கள், அவசரப் படைப்புக்கள், அரைகுறைப் படைப்புக்கள்... என்று எண்ணற்ற வகைகள் உருவாகியுள்ளன. இவை யனைத்துமே, எமது வரலாற்றுச் சின்னங்களே! எமது சாதனைகளின் வடிவங்களே! ... ஏனெனில், 'யாம், யாரையுமே எந்த எதிர்பார்ப்புடனும் உருவாக்குவதில்லை. எனவே, யார் எந்த அளவு உருவானாலும் மகிழ்ச்சியோடு அவர்களை அருளுலகப் பணிகளுக்காகத் தனித்தும், பிறரோடு பிணைத்தும், எம்மோடு இணைத்துமே செயல்படுத்துகிறோம். இதில், எம்மைப் பொறுத்தவரை எதையும் வெற்றியாகப் பெருமிதப்படவோ! அன்றி, எதையும் தோல்வியாகக் கருதி வருத்தப்படவோ இயலாது. அனைத்தும் தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயலே! அம்மையப்பனின் திருவிளையாடலே ... என எண்ணியே நிறைவும் அமைதியும் அடைகிறோம்!

4. அண்மைக் காலத்தில் நமது இயக்க வரலாற்றில் பிறர் மனம் நோவது பற்றிக் கவலைப் படாமல் விமர்சனம் வழங்கவும்; முடிவுகளை எடுக்கவுமாகச் செயல்படுகிறோம் யாம். இதற்குக் காரணம்; பதினெண்சித்தர் பீடத்தின் சித்தர் நெறியான சீவநெறியெனும் இந்துமதம் இந்த மண்ணுலகை விடத் தொன்மையானது; மிகமிகத் தெளிவான ஏட்டறிவையும், பட்டறிவையும் பெற்றது. ஆனால், இவையெல்லாம் பழமையானவை; காட்டுமிராண்டிக் காலத்தவை; கரடுமுரடானவை; உலகியலுக்கு அப்பாற்பட்டவை; நடைமுறைக்குச் சிரமமானவை; சாதாரண அறிவு படைத்த சராசரி மனிதரால் புரிந்து கொள்ள முடியாதவை; எல்லோரும் அநுபவத்தில் கையாள முடியாதவை ... என்ற கருத்து விளக்கங்களை அல்லது திறனாய்வுக் குற்றச்சாட்டுக்களைக் காலங்கள் தோறும் பெற்றிடுகின்றன. குறிப்பாக, 'இறைச்சியுணவு உண்ணல்', 'பலி கொடுத்தல்'; 'வழிபாட்டுக்குரிய கடவுள்களே ஆயுதப் புரட்சியையும் குருதிப் போரையும் பரிந்துரைத்தல்'; 'துறவுநிலை, உறவுநிலை, மறவுநிலை பற்றிய புரியாமைகள்'; 'பெண்ணுக்குத் தரப்படும் அருளுலக நிலைகள்'; 'சுடலை வழிபாடு, முன்னோர் வழிபாடு, உருவ வழிபாடு ..... முதலியனவற்றின் அறியாமைகள்'; ... என்று சிலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டலாம். -- இப்படிப் பட்டனவற்றிற்கு முறையான விளக்கங்களை நிறைவாகத் தரக்கூடிய மாவீரர்களை உருவாக்கியே தீர வேண்டிய கட்டாய நிலையிலேயே உள்ளோம் யாம். எனவேதான், மேற்படி மாவீரர்களை ஏட்டறிவாலும், பட்டறிவாலும் தயாரிப்பதுடன்; அவர்களுக்கு அருளாற்றலை இட்டும் தொட்டும் சுட்டியும் 'குருபாரம்பரிய மரபுப்படி' வழங்கியும் தயாரிக்கிறோம் யாம். இந்தத் தயாரிப்பு முறைகளில் அவரவர் நம்பிக்கைக்கும், முயற்சிக்கும், ஆர்வத்துக்கும், செயல்பக்குவத் தரத்திற்கும், திரத்திற்கும், திறத்திற்கும், தீரத்திற்கும் ஏற்ப அவரவர் குறிப்பிட்ட அளவு தேர்ச்சியோடு நின்றுவிடுகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சிலராவது விடாமுயற்சியுடன் தொடர்ந்து குருவழியாகச் செயல்பட்டு 'மாவீரர்' என்ற நிலையும் கடந்து 'படைத் தளபதிகளாக', 'பட்டாள நாயகங்களாக', 'சேனாபதிகளாக', 'மாதண்டநாயகங்களாக', 'வியூகநாயகங்களாக', 'அணிவகுப்பு நாயகங்களாக', 'படைதிரட்டு நாயகங்களாக', 'பாடிவீட்டு நாயகங்களாக', 'அருளாட்சி அமைப்பு நிறுவனக் காப்பாளர்களாக', 'அருளாட்சி அமைப்பு நிர்வாகப் பொறுப்பாளர்களாக' ... முதிர்ந்த தேர்ச்சி பெற்று அருளுலகத்தாரின் வாழ்த்துதலையும் ஒப்புதலையும் பெற்று எமது பதிலிகளாகவும், வாரிசுகளாகவும் செயல்படத் தயாராகிடல் வேண்டும். அப்பொழுதுதான், புரட்சியைத் தொடர்ந்து நடத்திடவோ, புரட்சியின் வெற்றிக்குப் பிறகு அருளாட்சியை முறைப்படி முயன்று நிறைவாக அமைத்திடவோ முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, நாம் தனிமனித வாழ்வுப் புரட்சி, குடும்ப வாழ்வுப் புரட்சி, சமுதாய வாழ்வுப் புரட்சி, அரசியல் வாழ்வுப் புரட்சி முதலிய அனைத்துமே ஒரு 'முழுமையான பண்பாட்டுப் புரட்சி' யாகத் [A Total Revolution] தான் செய்யப் போகிறோம் என்பதால்; இப்புரட்சிகளை நிகழ்த்திட எமது வாரிசுகள், பதிலிகள் என்ற தகுதி பெற்றவர் சிலராவது நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் புரட்சிக்குத் தலைமை தாங்கிடல் வேண்டும். அப்பொழுதுதான், தனிமனித வன்முறைகள், தவறுகள், சர்வாதிகாரங்கள், துரோகங்கள், விரோதங்கள், ... முதலியவை யெல்லாம் உடனுக்குடன் தடுத்து நிறுத்தப் பட்டிடும். நமது புரட்சியும் அன்புவழியில், அமைதிவழியில், அறவழியில், அருள்வழியில் ... ஆக்கப் பூர்வமாக ஊக்கம் குன்றாமல் நிகழ்த்தப் பட்டிடும்! நிகழ்த்தப் பட்டிடும்!! நிகழ்த்தப் பட்டிடும்!!!

5. நமது வளர்ச்சி; ஒரு சில மாவட்டங்களில் எண்ணியே பார்க்க முடியாத அளவுக்கு மிகமிகப் பெரிய உயரிய வலிய நிலைகளைப் பெற்று விட்டது. இதே நேரத்தில்; சில மாவட்டங்களில் இலைமறை காயாகவும், அரைகுறையாகவும் வளர்ந்திருக்கிறது; சில மாவட்டங்களில் மெல்ல மெல்ல மந்தமாகவே வளருகிறது; ஒன்றிரண்டு மாவட்டங்களில் பரவலாகத் தனிமனிதர்களின் வளர்ச்சியே நமது இயக்க வளர்ச்சியாக இருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக, நம்மிடையில் முன்னணிச் செயல் வீரர்களாக இருப்பவர்களுக்கிடையேயே சிலர் பிற்போக்குச் சத்திகளாகவும்; பிளவுச் சத்திகளாகவும், பிரிவினைச் சத்திகளாகவும், குழப்பவாதச் சத்திகளாகவும்; தலைமையின் கீழுள்ள வலிமையான கட்டமைப்புக்களையும், இரகசியமான நிறுவன நிர்வாகச் செயல்முறைகளையும், குருபாரம்பரியச் செயல்திட்டங்களையும் ... தங்களின் அறியாமையால் சீர்குலைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றால், வானுற வளர்ந்துவிட்ட நமது இயக்க நிறுவன நிர்வாகங்கள் ஆங்காங்கே மங்கியும், மயங்கியும், தயங்கியும், தேங்கியும் ... பல்வேறு வகையான பாதிப்புக்களைப் பெற்றுள்ளன. எனவே, இதற்காக என்னென்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்று சத்தி அண்டத்துத் தேவதேவியின் பரிந்துரையைக் கேட்டே; அவசர அவசிய அஞ்சல்களால் செயல் விளக்கங்களும், குருவாணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, நம்மவர்கள் எந்தப் புதிய கருத்துக்களாலும், திருத்தங்களாலும் வருத்தமடையாமல் செயல்படல் வேண்டும்.

நம்மவர்கள், குறிப்பிட்ட காலம் வரை அவரவரின் சித்திக்காகப் பூசைகளை வீட்டிலும், அருட்கோட்டங்களிலும், ஆலயங்களிலும், கோயில்களிலும், சுடலைகளிலும், புதைகாடுகளிலும் தங்களின் குடும்பத்தாருடன் செய்தால் போதும். எனவே, எக்காரணம் பற்றியும் தலைமைப்பீடத்தின் ஒப்புதலின்றி நம்மவர்களில் யாரும் அடுத்தவருடைய வீட்டிற்குப் போகத் தேவையில்லை. மேலும், நம்மவர்கள், பொது இடங்களில் கூடித் திண்ணைப் பேச்சில் காலத்தை வீணாக்கத் தேவையில்லை. அச்சிட்ட வெளியீடுகளையும், கையெழுத்துப் பிறதிகளையும், அவ்வப்போது வரக்கூடிய அஞ்சல்களையும் மட்டும் படிப்பதற்காகவே நம்மவர்கள் கூடிடலாம். வேறு ஐயங்களுக்கு அவரவர் நேரடியாகத் தலைமைப் பீடத்துடன்தான் தொடர்பு கொள்ள வேண்டும். குருவாணை.

அன்பு,
குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்