Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • இந்துமத நடைமுறைகள்
  • இந்துமத நடைமுறைகள்

    இந்துமத நடைமுறைகள்

    இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்து போன்றதே!

    அன்புச் சேவுக!

    யாம், அன்னியர்களுக்கு மட்டும் புதியவனாக இல்லாமல்; நம் தாயகத்து மக்களுக்கும் புதியவனாகவே உள்ளோம். ஆனால், இந்த எமது சொந்தநிலை; நமது இயக்கத்துக்கும் தொடர்ந்து வந்து விடக்கூடாது என்பதால்தான்; இந்த ஆண்டு 1985-இல் டிசம்பர் 24, 25இல் மதுரை மாநகரில் மாநில மாநாடு கூட்ட முடிவு செய்துள்ளோம்.

    நம்மிடம் அருளுலக ஐயங்களை அகற்றிக் கொள்ள வந்த ஆர்வலர் முதல், நமது அருட்பணியால் நலமடைந்தோர் வரை அனைவரையும் சித்தரடியான், சித்தரடியார், சித்தரடியாள் …… என்று எண்ணற்று உருவாக்கி அருளுலக இளவரசர்களாக, அருட்படைத் தளபதிகளாக, அருட்சேனை வியூகநாயகங்களாக, அருட்படையின் மாவீரர்களாக நாடு முழுவதும் சென்று செயல்படச் செய்தும் …… நம்மால் நன்மையடைந்தவர்கள் கூட நமக்குத் துணையாக வராத நிலையே உருவாகிவிட்டது. இது வருந்தத் தக்கதே.

    உடனடியாக, நாம், நமது வரலாறு, தத்துவம், கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் ….. முதலியவைகளைப் படித்தவர் முதல் பாமரர் வரை புரிந்து கொள்ளுமளவுக்கு நமது பணிகளனைத்தும் நமது அச்சிட்ட அறிக்கைகளையும், அறிவிக்கைகளையும், குருதேவர் ஏடுகளையும் விற்பதில் முனைவதாக இருக்க வேண்டும், நண்ப!

    நாத்திகர்கள், மதமறுப்பாளர்கள், பகுத்தறிவுவாதிகள் ….. நமது மதத்தின் செயல்நிலைகளையும், தத்துவங்களையும் அநாகரிகமானவை, காட்டுமிராண்டித்தனமானவை, ஆபாசமானவை …. என்று குறைகூறிக் குற்றம் சாட்டுகின்றார்கள். இதற்குப் பதில் கூறத் தெரியாமல் பலகாலமாக நமது மதவாதிகள் திகைத்துத் திக்குமுக்காடித் திணறித் தேங்கியுள்ளார்கள்.

    இந்துமதம், அநாகரீகமாக வாழ்ந்த ஆதிமனிதனை வளப்படுத்த படைக்கப்பட்டதே ஆகும். மனிதன் ஆடை, அணிகலன், வாழிடம் …. முதலிய வசதிகளில்தான் நாகரீகம் அடைந்தவனாக உள்ளானே தவிர, அவனது சிந்தையும், நெஞ்சும், உணர்வும், எண்ணமும், வேட்கையும் …. காட்டுமிராண்டி நிலையிலேயேதான் இருக்கின்றன. எனவேதான், மனிதனின் அகப்பண்புகளைத் திருத்திச் செம்மைப்படுத்தும் மதமான இந்துமதத்தில் ஆரம்ப காலத்திலிருந்த பல நெறிமுறைகளும், விதிகளும், பழக்கவழக்கங்களும் தொடர்ந்து கையாளப்படுகின்றன. இந்துமதம் மிகமிகத் தொன்மையானது, பழமையானது …….. என்பதை விளக்குவதாகத்தான் இந்து மதத்தில் நடைமுறைகள் கருத்துக்கும், கண்ணோட்டத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகின்றன. இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்து போன்றவை. இவைதான், அருளை ஊற்றெடுக்கச் செய்கின்றன. அருளை அனுபவப் பொருளாக வழங்குகின்றன. இந்துமதம் மனிதர்களைத் தூய்மையும், வாய்மையும் …. அடையச் செய்யும் பேராற்றலுடையவை!

    … இவ்வுண்மையை ஏற்று ஒவ்வொரு இந்துவும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் தனது இந்துமதத்தை வளவளர்ச்சியும், மறுமலர்ச்சியும் அடையப் பாடுபட முன்வர வேண்டும். இதற்கான வழிமுறைகளும், நடைமுறைகளும், தெளிவான திட்டங்களும் எம்மிடம் இருக்கின்றன.

    வாருங்கள்! சிந்திப்போம்! செயல்படுவோம்!

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்

    (குருதேவர் அறிக்கை 19இலிருந்து)

    தொடர்புடையவை: