அன்பு சேவுக! - பகுதி 5

  1. இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு
  2. இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே.- பகுதி 1
  3. இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2
[குருதேவர் அறிக்கை 26இலிருந்து]

இராமலிங்க அடிகளாரும் இராமகிருட்டிண பரம அம்சரும் - ஓர் ஆய்வு

அன்புச்சேவுக!

1. நீ, இந்தியத் துணைக்கண்டத்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த மாநாட்டில் கலந்து கொள்ள தில்லி மாநகர் சென்றிருக்கிறாய். உன் அனுபவம் தெற்கேயும் வடக்கேயும் ஒப்புநோக்கச் செய்திடும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களிடையே வறுமையும் பற்றாக்குறையும் ஏக்க நிலையும் நோய் நிலையும் ஆதிக்கம் செலுத்தும் பொழுது; புற வாழ்க்கையைப் போல்தான் அக வாழ்க்கையும் இருண்டிருக்கும். எனவே, வழிகாட்டும் சுடராய்! கலங்கரைவிளக்கமாய்! அகவிருள் அகற்றும் அருட்பெருஞ் சோதியாய்! விளங்கவேண்டிய ஆசிரியப் பெருமக்கள் முற்றிலும் அணைக்கப்பட்ட கரிக்கட்டைகளாக இருப்பதைக் காணலாம். இதற்குமேல், கட்டிடமே இல்லாத பள்ளிகள். ஆசிரியரே இல்லாத பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகள்... என்று பெயரளவில் உள்ள பள்ளிகளுக்கும்; அப்பள்ளிவாழ் மாணவர்களுக்குமிடையேயுள்ள உறவுகளையும் உரிமைகளையும் ஆராய்ந்து புரிந்துகொள்.

2. நண்ப! தெற்கே, பள்ளிக்கூடத்துக்கே போகாத வடலூர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருட்பாக் கொடைவள்ளல், இராமலிங்க அடிகளாரையும் கல்கத்தா காளிகோயில் பூசாறி இராமகிருட்டிணப் பரமஅம்சரையும் ஒப்பிட்டு நோக்கி ஆய்வு செய்திடு. இரண்டு பேருமே ஏறத்தாழ எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளாதவர்கள்தான். இரண்டு பேருக்குமே கடவுள்கள் நேரில் தோன்றி வரமளித்தார்கள். தென்னாட்டு இராமலிங்க அடிகளாருக்கு முறையே சிதம்பரத்தில் நடனமிடும் கூத்தர்ப் பெருமான், திருத்தணிகை வாழ்முருகன், திருவொற்றியூர் வடிவுடைய மாணிக்கவல்லி... முதலியோர் நேரில் தோன்றி அனைத்து வகையான அருளையும் வழங்கினார்கள். ஆனால், வடநாட்டு இராமகிருட்டிணப் பரமஅம்சருக்குக் காளிதேவி மட்டுமே நேரில் தோன்றி அருள் வழங்கினாள்.

3. இராமலிங்க அடிகளார். பிறவியிலேயே மரக்கறி உணவு மட்டுமே உண்பவர் - காலப்போக்கில் பயிற்சித் தேர்ச்சியாலும், முயற்சி முதிர்ச்சியாலும் உண்ணுவன பருகுவன அனைத்தையும் நிறுத்தி அருவுருவ அமுதத்தேகம் பெற்றார். ஆனால் இராமகிருட்டிண பரமஅம்சரோ பிறவியிலேயே மீனும் கறியும் உண்ணும் பூசாறியாகப் பிறந்தவர், கடைசிவரை காளிக்கும் சுடுகாட்டுப் புதைகாட்டுத் தெய்வங்களுக்கும் தாந்தரீகப் பூசைகளுக்கும் படையலாகப் பயன்படுத்திய இறைச்சியையும் மீனையும் உணவாக உண்டே உலகியலாகச் சத்திதேவியின் வடிவமாக வாழ்ந்தவர்.

4. இராமலிங்க அடிகளார் ஈ, எறும்பு மொய்க்காத நோய் நெருங்காத பொன்வண்ண ஞான தேகம் பெற்றிட்டார். அருட்பெருஞ் சோதியாகி மறைவான இறையோடு எங்கும் நிறைந்திட்டார். இராமகிருட்டிணரோ உலகியலாக மனித தேகத்தோடு வாழ்ந்து மாண்டிட்டார்.

5. இந்த, இருவேறு அருளாளர்களையும்; தென்னாடு வடநாடு என்ற இருபெரும் நாட்டுப் பிரிவுக்கு இலக்காகக் கொண்டு விளக்கம் தேடினால்; இராமகிருட்டிணர், உலகம் முழுவதும் அறியப்பட்ட அருளாளராக நிறுவன நிர்வாக அமைப்புக்களோடு வளர்ந்துள்ளார். ஆனால், இராமலிங்க அடிகளாரோ தென்னாடு எனும் நான்கு மாநிலங்களில் மூன்று மாநிலத்தாருக்கு யாரென்றே தெரியாமலும்; தமிழ்நாட்டிற்குள்ளுள்ள (ஏறத்தாழ) இருபது மாவட்டத்தார்களில் இரண்டு மூன்று மாவட்டத்தார்களுக்கு மட்டுமே ஓரளவு தெரிந்தவராயிருக்கின்ற இரங்கத்தக்க நிலையையும் எண்ணிப் பார்த்திடுக. அப்பொழுதுதான், தமிழர்கள் எப்பொழுதுமே, தங்களுடைய மொழியையோ! இனத்தையோ! நாட்டையோ! பண்பாட்டையோ! நாகரீகத்தையோ! மதிப்பதில்லை! மதிப்பதில்லை!! மதிப்பதில்லை!!! மதிப்பதே யில்லை! விரும்புவதில்லை! விரும்புவதில்லை!! விரும்புவதில்லை!!! விரும்புவதேயில்லை என்ற பேருண்மை விளங்கிடும். அதாவது எப்படியோ தமிழர்களுக்குக் கூலிச்சிந்தையும் அடிமை நெஞ்சமும் ஏற்பட்டுத் 'தங்களுக்கு அன்னியர்கள்தான் தலைவர்களாக இருக்க வேண்டும்' என்ற கருத்தும் விருப்பமும் ஏற்பட்டுவிட்டது. இதைத் திருத்த முற்படுபவர்களே நாம்; என்ற உணர்வில் செயல்படு பிறரைச் செயல்படுத்து.

அன்பு
இந்து மதத்தந்தை, குருமகா சன்னிதானம்,
ஞாலகுரு சித்தர் கருவூறார்.


[குருதேவர் அறிக்கை 27இலிருந்து]

இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே.- பகுதி 1

 அன்புச் சேவுக,

1. நாம் பதிப்பகம் வைத்து பல்லாயிரக்கணக்கான அறிவிக்கைகளை அச்சிட்டு அன்னை நாட்டு மக்களுக்கு பட்டி தொட்டி, குக்கிராமம் முதல் பெரிய பெரிய ஊர்கள், நகரங்கள் என்று அனைத்திடங்களிலும் எந்தவித வேறுபாடுமின்றி வழங்கி வருகின்றோம். இதில் நம்மால் சாதிவெறியோ, மதவெறியோ, வட்டாரவெறியோ ஊக்குவிக்கப்படவே யில்லை. இருந்த போதிலும், நம்மை நமது தாயக மக்களே முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாமல் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது, இதற்குக் காரணம் நம்முடைய அறிவிக்கைகள் வழங்கும் தத்துவமும் சித்தாந்தமும் முழுமை வடிவில் மக்களைச் சென்றடையவில்லை என்பதுதான்.

2. மேற்படிக் கருத்தை நமது நிறுவன நிர்வாக உறுப்பினர்கள் ஆராய்ந்து 'குருதேவர்' என்ற பெயரில் நமது இயக்கத்தவர்க்கு மட்டும் வழங்குவதற்குரிய அறிக்கை ஒன்றினை மாத மலராக வெளியிடும் திட்டத்தைச் செயலாக்கினர். இதனால் இம்மாதத்தோடு (26) இருபத்தாறு மலர்கள் வெளிவந்திருக்கின்றன இது ஒரு மாபெரும் சாதனையே. இந்தியத் துணைக்கண்டத்திலேயே இப்படித் தத்துவத்தையும் செயல் சித்தாந்தத்தையும் கொள்கையையும் குறிக்கோளையும் கொள்கை விளக்க முழக்கங்களையும் இயக்கப் பாரம்பரிய வரலாற்றினையும் தெளிவாக எழுதி அச்சிட்டு கொடுத்திருக்கக் கூடிய ஒரே ஒரு இயக்கம் நமது இயக்கம் தான். உலக அளவில் பொதுவுடமைச் சித்தாந்தத்தை மேலை நாட்டினர்க்கு முதன் முதல் விளக்கிய (கீழைய நாடுகளில் பொதுவுடைமைச் சித்தாந்தம் என்றென்றும் இருந்து வருகின்றது அதாவது, சித்தர்நெறி எனப்படும் இந்துமதம் தான் மிகச் சிறந்த பொதுவுடமைத் தத்துவம், கம்யூனிசம் என்பது மேலை நாட்டார்க்கு இன்னும் தெரியாது) காரல் மார்க்சு அவர்கள்தான் தமது இயக்கத்திற்குத் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும், கொள்'கையையும், குறிக்கோளையும் கருத்து விளக்க முழக்க வாசகங்களையும் எழுதி வழங்கினார்.

எனவேதான் அது உலக முழுவதும் பரவியது. இப்பொழுது அதைவிடச்சிறந்த நமது சித்தர்நெறி [The Siddha Philosophy] என்கின்ற சமுதாயத் தத்துவம் [The social philosophy] அரசியல் தத்துவம்[The political philosophy] பொருளாதாரத் தத்துவம் [The Economical philosophy] நம்மால் ஏட்டறிவாகவும், பட்டறிவாகவும் [Both theoretically and practically] ஓர் இயக்க வடிவமாக [In the form of a Movement] வழங்கப்பட்டு வருகிறது எனவே, நமது இந்து மறுமலர்ச்சி இயக்கம் [The social Renaissance Movement] ஒன்றுதான் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் இந்த மண்ணுலகுக்கும் வளமான வருங்காலத்தை விளைவித்து கொடுக்கும் ஆற்றலுடையது. இப்பேருண்மையினை நம்மவர்கள் நன்கு புரிந்தும் புரிய வைத்தும் செயல்படுவதைப் பொறுத்துத்தான் நமது வளவளர்ச்சியும், வலிவுச் செழுச்சியும் இருக்கிறது. இதற்காக நம்மவர்கள் இது வரை வெளிவந்துள்ள குருதேவர் அறிக்கைகளை மட்டுமாவது அடிக்கடி திருப்பி திருப்பி நன்கு படித்து கொள்கைத் தெளிவு பெற வேண்டும்.

3. நண்ப! ஒரு காலத்தில் மதம்தான் அரசியல், கலை,இலக்கியம், மருத்துவம், தொழில், நீதி, சமுதாயச் சட்டதிட்டக் கட்டுப்பாட்டு முறைகள் முதலிய அனைத்துக்கும் தலைமை தாங்கி வழி நடத்தியது. ஆனால், இந்த மதம் கடுமையான ஒழுங்கு, ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம், மனிதத்தன்மை ... முதலிய பண்பு நலன்களைச் செயலாக்கியது. எனவே இதனுடைய பிடியிலிருந்து, நேரடியான ஆட்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள அல்லது முறித்துக் கொள்ள அல்லது விலகி யோடிட மேற்படி அனைத்துத் துறைகளும் மிகப் பெரிய போராட்டங்களையும் போர்களையும் செய்ய நேரிட்டது. ஆனால், அவைகள் வெற்றி பெற முடியவில்லை. என்வே அவைகள் மதத்தலைவர்கள்ன் மீதும், மதத் தத்துவங்களின் மீதும், மத வரலாறுகளின் மீதும், மத இலக்கியங்களின் மீதும், மதச் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளின் மீதும், நடைமுறைகளின் மீதும், சித்தாந்தங்களின் மீதும், சடங்கியல்கள் மீதும், மத நாயகர்களாக விளங்கிடும் அனைத்து வகையான கடவுள்களின் மீதும், கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்த ஆரம்பித்தன.

4. நண்ப, இங்குதான், நாம் மிகமிக நிதானமாகவும், பொறுமையாகவும், பொறுப்பாகவும் அமைதயாகவும், அடக்கமாகவும், மிகமிகத் தெளிவாகவும் கருத்துக்களையும் செய்திகளையும் விளக்கி வழங்கிடல் வேண்டும். ஏனெனில் ஈவிரக்கமின்றி, நீதிநேர்மையின்றி...அரசியல், கலை, இலக்கியம் சமுதாயம்...முதலிய அனைத்துத் துறையினரும் மதத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் இழித்தும் பழித்தும் கேவலப்படுத்தியும் சிதைத்தும் சீரழித்தும் முறையற்ற குறுக்கு வழிப் போரைத் தொடர்ந்து நிகழ்த்திட்டார்கள். அதன் விளைவுதான், மதம் வீழ்ச்சியுற்றது, இகழ்ச்சியுற்றது, தாழ்ச்சியுற்றது, செல்வாக்கிழந்தது, செயல் நலம் குன்றியது. மற்ற துறைகள் மதத்தைக் கேவலப் படுத்தியும் இழிவுப்படுத்தியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரலாயின. இதனால் மதத்தின் பிடியிலிருந்து அரசியல்வாதிகளும், சமுதாய வாதிகளும், இலக்கிய வாதிகளும், கலையுலக வாதிகளும், மதத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றார்கள். இந்த விடுதலையால் இவர்கள் எல்லாவிதமான தவறுகளையும் நியாயப்படுத்தி விட்டார்கள். அதாவது களவு, கொள்ளை, காமம், நிர்வாக ஊழல், கள்ளச்சந்தை, (இலஞ்சம்) கையூட்டு முதலிய அனைத்தையும் தாங்கள் செய்யலாம், ஆனால் மதவாதி செய்யக் கூடாது என்பது போன்ற மாயா வாதத்தை உருவாக்கி விட்டார்கள். இதன்படிதான் இன்றைக்கும் மதவாதிகளைப்பற்றி மட்டுமே போலிகள், முறைகேடர்கள் என்ற குற்றச் சாட்டிற்குள்ளாக்கி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எல்லாத் துறையினருமே கடவுள்களையும், புராண இதிகாசங்களையும், சாத்திறச் ச்ம்பிறதாயங்களையும், சடங்குகளையும், ஒருசில மதவாதிகளின் சாதாரணத் தவறுகளையும் மிகமிகப் பெரிய அளவில் கேவலப்படுத்தியும் கண்மூடித்தனமாகத் தாக்கி விமர்சித்தும் தான் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அதாவது அரசியல்துறையிலோ கலைத்துறையிலோ உள்ளதலைவர்கள்கொலை, கொள்ளை கற்பழிப்பு, கள்ளச்சந்தை ஊழல் (இலஞ்சம்) கையூட்டு முதலிய எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் அவற்றைப் பெரிதுபடுத்தாமல் அவைகளை எதிர்பாராமல் நிகழ்ந்தவைகளாகவும், தவிர்க்க முடியாதவைகளாகவும் விமர்சனம் செய்து நியாயப்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுவாக மக்களும் மதத் துறையினறைத் தவிர மற்ற அனைத்துத் துறையினரும் எல்லாவிதமான தவறுகளையும் செய்யலாம். அது குற்றமில்லை எண்ணுகின்ற மனநிலையைப் பெற்றுவிட்டார்கள். எனவே தான், இன்றைக்கும் அனைத்துத் துறையிரும் தங்களை மதமறுப்பாளர்கள், வெறுப்பாளர்கள், எதிர்ப்பாளர்கள், சீர்திருத்தவாதிகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவுவாதிகள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வத்லேயே கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார்கள்.

அதாவது, மதம் கூறுவது போல் தாங்கள் ஒழுக்கமாகவோ, நீதியாகவோ நேர்மையாகவோ வாழ வேண்டியது அவசியமில்லை என்பதாகத் தங்களுக்கு ஒரு புதிய செல்வாக்கை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் தங்களுக்கு மதத்தைக் கண்டிக்கவோ, திருத்தவோ உரிமையுண்டு. ஆனால், மதத் தத்துவத்திற்கும், மதத் தலைவர்களுக்கும் தங்களைக் கண்டிக்க உரிமையில்லை! இல்லை! இல்லை! என்று விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளார்கள். எனவேதான், அரசியல் வாதிகளும், சமுதாய வாதிகளும் என்றென்றும் கோயில் நிர்வாகங்களும் மடங்களின் நிர்வாகங்களும், மதத்தின் பெயரால் உள்ள அனைத்து நிர்வாகங்களும் தங்களுக்குக் கீழேயே தங்களுக்கு அடங்கியனவாக இருக்க வேண்டும் என்று அனைத்து வகையான சட்ட திட்டச் செயல் கட்டுபாடுகளையும் வளர்த்து வருகிறார்கள். இந்த மாபெரும் சதித்திட்டத்திலிருந்து மதத்தைக் காப்பற்ற வேண்டுமென்றால் அதற்குரிய அறிவு, ஆற்றல், செயல் திறம், தத்துவ உரம், கொள்கை வலிவு, குறிக்கோள் தெளிவு உலக அளவில் நம்மிடம்தான் இருக்கின்றது, இருக்கின்றது, இருக்கின்றது.

[தொடரும்]

[குருதேவர் அறிக்கை 28இலிருந்து]
 

இ.ம.இ. ஒரு விடுதலை இயக்கமே - பகுதி 2

எனவே, நாம் இதுவரை மதத்துறையை இழித்தும் பழித்தும், சிதைத்தும் சீரழித்தும் வளவளர்ச்சியும் ஆட்சியும் பெற்றுச் சுகவாழ்வு வாழ்ந்து வந்த அனைத்துத் துறைகளையும் நேர்மையோடு நேரடியாக விமர்சித்து மதவிடுதலைக்கான போராட்டத்தைத் துவக்கியேயாக வேண்டும். இது ஓர் உலகந் தழுவிய போராட்டமாகவே வளர்ச்சி பெறும்! வளர்ச்சி பெறும்! வளர்ச்சி பெறும்! எனவே, உலக மதங்களனைத்துக்கும் மூலமாகவும், முதலாகவும், தாயாகவும், தலைமையாகவும், வழியாகவும், வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும், கருவூலமாகவும் இருப்பதுதான் சித்தர் நெறியெனும் நமது மெய்யான இந்து மதம் (The True Induism is the Mother of all the Religions on this hemisphere). எனவேதான் ஒரு தாய் தன்னுடைய சேய்களைக் காப்பற்றுவதுபோல் நாம்தான் உலக மதங்களனைத்தையும் நாத்திகர்களிடமிருந்தும் மத விரோத துரோகச் சத்திகளிடமிருந்தும் தன்னல வெறிபிடித்த மதப் போலிகளிடமிருந்தும், கூலிகளிடமிருந்தும், காலிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்றவேண்டும்!

நண்ப! மத விரோத துரோகச் சத்திகளின் ஈனச் செயல்களால் தான் நாத்திகர்கள், பகுத்தறிவு வாதிகள், சீர்திருத்த வாதிகள் என்பவர்கள்; 'மதம் ஒரு மடமை'; 'மதம் ஒரு கற்பனை'; 'மதம் ஒரு கனவு'; 'மதம் முன்னேற்றத்துக் தடை'; 'மதம் பயனற்றது'; 'மதம் தேவையற்றது'; 'மதம் அறிவுக்குப் புறம்பானது'; 'மதம் புரியாத ஒன்று'; 'மதம்தான் முதலாளித்துவத்தை வளர்க்கின்றது'; 'மதம்தான் ஏழைகளை அடங்கியடுங்கி ஏழைகளாகவே இருக்கச் செய்கிறது'; 'மதம்தான் அடிமையுணர்வை வளர்க்கிறது'; 'மதம் மனநோயாளிகளை உருவாக்குகிறது'; 'மதம் கோழைகளை வளர்க்கிறது'; 'மதம் ஆபாசங்களை வளர்க்கிறது'; 'மதம் காட்டுமிராண்டித் தனங்களைக் காப்பாற்றுகிறது'; 'மதம் மக்களை மயக்கும் ஒரு மயக்கப் பொருள்'; 'மதம் சமுதாய விழிச்சிக்கும் எழிச்சிக்கும் தடையாக இருக்கிறது'; 'மதம் உருவாக்கும் மதவெறிகளால்தான் அரசியலிலும், சமுதாயத்திலும் அமைதியின்மை விளைகின்றன'; என்பன போன்ற எண்ணற்ற குற்றச் சாட்டுக்களைத் தொடர்ந்து மதத்தின் மீது சுமத்த முடிகிறது. இதனை நன்கு தெரிந்தும், ஆராய்ந்தறிந்தும்; முழுமையாக புரிந்தும், முறையாக உணர்ந்துமே ..... செயல்படப் புறப்பட்டிருப்பவர்கள் நாம் என்ற விழிப்புணர்வும், நம்பிக்கையுணர்வும் நம்மிடையே எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். இருக்க வேண்டும், இருக்க வேண்டும். இப்பேருண்மைக்கேற்பவே நமது கருகுலத்திலும், குருகுலத்திலும், அருட்பணி விரிவாக்கத் திட்ட நிலையங்களிலும் ஆய்வுக் கூட்டங்களிலும்...... முறையான பயிற்சிகள் முழுமையாக வழங்கப் படுகின்றன, வழங்கப் படுகின்றன, வழங்கப் படுகின்றன, என்பதனை நம்மவர்களாவது நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, குருதேவராகிய யாம், நம்மவர்களையெல்லாம் மத விடுதலைப் போராட்டத்திற்காக மாவீரர்களாகத் தயாரிக்கிறோம் என்பதைப் புரிந்து கொல்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது நிறுவன நிருவாகக் கட்டமைப்புக்களிலும் நடவடிக்கைகளிலும் எமது நோக்கும் போக்கும் ஊக்கும் கண்டிப்பு மிக்கவைகளாக கடுகடுப்பும் சிடுசிடுப்பும் உடையவைகளாக ஈவு இரக்கமற்ற விமர்சனங்களை வழங்குபவைகளாக நெருப்பாறு ஓடுவது போல் இருப்பதனை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு தங்களைப் போன்ற முன்னணித் தளபதிகளும் வீரர்களும் (ஆண், பெண் இருபாலரும்) எமக்குதவி செய்ய வேண்டும். உற்ற துணையாக இருக்க வேண்டும்.

நண்ப! மதத்துறையில் வாழும் ஒரு சில தனிமனிதர்கள் சுயநலத்தாலோ, உலகியலினாலோ தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம், முதலிய துறைகளைச் சார்ந்தவர்கள் தவறுகளையும், குற்றங்களையும் செய்வதற்காகவே வாழுகிறார்கள். அதாவது, மதத்துறையில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவர்தான் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல், கலை, சமுதாயம் முதலிய துறைகளில் தவறு செய்யாதவர்கள்தான் நூற்றுக்கு ஒருவர் இருவர் என்றிருக்கிறார்கள். இந்தப் பேருண்மையை ஆபாசப்படுத்தாமல், பிறர் மனம் புண்படாமல் தேவையற்ற ஆரவாரம் இல்லாமல்.... மிகமிக நயமாகவும், நாகரீகமாகவும் அனைவருக்கும் எடுத்துக் கூறியே நமது மத விடுதலைப் போராட்டப் படையை உருவாக்க வேண்டும், உருவாக்க வேண்டும், உருவாக்க வேண்டும். இதுவே எமது நிலை! நமது நிலை!

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்