Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - ஆணை 16
  • அருளாட்சி ஆணைகள் - ஆணை 16

    அருளாட்சி ஆணைகள் - ஆணை 16

    பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் 16வது ஆணை

    தமிழர்களின் உலக முதன்மை நிலை ஈராயிரம் ஆண்டுகளாக மட்டுமே வீழ்ந்து கிடப்பதையும், அதை உடனடியாக மீட்க வேண்டியதின் அவசியமும்.

    பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதம் பிறந்து வளர்ந்த இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டம் இரண்டு பெரிய கடல் கோள்களால், முறையே பஃறுளி ஆற்றங் கரையிலிருந்த தொன்மதுரையின் அருளாட்சிக்குட்பட்ட மிகப் பெரிய பகுதிகளை முதலிலும், குமரி ஆற்றங்கரையிலிருந்த தென்மதுரையின் அருளாட்சிக்குட்பட்ட மிகப் பெரிய பகுதிகளை இரண்டாவதாகவும் கடலுக்குள் இழந்தது.

    மிஞ்சிய சிதறிய சிறுசிறு நிலப் பகுதிகளில் மிகப் பெரிய பகுதியே விந்தியத்திற்குத் தெற்கே உள்ள தமிழகம். அதாவது, தென் இந்து நாடு. இரண்டு கடல்கோள்களாலும் படிப்படியாக நிலத்துக்குள் இருந்து வெளிப்பட்ட விந்தியத்திற்கு வடக்கே வட இமயமலை முடிய உள்ள வட இந்து நாடு தோன்றிற்று. இளமுறியாக் கண்டத்திலிருந்த பனிமூடிய பன்மலையடுக்கத்து ஒரு பகுதியான தென் இமய மலை முதல் குமரியாறு வரை இருந்திட்ட மலைகளின் பெயர்களும், ஆறுகளின் பெயர்களும் அப்படியே புதியதாகத் தோன்றிய வட இந்து நாட்டிலுள்ள மலைகளுக்கும், ஆறுகளுக்கும் சூட்டப் பட்டன.

    கடலுள் மறைந்த இரு பெரும் பகுதிகளுக்கு ஈடாக வட இந்துநாடு பதினெண் சித்தர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் வட இமயமலை முதல் தென் குமரிமுனை வரை இந்துமத யாப்புற்ற (யாப்பு = மிகத் தெளிவான வரையறுக்கப் பட்ட முடிவு = இலக்கணம்) நாடாக மாறியதால் இப்பெருநிலப் பரப்பு ‘இந்துமத யாப்பு நாடு’ எனும் பொருளில் ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டது.

    இளமுறியாக் கண்டத்தின் நினைவாகவே 48 வகை வழிபடு நிலையங்களும், கருவறைகளும், வெட்டவெளிக் கருவறைகளும் வடபுலத்தில் உருவாக்கப் பட்டன. சந்திர குலத்துக்குரிய கருவூறாரின் குருகுலப் பாரம்பரியமும், சூரிய குலத்துக்குரிய காகபுசுண்டரின் பாரம்பரியமும் முறையே யமுனைக் கரையிலும், கங்கைக் கரையிலும் உண்டாக்கப் பட்டன.

    ஆனால் கந்தர்வ குலமும், தேவகுலமும், அசுரகுலமும், அரக்க குலமும் புதிதாகத் தோன்றிய வடபுலமான வட இந்தியாவில் நேரடியாகவும்; மனித வடிவிலும், மனித குலத்தில் தோன்றியும், மனித குலத்தோடு தொடர்பு கொண்டு இரண்டறக் கலந்தும் ….. எல்லா விதமான அருளுலகச் சிதைவுகளையும், சீரழிவுகளையும், இடர்பாடுகளையும், இருள்களையும் விளைவித்தார்கள். சூரிய குலப் போராட்டம் இராமாயணமாகவும், சந்திர குலப் போராட்டம் மகாபாரதமாகவும் நிலைத்த வடிவைப் பெற்றிட்டன. இவை இரண்டும் இரண்டு யுகங்களின் வரலாறுகளாக ஆயின.

    இவை இரண்டுக்கும் முந்திய முதல் யுக வரலாறுதான் பதினெண் சித்தர் பீடத்தின் முதல் பீடாதிபதியான அருட்பேரரசர் ஆதி சிவனின் வரலாறும், அவருடைய மகனான தேவசேனாபதி முருகப் பெருமானின் வரலாறும், மாபுராணமாகவும், கந்த புராணமாகவும் (முருக புராணம்), பிறமண் புராணமாகவும், மாயோன் புராணமாகவும், தேவேந்திரன் புராணமாகவும், வாயு புராணமாகவும், இயமன் புராணமாகவும், பிள்ளையார் புராணமாகவும், கணபதி புராணமாகவும், விநாயகர் புராணமாகவும், இருடிகள் புராணமாகவும் (இருக்கு வேதம்), அசுர புராணமாகவும் (அசுர வேதம்), யாம புராணமாகவும் (சாம வேதம் தொடர்பான இரவுக்குரிய காற்று, கருப்பு, பேய், பிசாசு…. முதலியவர்கள் பற்றிய புராணம்), அதர்வான புராணமாகவும் (அதர்வான வேதம் தொடர்பான விண்வெளியில் இயங்கும் வானவர், விண்ணவர், அமரர், இயக்கர், …. முதலியவர் பற்றிய புராணம்) மலர்ந்தன.

    சந்திர குலத்து முதல் அருட்பேரரசனான ஆதிசிவனின் மகனான முருகனுக்கு வாரிசு இல்லாமல் போனதால்; அவன் சித்தர்களுக்காக ஆறுபடை வீடுகளிலும், 48 வகை வழிபடு நிலையினர்களுக்காக (அண்ட பேரண்டங்களிலிருந்து வந்த சித்தர்கள் அல்லாதவர்கள்) ஆறுபடை வீடுகளிலும், இம்மண்ணுலகத்தார்களுக்காக ஆறுபடை வீடுகளிலும் அருவுருவச் சித்தி நிலையில் மறைந்து நிறைந்து பதினெண் சித்தர் பீடத்தையே பதினெட்டுப் படை வீடுகளால் பாதுகாத்து அருட்பேரரசுக்குரிய ஞான பீடமாக, சத்தி பீடமாக, சிவ பீடமாக, ஆன்ம பீடமாக….. உருவாக்கினான், முருகப் பெருமான்.

    இந்தப் பதினெண் சித்தர் பீடத்திற்கு சந்திரகுலத்துக்குரிய குருகுல நாயகர் கருவூறாரே முதல் பீடாதிபதியாக ‘அனாதிக் கருவூறார்’ அனைவராலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரின் கருவழி வாரிசுகளே நான்கு யுகங்களுக்குள் 48 பீடாதிபதிகளாகத் தோன்றி இந்துமத அருட்பேரரசைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற நியதியும், நீதியும் வகுக்கப் பட்டது.

    இம்மாபெரும் வரலாற்றின் செயல் நிலைகளை நான்காவது யுகமான கலியுகம் பிறந்து 2500 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்குள் புகுந்த பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்ப தங்களுக்குச் சாதகமாகச் சிதைத்து, குறைத்து, மறைத்து, திரித்து தேவையானவற்றைப் புகுத்திப் பொய்யான ஹிந்துமதத்தை உருவாக்கினார்கள். இந்தப் பொய்யான ஹிந்துமதத்திற்குரிய பூசாமொழியாகத் தங்களுடைய மொழியைத் தமிழோடு கலந்து சமசுக்கிருதம் என்ற மொழியைத் தோற்றுவித்துக் கொண்டார்கள். (சம = தமிழுக்குச் சமமாக அல்லது தமிழ் மொழியிலிருந்து சமமான பகுதியை எடுத்து; கிருதம் = செய்யப் பட்டது; அதாவது, வட ஆரியர்கள் தங்களுடைய மொழியைத் தமிழுக்குச் சமமாக உருவாக்குவதற்காக தமிழிலுள்ள எழுத்துக்களையும், சொற்களையும், சொற்றொடர்களையும், இலக்கியங்களையும் பெரிய அளவில் தங்களுடைய பேச்சு வழக்கிலிருந்த வட ஆரிய மொழியோடு கலந்து சமசுக்கிருதம் என்ற புதிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.)

    இப்படிப் புதிதாகத் தோற்றுவித்த மொழியை வளர்ப்பதற்காக இதையே தமிழுக்கும் மூல மொழி, தமிழர்களுடைய இந்துமதத்திற்கும் ஆட்சி மொழி என்ற கருத்தைத் திருட்டுத் தனமாகப் பரப்பினார்கள். அப்பாவியான தமிழர்களில் ஏமாளியாக இருந்தவர்களைக் கருத்துக் குருடர்களாக்கித் தங்களுடைய திருட்டுத் தனமான கருத்துக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டார்கள் பிறாமணர்கள். இதனால், இவர்கள் தமிழினத்தின் இரு கண்களான தமிழ் மொழியையும் மெய்யான இந்துமதத்தையும் இருட்டுத் தன்மைகளும், வறட்டுப் போக்குகளும், மடமைகளும், காட்டு மிராண்டித் தனமான கற்பனைகளும், மூடக் கதைகளும், முடக்கு வாதங்களும், ஒடுக்கு முறைகளும், அடக்கு முறைகளும் உடையவையாகச் செய்து விட்டார்கள். தமிழினம் தன் இரண்டு கண்ணையும் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகி விட்டது.

    இப்படிப் பட்ட நிலையில் தமிழினத்துக்குள் புதிய சில மதங்களும் தமிழர் சமுதாயத்திற்குள் அன்னிய நாகரிகங்களின் மோகங்களும், தமிழகத்திற்குள் (இந்தியாவிற்குள்) அன்னியர்களின் படையெடுப்புக்களும் அரசாங்கங்களும் …. மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டன. அந்த நிலையில்தான் மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்காக மெய்யான இந்துமதத்தின் மூலவர்களான தமிழர்களின் விடுதலைக்காக தமிழ்நாட்டின் அரசியல் ஆட்சி மீட்சிக்காக, உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டு வளவளர்ச்சிக்காகப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் தோன்றிச் செயல்படத் துவங்கினார்கள்.

    அவருடைய செயல்திட்டமெல்லாம் மத வழியாகச் சமுதாயப் புரட்சி செய்து தனிமனித அகப் பண்பாட்டிலும், புற நாகரீகத்திலும் தமிழ் மொழியையும், மெய்யான இந்துமதத்தையும் மறுமலர்ச்சி யடையச் செய்து சமுதாயப் புரட்சியைச் செய்து தமிழர்களின் தனித் தன்மையைப் பாதுகாத்திடுவதே யாகும். அதாவது, தமிழின விடுதலைக்காக காலங்கள் தோறும் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிச் செயல்படுவதுதான் மரபு என்பதற்கேற்பவே இவர் தோன்றினாலும், இவருக்கு முன் வாழ்ந்த ஒன்பது பதினெண் சித்தர் பீடாதிபதிகளுக்கும் ஏற்படாத எதிர்ப்பும், சிக்கலும், தொல்லையும், சிரமமும், பகைமையும் இவருக்கு மட்டும் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியரால் ஏற்பட்டன! ஏற்பட்டன! ஏற்பட்டன!

    எனவேதான், இவர் மெய்யான் இந்துமதத்திற்கு நிலையான பாதுகாப்புக்களையும், வளங்களையும், வலிமைகளையும் ஊற்றுக் கண்ணாக இருந்து வழங்கக் கூடிய ஏட்டுலகச் செல்வங்களை யெல்லாம் மீண்டும் வடிவப் படுத்தி வாழ்வுறச் செய்தார். இதேபோல், நாட்டுலகச் செல்வங்களான அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களையும் கருவறைகளையும் வெட்டவெளிக் கருவறைகளையும் புத்துயிர்ப்புச் செய்து அருளாட்சி அமைப்புப் பணியில் தீவிரம் காட்டினார்.

    ஆனால், சூழ்ச்சித் திறமிக்க பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் பாண்டியன் நெடுஞ்செழியனை வட இமயம் வரை படையெடுத்துச் செல்லச் செய்து தங்களுடைய உறவினர்களான வட ஆரியர்கள் அனைவரையும் போலியாகப் போரில் தோற்கச் செய்து; போர்க் கைதிகளாக மாறி குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாகப் பாண்டியன் படையோடு தமிழகத்துள் வந்து குடியேறச் செய்து விட்டார்கள். அப்படிக் குடியேறியவர்கள் தமிழகம் முழுவதுமுள்ள நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும், குக்கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும் பரந்து விரிந்து ஒவ்வொரு இடத்திற்கும் சிலராகக் குடியேறினார்கள். இதனால் தமிழகம் முழுவதும் இவர்கள் ஒட்டக் கூத்தர்களாக, ஒற்றர்களாக, வேவுகாரர்களாக, அரசாணை அறிவிப்பாளர்களாக, அரசின் அச்சாணிகளாக மாறிவிட்டார்கள். இதனால் தமிழகத்தின் அரசியல் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்களின் சதுரங்க விளையாட்டாக மாறிற்று.

    இதேபோல் இந்தப் பிறாமணர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வகையான சடங்குகளிலும், கோயில் ஊழியங்களிலும் நேரடியாக ஈடுபட்டுப் பணிவோடு சூழ்ச்சியாக வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி வேலை செய்யும் போதே தங்களால் முடிந்த வரை சமசுக்கிருத மொழிச் சொற்களையும், சொற்றொடர்களையும், வேதநெறிக் கருத்துக்களையும், சனாதன தர்மங்களையும், சாத்திறச் சூத்திறங்களையும், பிற இலக்கியங்களையும் அரச மரத்தடியில் கூடுபவர் முதல் அரசனின் அவையில் கூடுபவர் வரை ஏற்றுக் கொள்ளுமாறு செய்திட்டார்கள். இதனால், சமசுக்கிருத இருள் கவிழ்ந்து, தமிழர்கள் இருட்டில் தட்டுத் தடுமாறி நடமாடுவது போல் மத வாழ்வில் தெளிவும் தெம்பும் அறிவும் ஆர்வமும் இல்லாதவர்களாக மாறினார்கள்.

    அதாவது, தமிழர்களுக்காகச் செய்யப் பட்ட பூசைகளிலும் சடங்குகளிலும் அவர்களுக்குப் புரியாத சமசுக்கிருத மொழியில் அனைத்துவகையான பூசை மொழிகளும் ஓதப் பட்டன! சொல்லப் பட்டன! தமிழர்களும் குருட்டுத் தனமாகச் சமசுக்கிருத மொழியின் ஒலிகளைக் கேட்டுத் தலையசைத்து அருட்சத்தி பெற்றதாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.

    ஆனால், எந்தவொரு தமிழனும் 64 திருவிளையாடல்களைச் செய்த சிவபெருமான் பேசிய மொழி தமிழ்மொழி என்பதையும், அருளை அநுபவப் பொருளாகப் பெற்று ஆங்காங்கே மெய்யான இந்துமத மறுமலர்ச்சியை உருவாக்கிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் பத்தி செலுத்திய மொழி தமிழ் மொழிதான் என்பதையும், மெய்யான இந்துமதத்தின் நான்கு யுகங்களிலும் தோன்றிய பத்தியார்களும், சத்தியார்களும், முத்தியார்களும், சித்தியார்களும் செயல்பட்ட மொழி தமிழ்மொழிதான் என்பதையும்…. எண்ணிப் பார்க்க வில்லை! எண்ணிப் பார்க்க வில்லை! எண்ணிப் பார்க்கவே யில்லை!

    அதுவும் கலியுகம் பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தே சிறு சிறு கூட்டமாக இந்தியாவிற்குள் வந்து சேர்ந்த பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்கள் எழுத்தற்ற பேச்சு மொழியும் (ஆரியம் என்பதே எழுத்தற்ற பேச்சு நிலையிலிருந்த வட ஆரிய மொழி) தமிழ் மொழியும் சமமாகச் சேர்ந்து உருவான சமசுக்கிருத மொழியை நான்கு யுகங்களிலும் வாழ்ந்த ஒரு மொழியாக, அப்பாவித் தனமாக, ஏமாளித்தனமாக குழந்தைப் போக்கில் ஏற்றுக் கொண்டிட்ட தமிழர்களை எப்படித் திருத்த முடியும்! எப்படித் திருத்த முடியும்! எப்படித் திருத்த முடியும்! என்ற பெருங்கவலை நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்தும் தீராமல் போய்விட்டது.

    எனவேதான், எமக்கு யாம் தனிமனிதராக உலகெலாம் அலைந்தும் திரிந்தும் பேசியும் எழுதியும் செயல்பட்ட காலத்திலிருந்த நம்பிக்கைகளும், செயல் வெற்றிகளும் மெய்யான இந்துமதத்தின் மூலவர்களான தமிழர்களுக்கென்றே ஓர் அருட்பேரரசை முழுமையாக உருவாக்கிய பிறகு பெற முடியாமல் போய் விட்டது! பெற முடியாமல் போய்விட்டது! பெற முடியாமல் போய்விட்டது! எனவே, யாம் மீண்டும் நிலவறைக்குள் தங்கிச் செயல்படுவதுதான் பயன் தரும் என்று முடிவெடுக்க நேரிட்டது.

    இருந்த போதிலும், உலகம் முழுவதும் அருளாளர்கள் தோன்றி சித்தர் நெறி எனும் அருட்சோலையில் கனிகளும், மலர்களும் தருகின்ற மரம் செடிகொடிகளாகப் பசுமையோடு விளங்கி வருவதைப் பாதுகாப்பதற்காகவாவது அருளுலகத் திருட்டுத் தனங்களையும், குருட்டுத் தனங்களையும், இருட்டுத் தனங்களையும், மலட்டுத் தன்மைகளையும், வறட்டுத் தன்மைகளையும் அகற்றுகின்ற பணிகளைத் துவக்கிச் செல்ல வேண்டிய கடமையைப் பெற்றுள்ளோம் யாம்.

    அதற்காகவே, ஆரிய மாயையில் மயங்கி மெய்யான இந்து மதத்தைக் காக்கும் கடமையில் தவறியவனாக வாழும் அருள்மொழித் தேவனான (முதலாம்) இராசராசனைச் செம்மைப் படுத்துவதற்காகக் கட்டிய தஞ்சைப் பெரியவுடையார் ஆலயம் தோல்வி கண்டு விட்டதால்; அதைவிடப் பெரிய அரிய சீரிய நேரிய உயரிய பயன்மிகு மறுமலர்ச்சிச் சாதனமாக இந்தப்

    ‘பதினெண்சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்’

    என்ற சாதனத்தை உருவாக்கினோம். இதனையே அரசாணைகளாக ஆக்கிப் பிறமண்ணினரான பிறாமணர் எனும் வட ஆரியர்களிடமிருந்தும் அவர்களின் சமசுக்கிருத மொழியிடமிருந்தும் மெய்யான இந்து மதத்தைக் காப்பாற்றியாக வேண்டும்! காப்பாற்றியாக வேண்டும்! காப்பாற்றியாக வேண்டும்! என்று முடிவெடுத்தோம் யாம்.

    ஆனால், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அமராவதி ஆற்றங்கரைக் கருவூறாரின் அருளாணைப்படி செயல்படுத்த மறுத்த வட ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனால் மூன்று சங்கங்களால் காக்கப் பட்டிட்ட தமிழ் இலக்கிய இலக்கணங்கள் நெருப்புக்கு இரையாகின! எண்ணற்ற தமிழ்ப் புலவர்களும் மாணாக்கர்களும் வெட்டப் பட்டார்கள். மதுரை ஆலவாய் மாமூதூர் (பிறாமணர்களின் வெறியாட்டத்தால்) தரை மட்டமாகியது. வட இமயத்துப் பிராகிருத மொழி களப்பிறர்களும், கங்கைக் கரைப் பாலிமொழி பேசும் கலப்பிறர்களும் தமிழ்மொழி காத்து வளர்த்த பாண்டியப் பேரரசை முழுமையாக அழித்து தமிழ்மொழிப் பற்றையும், ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், பற்றையும் குழிதோண்டிப் புதைத்தார்கள்…..

    இப்படி எல்லாம் குருமொழி கேளா மாணாக்கனான வட ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனால் அழிய நேரிட்டிட்ட தமிழ்மொழியின் இலக்கிய இலக்கணங்களும், தமிழின ஒற்றுமைக்கும் தன்னம்பிக்கைக்கும் தன்மானப் பிடிப்பிற்கும் தனித் தன்மைக்கும் போராடும் விடுதலை உணர்வுகளுக்கும் தேவையான அருளை அநுபவப் பொருளாக வழங்கும் அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களும், கருவறைகளும், வெட்டவெளிக் கருவறைகளும், அருளுலகக் காவலர்களான அனைத்து வகையான சித்தர்களும், வழிபடு நிலையினர்களும், அருட்பட்டத்தவர்களும்….. பெருமளவில் கருகி உருத் தெரியாமல் போக நேரிட்டது.

    பிறாமணர்கள் மதுரையை எரித்த தீயில் உருகி ஓடிய பொன்னால் உருவாக்கப்பட்ட மலராகவே சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தோன்றின. இந்த இருபெரும் இலக்கியங்களையும் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ‘நெருப்பில் பூத்த மலர்கள்’ என்றே குறிப்பிடுகிறார். எனவேதான், எம்மால் தஞ்சைப் பெரு நகரம் மதுரை போல் எரிந்து சாம்பலாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதென்பதால் எமது தோல்வியை யாமே ஏற்றுக் கொண்டு நிலவறைக்குள் செல்கிறோம்.

    கரையானும் செல்லுப் பூச்சியும் மெல்லக் காலப் போக்கில் எதையும் அரித்துத் தின்று சிதைத்து அழித்து விடுவது போல் இந்தப் பிறாமணர்கள் அருட்பேரரசை காலப் போக்கில் முழுமையாகச் சாப்பிட்டு விழுங்கி விடுவார்கள். அதற்குப் பிறகுதான் தமிழர்கள் அனாதைகளாக, நாடோடிகளாக, அடிமைகளாகத் துன்புற்று அவலமுற்று தன்னுணர்விழந்து தன்மானம் அழிந்து முழுமையாக வீழ்த்தப் பட்டுத் தாழ்த்தப் படுவார்கள். எனவேதான், எமது அருளாணைகளை அரசாணையாக அறிவிக்க மறுக்கும் அருள்மொழித் தேவனின் அரசை நேரடிப் போரில் சந்திக்கக் கருவூர்த் தேவனுக்கு ஆணையிட்டோம்.

    ஆனால், அரச மகளிர்களும், இராசேந்திரனும், பல்கலைக் கழகத்தார்களும், கருவறை ஊழியர்களும், அறங் கூறவையத்தார்களும்….. மற்றவர்களும் கருவூர்த் தேவன் நேரடிப் போரில் இறங்கினால் ‘மதத்தின் தலைமையால் (அரசியல்) அருட்பேரரசு சிதைந்து சீரழிவுற்றது அல்லது வீழ்ச்சியுற்று தாழ்ச்சி பெற்றது’ என்ற பழிச் சொல் வர நேரிட்டு விடும் என்று கூறியதால் சிந்தித்து நேரடிப் போரைத் தவிர்த்தோம் யாம்.

    இவ்வாறு மதத்துக்கும் அரசுக்கும் எத்தகைய உறவு முறைகளும், உரிமை நிலைகளும் இருக்க வேண்டும் என்பதை வரையறைப் படுத்தும் முயற்சியில் எம்மால் காலதாமதம் ஏற்பட்டதால் மெய்யான இந்துமதத்திற்கென ஏற்பட்ட அருட்பேரரசு பொய்யான ஹிந்து மதத்திற்கு அடிமையாகி விட்டது. எனவேதான், யாம் கருவூர்த் தேவனை அரசோடு போரிடுவதை நிறுத்தி விட்டு மெய்யான இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்காகவும், ஆட்சி மீட்சிக்காகவும் தேவையான இலக்கியப் பணிகளையும் அ.வி.தி. நிலையங்களையும், அ.வி.தி. செயல்திட்டங்களையும், கோயில் திருப்பணிகளையும், 48 வகை அருட்பட்டத்தார்களையும் தயாரிக்கும் பயிற்சிநிலையான கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் முதலியவைகளை இயக்குவதிலும் முழுமையாக ஈடுபடுமாறு கூறிய பிறகே யாம் நிலவறைக்குச் செல்கிறோம்.

    ஆனால், எமது பதினெட்டு அருளாணைகளையும் காலங்கள் தோறும் விளக்கி யுரைத்து தமிழர்களின் வீழ்ச்சி நிலைகளையும், தாழ்ச்சி நிலைகளையும், இகழ்ச்சி நிலைகளையும் மாற்றுகின்ற பணியை வாழையடி வாழையாகத் தொடர்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டே செல்கிறோம் யாம். எம்மால் உருவாக்கப் படுபவர்கள் அனைவருமே இலைமறை காயாகத்தான் தமிழர்களைத் தட்டி எழுப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், தமிழர்களில் கணிசமான அளவினர் தங்களை மறந்து அன்னியர்களின் அடிமைகளாகவும், கூலிகளாகவும், காவலர்களாகவுமே வாழுகிறார்கள். இவர்களே தமிழுக்கு விரோதிகளாகவும், தமிழினத்திற்கு விரோதிகளாகவும், அப்பாவித் தனமாகச் செயல்பட்டிடுகிறார்கள்.

    அதனால், தமிழர்களுக்குள்ளேயே சண்டை சச்சரவுகள் அதிகமாகி எதிர்பாராத வீம்பும், வம்பும், தும்பும், போட்டியும், பொறாமையும் வளர்ந்து அன்னியர்களையே தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், வழித் துணைவர்களாகவும் போற்றிடும் இழிநிலைகளும், அழிநிலைகளும் ஏற்பட்டு விடும். அதனால் தமிழர்களிலேயே கணிசமான பகுதியினர் தமிழ்மொழிப் பற்றுக்கும், தமிழின ஒற்றுமைக்கும், தமிழ்நாட்டுணர்ச்சியின் செழிச்சிக்கும், தமிழரின் தன்மானத்திற்கும், தமிழரின் இனவிடுதலைப் போருக்கும் எதிர்ப்பாளர்களாக, மறுப்பாளர்களாக, பகைவர்களாக மாற நேரிட்டிடும்! மாற நேரிட்டிடும்! மாற நேரிட்டிடும்!

    அதாவது, தமிழர் அல்லாதவர்களின் பகையை விடத் தமிழர்களுக்குள்ளேயே தமிழ்மொழி உணர்வுக்கும், இன உணர்வுக்கும், நாட்டுணர்வுக்கும் எதிர்ப்போ, மறுப்போ, வெறுப்போ, பகையோ ஏற்பட்டு விட்டால் அதைச் சமாளிக்கவே முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது! என்பதை முழுமையாக எண்ணித்தான் யாம் கருவூர்த் தேவனையும் செயல்பட விடாமல் தடுத்து விட்டு நிலவறைக்குள் செல்லுகிறோம். எமது கனவு நனவாவது அடுத்து வரும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியைப் பொறுத்ததேயாகும். அவரும் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க குருதேவராகவே, குருபீடமாகவே மெய்யான இந்துமதத் தலைவராகவே, இந்துமதத் தந்தையாகவே, ஞானாச்சாரியாராகவே, அருட்பணி விரிவாக்கத் திட்டத் தலைவராகவே, அருளாட்சி நாயகமாகவே,…. … செயல்பட்டு அனைத்துத் துறையினர்களையும் முறையான அருளுலகப் பயிற்சிகளையும், தேர்ச்சிகளையும் பெறுமாறு செய்திட்டால்தான் தமிழ்மொழியையும், தமிழினத்தையும், தமிழினத்தின் உயிர்நாடியான மெய்யான இந்துமதத்தையும், உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் காப்பாற்ற முடியும்! காப்பாற்ற முடியும்! காப்பாற்ற முடியும்!

    அதற்காகவே ஒரு செயல்திட்டமாக இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் என்ற சாசனம் பரம்பரை பரம்பரையாகக் குருவாக்கியமாக, குருவாசகமாக, குருவாக்காக வாழுமாறு செய்யப் படுகின்றன.

    தொடர்புடையவை: