Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • அன்பு சேவுக!>
  • நமக்கு ஏன் வரவேற்பில்லை?
  • நமக்கு ஏன் வரவேற்பில்லை?

    நமக்கு ஏன் வரவேற்பில்லை?

    அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் பணி

    அன்புச் சேவுக!

    சில ஆயிரம் பேர் ஒருங்கு கூடி ஒற்றுமையுடன் திட்டமிட்டபடி மிகப் பெரிய திருவிழா நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால், இத்திருநாட்டுப் பதிப்பகங்களோ, செய்தியேடுகளோ, சமய சமுதாய அரசியல் கலை இலக்கியக் கழகங்களோ, தனிமனிதர்களோ, …… நம் பக்கம் திரும்பவில்லை; நம்மை விமர்சிக்கவில்லை.

    நாமும் பல நூறாயிரக்கணக்கான அறிக்கைகளையும்; விரல்விட்டு எண்ணிடக் கூடிய அளவு பத்துப் பன்னிரண்டு நூல்களையும்; ஏட்டையும் நாட்டையும் கதிகலங்கச் செய்யும் கருத்துக்களைத் தாங்கிவரும் மாத இதழ் ‘குருதேவர்’ அறிக்கையை இரண்டாண்டு காலமாக வெளியிட்டும்; நமது முழுநேர ஊழியர்களும், பகுதிநேர ஊழியர்களும் நாடெங்கும் கருத்துரையாடல், விவாதம், சொற்பொழிவு, அருளுரை, அருள் வழங்கல், …… என்று நேரடியான கருத்துப் புரட்சியில் ஈடுபட்டும், …….. செயல்படுகிறோம். பிறகு, ஏன் நமக்கு எதிர்பார்க்கும் வரவேற்பில்லை’

    நண்ப! யார்யாரோ திடீரென்று அருளாளர்களாக வெளிப்படுகிறார்கள்; பொருளுலகச் செல்வாக்கும், விளம்பரமும் பெற்றிடுகிறார்கள். நமக்கு அவர்கள் மீது பொறாமையில்லை. அவர்கள், அருட்புதையல் எடுத்தவர்களாகத் தன்னல வாழ்வு, குறுகிய வட்டாரச் செயல், மொழி இன நாட்டுணர்வற்ற போக்கு, எல்லா மதவாதிகளையும் போல் பசனைக் கூட்டமாகச் செயல்படல் ….. என்று செக்குமாடு போல சுற்றிச்சுற்றி வருகிறார்கள். இவர்களைப் போன்ற அனைவருக்கும் உயிராக, உள்ளீடாக, வாழ்வாக, தத்துவமாக, வேலியாக …… இருப்பவர்களே நாம். கடவுள்களையும், வழிபாட்டு நிலையங்களையும், மனித வாழ்வின் முன் பின் மறைகளையும், அண்ட பேரண்டங்களையும் விளக்கிடும் அறிவும், ஆற்றலும், ஆண்மையும் உள்ளவர்களே நாம். எனவே, உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு, இந்துமறுமலர்ச்சி, மதவிழிச்சி, ஆவி, ஆன்மா, உயிர் ஒன்றுபடல், …… என்று செயல்படும் நாமே சமயத்துறையின் வழி, வழிகாட்டி, வழித்துணை, வழிப்பயன், வழிக்காவல், ……. என்பதை உணர்ந்து அமைதியோடு செயல்படுவோமாக.

    எத்தனையோ சிறிய பெரிய சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியக் கழகங்கள், கட்சிகள், இயக்கங்கள், சபைகள், குழுக்கள் ….. இன்றைய உலகியலில் அந்தந்த வட்டாரங்களில் ஏற்படக் கூடிய ஒரு சில சிக்கல்களை எதிர்த்துப் போராடிச் சிறுசிறு வெற்றிகளையும் பெற்றிடுகின்றார்கள். இவைபோல், நாம் ஏன் நேரடிப் போராட்டங்களில் ஈடுபடவில்லை என்ற ஆதங்கமும், ஏக்கமும், குற்றச் சாட்டும் எழுந்துள்ளன. இது தவறு. ஏனெனில், மேற்படி அமைப்புக்கள் ‘தற்காலிகமான தீர்வுகளையே’ (Temporary reliefs) உண்டாக்குகிறார்கள். நாம், அப்படியல்ல. குறைகளுக்கும், கறைகளுக்கும் காரணமாக இருக்கக்கூடிய அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் மாபெரும் பணியிலேயே ஈடுபட்டுள்ளோம். நம்மால், தனிமனிதர்களும், குடும்பங்களும், சமுதாயமும், …….. முழுமையான செம்மைநிலையைப் பெற்றுவிடும். அதன்பிறகு, இன்று நிகழும் போராட்டங்களுக்கோ, போராடும் அமைப்புக்களுக்கோ அவசியமே இருக்காது.

    நம்மவர்கள், ‘குருதேவர்’ அறிக்கைகளை விற்பதிலும்; பொது இடங்களிலும் வழிபாடுகளிலும் நமது குருதேவர் அறிக்கைகளைப் படித்துக் காட்டுவதிலும் தாம் நமது வளர்ச்சியிருக்கிறது. நம்மவர்கள், இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகளையும் அறிவிக்கைகளையும்; புத்தகங்களையும் திருப்பித் திருப்பி ஊன்றிப் படித்து கொள்கை விளக்கம் வளமாகவும், வலிவாகவும் பெற்றுக் கொண்டேயாக வேண்டும். இதுவே உடனடிச் செயல்திட்டமாக அமையட்டும்.

    விரைவில், நேரடிப் பயிற்சியால் ஒரு சில முழுநேர ஊழியர்களை உருவாக்கியேயாக வேண்டும். பக்குவமுடையவர்களுக்கு அருளாற்றலும் அருட்கலைப் பயிற்சிகளும் வழங்கப் பட்டேயாக வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தால் உடனே சுற்றுப் பயணம் வரத் தயாராகவுள்ளோம் யாம்.

    எம் காலத்துள் அருளாட்சி அமைய வேண்டும்.

    அன்பு
    ஞாலகுரு சித்தர் கருவூறார்
    இந்துமதத் தந்தை

    (குருதேவர் அறிக்கை 16இலிருந்து)

    தொடர்புடையவை: